லிங்கம் 16 – 12 – 1960 இல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். 12 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கும்போதே இயக்கத்தின் உதவியாளனாகச் செயற்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்த சுவரொட்டிகளை ஒட்டுதல் விடுதலை சுலோகங்களை சுவர்களில் எழுதுதல் போன்ற வேலைகளை ஆர்வத்துடன் செய்தார். 1981 ஆம் ஆண்டில் முழுநேர உறுப்பினரான லிங்கம் யாழ்ப்பாணம் சனசமூகநிலையத்தில் உடற்பயிற்சிகளை பெற்றார். சிறந்த போர்வீரனாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் கராத்தே கலை பயின்று பிறவுண் பட்டிக்குத் தகுதிபெற்றார். 1982 – 83 ஆண்டுகளில் வன்னிக்காடுகளில் தனது இராணுவப்பயிற்சிகளை நிறைவுசெய்தார். குறிதவறாது சுடுவதில் திறமையைக்காட்டிய லிங்கம் 300 யார் துாரத்தில் பறந்துகொண்டிருந்த பருந்தை AK சுரிகுழல் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தியமை அவரது திறமைக்கு சான்றாகும்.
பல தாக்குதல்களில் முன்னின்று பங்கேற்ற லிங்கம், திருநெல்வேலியில் 1983 இல் நடாத்தபட்ட கண்ணிவெடித்தாக்குதலில் 13 சிறிலங்கா இராணுவத்தினரை கொன்றழித்த தாக்குதல் லிங்கம் பங்குகொண்ட குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.
பின்னர் பழநெடுமாறன் அவர்கள் தாயகம் வருகைதந்தபோதும் பிரெஞ்சு பத்திரிகையாளர் குழுவொன்று வருகைதந்தபோதும் அவர்களுக்கான பயணப்பொறுப்புகளை லிங்கமே பார்த்துக்கொண்டார்.
மேஜர் பசீரும் லெப்ரினன்ற் முரளியும் மாற்றுஇயக்கத்தினரால் வேண்டுமென்றே கைதுசெய்யப்பட்டபோது அவ்வியக்கத்தின் தலைமையோடு கதைத்து அவ்விருவரை மீட்டுவருவதற்காக ஆயுதங்கள் அற்று சமாதான துாதுவனாக சென்றான் லிங்கம். மக்களின் விடுதலைக்காக குரல்கொடுத்து பயணித்த கப்டன் லிங்கம் கண்களில் சுடப்பட்டு வீரமரணமடைந்தான்.
(விடுதலைப்புலிகள் ஏடு – ஜீலை 1986)
*********************
மேஜர் கணேஸ் – தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மேனி சிலிர்க்கவைக்கும் அத்தியாயம். மூதுார் – ஆறுகளால் துண்டு துண்டாகி புவிஇயல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு – கொலைவெறிச் சிங்களத்தின் குடியேற்றப்பகுதி – அங்கேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வித்திட்டு வளர்த்தான் கணேஸ்.
இருபது வயதில் இயக்கத்தில் இணைந்துகொண்டவன். தன்னோடு ஒன்றாய் படித்த காலத்திலும் அதன் பின்னர் இயக்கத்தில் இருந்த நாட்களில் ஆசிர் சீலனோடு சேர்ந்து வளர்த்துக்கொண்ட விடுதலை உணர்வுகள் ஆழப்பதிந்திருந்தன.
மீசாலை முற்றுகையில் – தளபதி சீலன் மரணித்த நிகழ்ச்சி – கணேஸ் நெஞ்சில் மின்னலின் கொடிய வீச்சாயிற்று. தன்னினிய பள்ளிக்கூட நண்பனின் “பெரிய சாவை” அவன் என்றும் மறந்ததில்லை.
தமிழீழத்தின் வடக்கெல்லைக்கிராமங்களில் ஒன்றான காரைநகர் தொடக்கம் தெற்கெல்லைக்கிராமங்களில் ஒன்றான திருக்கோயில் வரை களங்கள் பார்த்த கணேஸ் தமிழீழம் முழுமையும் தன்னிருகால்களால் அளந்தான்.
