தமிழ் மக்களுக்கு முற்று முழுதாக; எதிராக செயற்பட்ட ஒருவரை, தமிழ்மக்கள் துரத்தியடித்த ஒருவரை மீண்டும் கொண்டுவந்து ஆட்சிக்கதிரையில் அமர்த்திவிட்டு மகிந்த ராஜபக்ஷ பாடவேண்டிய பல்லவியை ஜனாதிபதி பாடத் தொடங்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான செயற்பாடாகும் என்று தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், மட்டகளப்பு மாவட்ட கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் செய்த அநீதிகாக அந்த மக்களிடத்தில் நாங்கள் மன்னிப்பு கோருகின்றோம் என்றும் பதவிக்காக பணத்துக்காகவும் மக்களை விற்ற ஒருவரை இதுவரை காலமும் எங்களுடன் வைத்திருந்தற்காக மன்னிப்பு கோருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கேள்வி : இலங்கையில் தற்பொழுது நிலவும் அரசியல் சலசலப்பை எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானவை. அவரால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அவர் எடுப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு உரித்து கிடையாது. அதற்கான அதிகாரம் 19 ஆவது திருத்தத்துக்கு முன்னர் இருந்தது. 47(A)என்ற பிரிவில் இருந்தது. ஆனால் 19ஆவது திருத்தத்தில் அது குறிப்பாக நீக்கப்பட்டது. அதாவது A என்ற பிரிவு நீக்கப்பட்டது.
எனவே பிரதமர் ஒருவரை பதவி நீக்குவதற்கோ, புதிய பிரதம மந்திரி ஒருவரை நியமிப்பதற்கோ, அமைச்சரவையை கலைப்பதற்கோ ஜனாதிபதிக்கு தற்பொழுது அதிகாரமில்லாத ஒரு சூழ்நிலையில் , அவர் மேற்படி தீர்மானத்தை எடுத்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது சட்டவிரோதமானது சட்டவலுவற்ற தீர்மானங்களாகும்.
வர்த்தமானியில் பிரசுரிப்பதன் மூலம் அது சட்டரீதியானது என்று எடுத்துக் கொள்ள முடியாது. வர்த்தமானி என்பது வெறுமனே அறிவிப்பு மாத்திரமே. எனவே இந்த அறிவிப்பு சட்டவலுவற்றது என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
கேள்வி: அதிகாரம் இல்லை என்று தெரிந்தும் ஜனாதிபதி இந்த விடயத்தை நகர்த்த துணிந்ததன் பின்னணி எதுவாக இருக்கும் என கருதுகிறீர்கள்?
பதில்: மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக 2015இல் மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். அதில் விசேடமாக தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வாக்குகளைத் தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தார்கள்.
அந்த அடிப்படையில் யாரை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் 2015இல் தங்களுடைய தீர்ப்பை வழங்கியிருந்தார்களோ அந்த மக்களுடைய ஆணைக்கு நேர்முரணாக மக்களால் வெளியேற்றப்பட்டவரை மீண்டும் பதவியில் அமர்த்துகிற ஜனநாயக விரோத, அராஜக செயலாகத்தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
கேள்வி: கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சம்பந்தமாகவோ அல்லது இதர பிரச்சினைகள் சம்பந்தமாகவோ ஏதாவது வாக்குறுதிகள் அளிக்கப்பட்டனவா?
பதில்: வாக்குறுதி என்று எதுவும் அளிக்கப்படவில்லை. தனக்கு ஆதரவு தருமாறு மகிந்த சம்பந்தனிடம் கேட்ட போது, எங்களுடைய மக்களுடைய உரிமைகளும், வாழ்வும் தான் எங்களுக்கு முக்கியமானது என்பதையும் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வு ஒன்று தேவை என்றும் மகிந்த ராஜபக்ஷவிடம் சம்பந்தன் அவர்கள் கூறிய போது, அதனை தான் ஏற்றுக் கொள்கின்றேன், நான் அவற்றை பெற்றுத்தருகிறேன் என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
மகிந்த ராஜபக்ஷவுக்கு 13க்கு மேல் செல்வதற்கான சிந்தனை கிடையாது. 13ஐயும் அவர் அமுல்படுத்தமாட்டார் என்பது தான் எங்களுக்குத் தெரிந்த உண்மை. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் 13ஐ முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவேன் என்று இந்தியாவுக்கு மூன்று தடவைகள் வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் அதனை அவர் செய்திருக்கவில்லை. எனவே இப்பொழுதும் 13ஐ பற்றி பேசுவதென்பது ஏமாற்றும் ஒரு செயற்பாடே. அந்த அடிப்படையில் அவர் சம்பந்தன் அவர்களுக்கு எந்தவிதமான வாக்குறுதியையும் வழங்கவில்லை.
கேள்வி: சமஷ்டித் தீர்வு, வட கிழக்கு இணைப்பு போன்றவற்றுக்கு தான் ஒரு போதும் இணங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். அப்படியென்றால் , கடந்த மூன்றரை வருடங்கள் என்ன நடந்தது?
