அதற்கான காரணங்களை கண்டறிதல், இதைக் குணமாக்குதல் பற்றிய படிப்பு தான் உளவியல் (சைக்காலஜி). சைக்காலஜி துறையானது மனிதனுடைய மனதையும், நடத்தையையும் பற்றி படிக்கும் படிப்பாகும். இந்த துறையில் வல்லவர்கள் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தனிமனிதனின் புலன் உணர்வு, அறிவாற்றல், செயல்திறன், மன
அழுத்தம், ஆளுமை, நடத்தை ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து உரிய தீர்வு அளிக்கின்றனர்.
உளவியல் சார்ந்த அறிவானது அன்றாட வாழ்வில் உள்ள கல்வி, குடும்பம், தொழில் உள்ளிட்டவைகளை பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்கிறது. மேலும் அவற்றால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் காண்கின்றன. இந்த உளவியல் துறையானது மானிட வளர்ச்சி, விளையாட்டு, உடல்நலம், உழைப்பு, ஊடகம், சட்டம் என சில பல பிரிவுகளை கொண்டது. நம்நாட்டில் இத்துறைக்கான வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகமாக <<உள்ளது. இத்துறையில் ஈடுபாடு கொண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது.
தோற்றம்: உளவியல் என்பது கிரேக்க சொல்லிலிருந்து உருவானதாகும். மனதை படிப்பது என்பது அதன் பொருளாகும். 1802 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பியர் கேபானிஸ் எனும் உளவியல் நிபுணர் உயிரியல் தொடர்பான உளவியல் ஆய்வை மேற்கொண்டார். இவரது ஆய்வின் முடிவில் ஒரு உயிரினத்தின் புலனுணர்வு, ஆத்மா ஆகியவை நரம்பு மண்டலத்தின் உடைமைகளாகும் என்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த இயற்பியல் வல்லுனர் வில்ஹெம் உண்ட் உளவியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆய்வுக்கூடம் ஒன்றை அமைத்தார்.
இதன் காரணமாக இவர் உளவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1950 களில் உண்ட், ஜேம்ஸ், எப்பினாஸ் போன்ற ஆராய்ச்சியாளர்கள் உளவியல் தொடர்பான ஆய்வுகளை வரையறுத்தனர்.
துணைப்பிரிவுகள்
உளவியல் பிரிவானது சில துணைப்பிரிவுகளை உள்ளடக்கியது. அவைகளாவன:
*நெறிபிறழ்வான உளவியல் (Abnormal Psychology)
* உயிரியல் உளவியல் (Biological psychology)
* மருத்துவ உளவியல் (Clinical psychology)
*புலனுணர்வு சார்ந்த உளவியல் (Cognitive psychology)
* சமூகம் சார்ந்த உளவியல் (Community Psychology)
* ஒப்பீடு சார்ந்த உளவியல் (Comparative psychology)
* ஆலோசித்தல் தொடர்பான உளவியல் (Counselling psychology)
*நெருக்கடி தொடர்பான உளவியல் (Critical Psychology)
*வளர்ச்சி சார்ந்த உளவியல் (Developmental Psychology)
* கல்வி சார்ந்த உளவியல் (Education Psychology)
* பரிணாம உளவியல் (Evolutionary Psychology)
*நீதிமன்றம் தொடர்பான உளவியல் (Forensic Psychology)
* உலகளாவிய உளவியல் (Global Psychology)
* உடல்நலம் சார்ந்த உளவியல் (Health Psychology)
*தொழில் ரீதியான உளவியல் (Industrial and Organisation Psychology
* சட்டம் சார்ந்த உளவியல் (Legal Psychology)
*ஆளுமை சார்ந்த உளவியல் (Personality Psychology)
மனித மனத்தை ஆராய்வது உளவியல் (Psychology). இதை மேற்கத்திய கல்விப் பின்புலத்துடன் அறிவியல் துறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தவர் நரேந்திரநாத் சென் குப்தா.
வங்க மாநிலத்தின் ஃபரித்பூரில் 1889, டிச. 23-இல் பிறந்தார் நரேந்திர நாத் சென் குப்தா. சுதேசிக் கல்வி எழுச்சியால் கொல்கத்தாவில் உருவான வங்க தேசியக் கல்லூரியில் (இதன் முதல்வராக இருந்தவர்தான் அரவிந்தர்) தனது இடைநிலைக் கல்வியை முடித்த நரேந்திரநாத்துக்கு, இளம் வயதிலேயே அறிவியலை செயல்முறைப் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுவதில் ஆர்வம் மிகுந்திருந்தது. அவரது முறையான உடற்பயிற்சி, வலிமையான உடலையும் திடமான சிந்தனைகளையும் அவருக்கு அளித்தது.
மேற்படிப்புக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு நரேந்திரநாத் சென்றார். 1910 முதல் 1913 வரை அங்கு படித்த அவர் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த கல்வித் தகுதிக்காக, ரிச்சர்டு மானிங் ஹாட்ஜஸ் கல்வி உதவித்தொகை அவருக்கு அளிக்கப்பட்டது. தவிர, பெருமைக்குரிய பை பேட்டா கப்பா சங்கத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஹார்வர்டிலேயே 1914-இல் எம்.ஏ. பட்டம் பெற்ற நரேந்திரநாத், உலகப் புகழ் பெற்ற ஜெர்மானிய அமெரிக்கரான உளவியல் நிபுணர் ஹூகோ மன்ஸ்டெர்பர்க்கின் வழிகாட்டுதலில் உளவியலில் ஆராய்ச்சி செய்தார். அவரது ‘Anti-Intellectualism: A Study in Contemporary Epistemology’ என்ற தலைப்பிலான ஆய்வேட்டுக்காக அவருக்கு 1915-இல் பிஎச்.டி. பட்டம் வழங்கப்பட்டது.