யாழ்ப்பாணம் – மன்னார் – வவுனியா – திருக்கோணமலை – மட்டக்களப்பு என நீண்டுகிடந்த தமிழீழத்தை எத்தனை ஆறுகள் – உப்பேரிகள் – கடல்நீர் ஓடைகள் இடைநின்று பிரித்தாலும் ”ஒற்றைப்பாலமாய்” அத்தனை இடைவெளிகளையும் நிரப்பித் தமிழீழத்தை இணைத்துநின்ற அவன் செயல் – வடக்குக்கும் கிழக்குக்கும் வேலி போடநினைப்போருக்கு வரலாறு கொடுத்த சரியான அடியாகும்.
கந்தளாய் என்னும் கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த கணேஸ் – ஆடம்பரம் இல்லாதவனாய் – எளிமையானவனாகவே கடைசிவரை வாழ்ந்தான். புலிகள் அவனை விரும்பினார்கள் என்று சொல்வதைவிட அவனைப்போல இருக்கவிரும்பினார்கள் என்பதே பொருத்தமானது. தமிழ் – முஸ்லிம் மக்களிடையே உறவுப்பாலமாய் இருந்த கணேஸ் 05 – 11 – 86 அன்று திருக்கோணமலை மாவட்டத்தில் பெரியபாலம் என்ற இடத்தில் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரமணடைகின்றான்.
(விடுதலைப்புலிகள் ஏடு – பிப்ரவரி 1987)
*************************
ஒருவர் அல்லது இருவர் போராளியாக இருக்கின்ற குடும்பங்களை நாம் பார்க்கின்றோம். எம்தேசத்தின் எல்லா இடங்களிலும் இவ்வாறான குடும்பங்களை நாம் பார்க்கமுடியும். ஆனால் அனல்களை ஈன்ற அன்னையாக தனது மூன்று புதல்வர்களை விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்த தாய். ஆம் 2வது லெப் பீரிஸ் (மனுவல் ஞானப்பிரகாசம் வீரமரணம் 01 – 02 – 1985) இழந்தபின்னர் லெப். பீற்றர் (மனுவல் யோகராஜா வீரமரணம் 10 – 10 – 1988) தானும் இயக்கத்தில் இணைய விரும்பினான். ”நீ இப்போதும் போராளிதான். நீ எங்களோடு நின்று வேலைகளை செய்” என்றனர் தோழர்கள். அவன் விடுவதாயில்லை. அப்போதைய மன்னார் தளபதி விக்ரர் அவனுக்கு ஏகே 47 துப்பாக்கியை கொடுத்தார்.
அவன் அதைவைத்தே பயிற்சிகள் எடுத்தான். இப்படித்தான் ஒரு காலைநேரம் பரப்புக்கடந்தானை நோக்கி ஜீப்புகளிலும் ட்ரக்குகளிலும் இராணுவத்தினர் வந்துகொண்டிருந்தனர். பீற்றர் தனியாக நின்றான். உதவிக்கு எவரும் இல்லை. அவன் செயற்படவேண்டும். தவறினால் எங்கள் நிலைகளுக்குள் இராணுவத்தினர் வந்துவிடுவார்கள். எம்மில் சிலரை இழக்கவேண்டிவரும்.
ஓடிச்சென்றான். மரம் ஒன்றின் மறைவில் நிலையெடுத்தான். முதலாவது இராணுவ ட்ரக்வண்டி வரும்வரை காத்திருந்தான். அவனது துப்பாக்கி இயங்கியது. நுாற்றுக்கணக்கான எதிரிகள் தனித்த ஒரு பீற்றருடன்… சிறிதுநேரத்தில் அவனது தோழர்கள் வந்தனர். அதன்பின்னர் இராணுவத்தினர் பின்வாங்கிவிட்டார்கள். இதன்பின்னர் பீற்றர் பயிற்சிக்குமுகாமிற்கு சென்றான. இந்தவேளையில் அவனது அண்ணனான 2வது லெப் இராசதுரை (மனுவல் அந்தோனிதாசன் வீரமரணம் 10 – 10 – 1988) உம் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.
பீற்றர் எப்போதுமே தாக்குதலின் முன்னனிக்களங்களில் நிற்பதால் அவனது அண்ணனை எப்போது பின்தள வேலைகளையே இயக்கம் வழங்கியது. எனினும் பீற்றர் தவறுதலான வெடிவிபத்தில் காயமடைந்தபொழுது அவனை இன்னொரு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவேண்டியிருந்தது.
