ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி தென்தமிழீழம், மட்டக்களப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“ஜனாதிபதியே ஜனநாயகத்தினை காப்பாற்று” என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் மக்களின் ஜனநாயக கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் இங்கு கேஷங்கள் எழுப்பப்பட்டதுடன், சிறுபான்மை சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கையினை கருத்தில்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவுசெய்த நிலையில் அந்த கோரிக்கையினை புறந்தள்ளி ஜனாதிபதி இன்று செயற்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், முகாமையாளர்கள்,மாநகர,பிரதேசசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மைத்திரியே சீனிக்கும் டீசலுக்கும் வாக்களிக்கவில்லை, தீர்வுத்திட்டமே தேவை, மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சி எமக்கு வேண்டாம், 30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் இனியும் வேண்டாம், பாராளுமன்றத்தினை உடன் கூட்டு சர்வாதிகாரத்தினை நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.