மோனமாய்க் கிடக்கிறது
முள்ளிவாய்க்கால் மணல்மேடு
இந்த மோனம்தான்
இனச்சுத்திகரிப் பொன்றின்
கனத்த நாட்களின் ஒப்பாரியை
இதயத்தின் வாயிலாகக்
காதுகளுக்கு கொண்டு செல்கிறது
இந்த மோனம்தான்
பதுங்கு குழிகளுக்குள்ளேயே
மரித்துப்போன எங்கள்
சகோதரர்களின் ஆன்மாக்கள்
அந்தரித்துக் கொண்டிருக்கும்
அவலத்தைக் கூறி நிற்கிறது
இந்த மோனம்தான்
காயம்பட்ட எம்மினத்தின்
காயங்களில் வடிந்து கொண்டிருக்கும்
ஊனத்தின் நாற்றத்தை
உலகுக்குச் சொல்கிறது
இந்த மோனம்தான்
நரிகளின் கடைவாய்களில்
வழிந்து கொண்டிருக்கும் குருதியில்
எம்மினத்தின் அடையாளம்
கரைந்து கொண்டிருப்பதை
காட்டியபடி நிற்கிறது
ஆம் இந்த மோனம்தான்
அடையாளம் தெரியாமல்
எம்மினம் துடைக்கப் படுவதற்கான
பெருமுயற்சியை உலகுக்கு
வெளிச்சம் பாச்சி நிற்கிறது.
– செ. டிலக்ஷனா.