பிறகு நாடு திரும்பிய அவர், 1916-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை விரிவுரையாளராகச் சேர்ந்தார். அதேசமயம் அங்கு புதிதாகத் துவங்கப்பட்ட பரிசோதனை உளவியல் (Experimental Psychology) துறையின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் தத்துவம் பயிற்றுவித்தல், உளவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி ஆகியவை அவரது பணிகளாக இருந்தன. அதே ஆண்டில் கமலாவை அவர் மணம் புரிந்தார்.
அவரது ஆய்வக ஆராய்ச்சியின் அங்கங்களாக, முப்பரிமாண தொலைவு உணர்திறன் (Depth Perception), உளவு உடலியல் (PsychoPhysics), கவனக்கூர்மை (Attention) ஆகியவை இருந்தன.
உளவியலின் அறிவியல் தன்மையை வெகுவாக வலியுறுத்தி வந்த நரேந்திரநாத், 1923-இல் கூடிய இந்திய அறிவியல் காங்கிரஸில் பங்கேற்று, உளவியலை அறிவியலின் ஒரு துறையாக அங்கீகரிக்கச் செய்வதில் வெற்றி பெற்றார். அதில் துவங்கப்பட்ட உளவியல் தனிப்பிரிவுக்கு அவரே தலைவராகப் பொறுப்பேற்றார்.
உளவியலின் வளர்ச்சிக்காக, நரேந்திரநாத்தின் தீவிர முயற்சியால் இந்திய உளவியல் சங்கம் 1924-இல் துவங்கப்பட்டது; அதன் சஞ்சிகையாக, Indian Journal of Psychology-ஐ 1925-இல் துவக்கி, அதன் நிறுவன ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
பரிசோதனை உளவியலில் நிபுணராக இருந்தபோதும், சமூகம் சார்ந்த, இன அடிப்படையிலான, கல்விப் பின்புலம் கொண்ட, குற்றம் தொடர்பான, சமயம் சார்ந்த உளவியல் பிரிவுகள் தொடர்பாகவும் அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
லக்னோ பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பொறுப்பேற்க 1928-இல் கொல்கத்தாவிலிருந்து சென்றார். அங்கு பிரபல சமூகவியலாளரான ராதாகமல் முகர்ஜியுடன் இணைந்து சமூக உளவியல் குறித்த நூலை நரேந்திரநாத் சென் குப்தா எழுதினார். Introduction to Social Psychology: Mind in Society என்ற அந்த நூல், இந்தியாவில் எழுதப்பட்ட சமூக உளவியல் நூல்களில் முதல் நூலாகும். மேற்கத்திய நாடுகளின் அனுபவ ஆதாரங்களின் அடிப்படையிலேயே அந்நூல் எழுதப்பட்டது; அதில் இந்திய அனுபவங்கள் குறைவே என்று நூல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
1929-இல் லக்னெள பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக அவர் நியமிக்கப்பட்டார்; அப்போது, தத்துவவியல் (Philosophy) துறையில் உளவியலை ஒரு பாடமாகச் சேர்க்க முயன்று, அதில் வெற்றி பெற்றார். மேலும் அங்கு பரிசோதனை உளவியல் ஆய்வகத்தை 1940-இல் அமைத்தார்.
அங்கு அவரிடம் பயிற்சி பெற்ற ராஜ்நாராயண், ஹெச்.எஸ்.ஆஸ்தானா போன்ற பலர் தேசிய அளவில் புகழ் பெற்ற உளவியல் நிபுணர்களாக உருவாகினர்.
பின்னாளில் அவரது கவனம், சமயம் சார்ந்த உளவியலில் குவிந்தது. யோக சாதனா குறித்த அவரது ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவை. சமஸ்கிருதம், பாலி மொழிகளில் அவர் பெற்றிருந்த பாண்டித்தியம் அவருக்கு உதவிகரமாக இருந்தது. பாரதத்தின் பண்டைய சமய நூல்களை ஆராய்ந்த அவர், கிறிஸ்தவ மாயாவாதத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார்.
அவர் கடைசியாக எழுதிய உச்ச இன்பத்தின் பின்புலம் (Mechanisms of Ecstasy) என்ற சமய உளவியல் நூல் கைப்பிரதியாக இருந்தது. 1944, ஜூன் 13-இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நரேந்திரநாத் சென் குப்தா காலமானார். அப்போது நேரிட்ட குழப்பத்தில் அந்த நூல் காணாமல் போனது, பெரிய இழப்பாகும்.
உளவியல், தத்துவவியல், கல்வி, மானுடவியல் துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை அளித்தவர் நரேந்திரநாத். அவரது சமூக உளவியல் -ஓர் அறிமுகம் (1928), மனவளர்ச்சியும் மனச்சிதைவும் (1940), மனப்பண்புகளில் பரம்பரைத் தாக்கம் (1942) ஆகியவை முக்கியமான நூல்களாகும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையை 1943-இல் துவக்கிய குணமுதியன் டேவிட் போஸ் (1908- 1965) உடன் சேர்த்து, இந்தியாவில் நவீன உளவியலின் நிறுவனராக நரேந்திரநாத் சென் குப்தா போற்றப்படுகிறார்.