பதில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2016ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் அடிப்படையில் தான் கடந்த 3 1/2 வருடங்களும் சில முயற்சிகள் நடைபெற்றன. அந்த உரையில் அவர், சமஷ்டி என்ற சொல்லுக்கு தெற்கு பயப்படுகிறது, ஒற்றையாட்சி என்ற சொல்லுக்கு வடக்கு பயப்படுகிறது. எனவே அரசியலமைப்பை பார்த்து மக்கள் அச்சப்படக்கூடாது, நவீன அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேபோல் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் அல்லது இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் இரத்தக்களரி ஏற்பட்டிருக்காது என்றும் அந்த உரையில் அவர் கூறியிருந்தார்.
இந்த பேச்சின் அடிப்படையில் ‘சமஷ்டி’ என்ற பெயர் இல்லாவிட்டாலும் முழுமையான அதிகாரப் பகிர்வுகளுடன் கூடிய அரசியலமைப்புத் தான் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கான வரைவு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வெளிவரவிருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் ஜனாதிபதி சட்டவிரோதமான முறையில் செயற்பட்டிருக்கிறார்.
விசேஷமாக தமிழ் மக்களுக்கு முற்று முழுதாக; எதிராக செயற்பட்ட ஒருவரை, தமிழ்மக்கள் துரத்தியடித்த ஒருவரை மீண்டும் கொண்டுவந்து ஆட்சிக்கதிரையில் அமர்த்திவிட்டு மகிந்த ராஜபக்ஷ பாடவேண்டிய பல்லவியை ஜனாதிபதி பாடத் தொடங்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான செயற்பாடாகும்.
கேள்வி: அப்படியானால் அரசியலமைப்பு பணி தமிழர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்று வரலாறு என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: ஏமாற்றம் என்று நான் கூறமாட்டேன். நாங்கள் இதுவரை காலமும் எவரையும் நம்பவில்லை. இதனை நாங்கள் பல தடவைகள் கூறியிருக்கின்றோம். ஆனால் வருகின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் சந்தர்ப்பம் ஏற்பட்ட பொழுது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினோம்.
முற்று முழுதாக இந்த கருமம் முடிந்துவிட்டது என்றும் நான் கூறமாட்டேன். அந்த முயற்சியின் பலனாக வந்த பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை முன்னெடுப்பதற்கு எதிர்காலத்தில் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
கேள்வி : இலங்கையின் அரசியல் குழப்பம் தொடர்பில் இந்தியாவுடன் பேசி ஒரு முடிவை எடுப்போம் என்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியிருந்தாரே..
பதில்: அவர் அவ்வாறு கூறியிருக்கவில்லை. சர்வதேசத்துடனும் இந்தியாவுடனும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றுதான் கூறியிருந்தார் ஊடகங்கள் தான் இந்தியாவுடன் பேசி முடிவெடுப்போம் என்று தவறுதலாக பிரசுரித்திருந்தன.
கேள்வி: ஐ. நா. வின் பிரதிநிதி மற்றும் சர்வதேச சமூகத்தவருடன் கூட்டமைப்பின் தலைவர் பேசியிருந்தார். அவர்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?
பதில் : சட்டவிரோதமானதொரு செயற்பாடு இடம் பெற்றிருக்கிறது என்பது தான் சர்வதேசத்தினுடைய நிலைப்பாடாக இருக்கிறது. அதன் காரணமாகத் தான் எந்தவொரு நாட்டினுடைய தலைவரும் மகிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரை வாழ்த்து தெரிவிக்க முன்வரவில்லை.
இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் போன்றவை வெளியிட்டிருந்த அறிக்கைகளில் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடந்து கொள்ளுங்கள் என்றுதான் அறிவுரை வழங்கியுள்ளன. அப்படியென்றால் அரசியலமைப்பை ஜனாதிபதி மீறிவிட்டார் என்று தான் அந்த செய்தி கூறுகிறது. அதுதான் அவர்களுடைய நிலைப்பாடு.
கேள்வி: கூட்டமைப்பிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அரசாங்கத்தின் பக்கம் தாவியுள்ளார். இது தொடர்பில்?
பதில் : மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வியாழேந்திரன் நிறுத்தப்பட்டதன் காரணமாக பெருமளவான மக்கள் அவருக்கு வாக்களித்திருந்தார்கள். அந்த மக்களுக்கு அவர் செய்த அநீதிக்காக அந்த மக்களிடத்தில் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.
பதவிக்காக பணத்துக்காக மக்களை விற்ற ஒருவரை நாங்கள் இதுவரை காலமும் வைத்திருந்ததற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். அதுமாத்திரமல்ல வியாழேந்திரன் என்ற நபர் இனி எங்களுடைய பிரதிநிதி அல்ல என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அந்த மக்களிடத்தில் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
கேள்வி : கூட்டமைப்பிலிருந்து வேறு சிலரும் வெளியேறுவார்கள் என்ற செய்தி அடிபடுகின்றதே…?
பதில்: இதுவரை அவ்வாறான தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.