பாராளுமன்றத்தில் என்ன தீர்மானம் எடுப்பது என்பது தொடர்பில் இதுவரை நாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும். ஆனால் நாம் நல்லாட்சி அரசாங்கத்தினால் ஜனாதிபதியினால் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலை தொடர்பில் கேசரி நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி: வெள்ளிக்கிழமை நடந்த இந்த அரசியல் மாற்றத்தை கூட்டமைப்பு எவ்வாறு பார்க்கின்றது?
பதில்: வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக மஹிந்தராஜபக்ஷவை நியமித்தார். ஆனால் அது அரசியலமைப்பின் பிரகாரம் பிழையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்காத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை சரியா என்ற கேள்வி எழுகின்றது. தற்போது ரணில் விக்கிரமசிங்க தனக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவும் பெரும்பான்மை இருப்பதாக கூறியுள்ளார். எப்படியிருப்பினும் தற்போது இதனால் இந்த அரசியல் நெருக்கடி நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.
கேள்வி: கூட்டமைப்பு என்னசெய்யப் போகின்றது?
பதில்: மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையை கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூடவிருக்கின்றது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாங்களும் கூட பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இது தொடர்பில் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கடிதமும் அனுப்பியிருக்கின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இந்த கட்டத்தில் ஒரு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நான் மஹிந்தவுடன் எமது தலைவர் சம்பந்தன் சந்திப்ப நடத்தினார். அதன் போது தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பேசப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான இனப்பிரச்சினை தீர்வு, காணிவிடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, கைதிகள் விடுதலை போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ எமது ஆதரவைக் கோரினார். ஆனால் நாம் எமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றோம். தமிழ் கூட்டமைப்பு மக்களின் நலன்சார்ந்தே முடிவெடுக்கும். எனவே இவற்றின் அடிப்படையிலேயே நாம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற விடயம் அமையும்.
கேள்வி: கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் நடுநிலை வகிப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா?
பதில்: அதுதொடர்பில் இதுவரை நாம் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் சார்பில் எமது தீர்மானங்கள் அமையும்.
கேள்வி நல்லாட்சி அரசில் தீர்வு கிடைக்கும் என நம்பப்பட்டது. தற்போது ஏமாற்றமடைந்திருப்பதாக உணர்கி ன்றீர்களா?
பதில்: ஆம். ஏமாற்றமடைந்திருப்பதாகவே உணர்கின்றோம்.
கேள்வி: அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்குப் போகும்.
பதில்: எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து நாம் சிந்திக்கவில்லை. பாராளுமன்றத்தில் யார் பெரும்பான்மையை நிரூபிக்கின்றார்களோ ஏனைய கட்சி எதிர்க்கட்சியாக மாறும். அந்தக்கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக வருவார். அது எமக்கு ஒரு தீர்க்கமான விடயமல்ல. தற்போதைய இக்கட்டான அரசியல் சூழலில் நாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சிந்திக்கவில்லை.