மெல்லென மழையும் பெய்தால்
சிரித்திட முடியும் எம்மால்
நெல்லுக்கு பெய்யுது என்று
நெகிழ்வுடன் இருந்திடுவோம்
உங்களை போல எங்கள்
பிள்ளைகள் வெளியில் இல்லை
உரிமைக்காய் விழியை மூடி
உணர்வுடன் மண்ணுக்குள்ளே
ஈழத்து அரசு அன்று இயங்கி
நின்ற வேளை தன்னில்
காலத்து தேவைகளை
கச்சிதமாய் கவனித்தார்
மழை வெள்ளம் உள்புகுந்து
இடங்களை மாற்றுதல் போல்
பகை வெள்ளம் உட்புகுந்து
பலர் வாழ்வை மாற்றியது
சிலருக்கு பணத்தாசை
சிலருக்கு மண்ணாசை
சிலருக்கு பொன்னாசை
சிலருக்கு பெண்ணாசை
எதுவுமே இல்லை எம்மில்
உயிர் வாழும் காலத்தில்
உணர்வுடன் வாழ எண்ணி
ஒரு பிள்ளை இருந்தாலும்
களம் காண அனுப்பி இன்று
கவலைக்குள் கருகி நிற்கும்
கந்தையா கண்ணம்மா கனகப்பு
எல்லாமே தேசத்தின் கண்கள்
எனும் கருப்பொருளைக் கவனியுங்கள்
– கவிப்புயல் சரண்.