இந்தியப்படையினர் காடுகள் எங்கும் உறைந்திருந்த நேரம். ஆனாலும் இவனை மருத்துவசிகிச்சைக்காக கொண்டுசெல்லவேண்டியிருந்தது. ட்ரக்கர் வண்டியில் ஒருவாறு ஏற்றி காட்டுப்பாதைகளுக்கால் சென்றுகொண்ருந்தபோது வெடிச்சத்தங்கள்.
எல்லாமாக பதினொரு தோழர்களை அன்று இழந்திருந்தோம். அதில் பீற்றரும் இராசதுரையும்.
(விடுதலைப்புலிகள் ஏடு – கார்த்திகை 1992)
**************************
சிவகுமாரின் சுபாவம் இப்படித்தான் அமைந்திருந்தது. அயலில் உள்ளவர்கள் யாராவது ”தம்பி ஒருக்கா கடைக்கு போயிட்டு வாறியே?” – ”ஓம்” காசையும் பையையும் வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிடுவான். தெருவில் யாராவது ஒருவர் விபத்தில் சிக்கினாலோ யாரும் விழுந்து கிடந்தாலோ அந்த இடத்தில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்கையளிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அவர்களைக் கொண்டுபோய் வீட்டில் ஒப்படைப்பது வரை தானே நின்று செய்தால் தான் இவனுக்கு திருப்தி.
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் இந்தப்புவை புயலாக்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொள்ளமுயற்சித்தான். எனினும் உள்வாங்குவதில் சலிக்கவைக்கும் தாமதம். தரப்படும் வேலைகளோ யானைப்பசிக்கு சோளப்பொரி போல. ”எங்களாலும் நிறைய சாதிக்கமுடியும். அதுவும் இப்போதே”. தீர்மானித்துவிட்டார்கள். எங்கெங்கோ திரிந்து டைனமைற்றுக்கு திரி வைத்து குண்டுகள் செய்வது முதல் மேலும் பல விசயங்களை தெரிந்துகொண்டார்கள்.
1984 ஆம் ஆண்டு – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வெடிப்பொருள்களுக்கு பாதுகாப்பாக சென்றுகொண்டிருந்தனர் காவலர்கள். அவர்களிடம் 4 றிப்பீற்றர் துப்பாக்கிகள் இருந்தன.
அவற்றையும் வெடிப்பொருட்களை வெடிக்கவைக்கும் கருவிகளையும் கைப்பற்றுவதற்கு சிவகுமாரும் நண்பர்களும் காத்திருந்தனர்.
இவர்களிடமிருந்ததோ ஒரேயொரு வேட்டைத்துப்பாக்கி. ஜீப் மறிக்கப்பட்டது. கைக்குண்டுடன் சிவகுமார் – ஒருவன் துப்பாக்கியுடன் – மற்றவர்கள் பின்னால். நான்கு காவலர்களும் கைகளை துாக்கிவிட்டனர். நான்கு றிப்பீற்றர்களையும் வெடிக்கவைக்கும் எக்ஸ்புளோரையும் எடுத்துக்கொண்டு அந்த ஜீப்பிலேயே திரும்பிவிட்டனர்.
இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் இயக்க கட்டுப்பாட்டை மீறீச் சுயமாக நடந்துள்ளார்கள். தவறுதான். இவர்களை நெறிப்படுத்த முடியும். அப்படித்தான் தீர்மானித்தார் அப்போதைய யாழ் மாவட்ட தளபதியான கேணல் கிட்டு.
அதனைத்தொடர்ந்த நாட்களில் இன்னும் வெடிப்பொருட்களுடன் ”விளையாட்டுக்காட்ட” அது இவனை கடுமையாக காயப்படுத்தியது. மருத்துவத்திற்காக தமிழ்நாடு அனுப்பப்பட்டான். அங்குதான் முழுமையான போராளியாக அபயன் என பெயர் எடுத்தான். மருத்துவத்திற்காக அங்கு சென்றவன் பிறருக்கு மருத்துவம் அளிக்கக்கூடியவனாக தாயகம் திரும்பினான்.
1987 ஆம் ஆண்டில் கால் பதித்து 1992 இல் மேஜர் அபயன் (கிருஸ்ணமூர்த்தி சிவகுமார் வீரமரணம் 01 – 12 – 1992) ஆக வீரச்சாவு அடையும் வரை அந்த மண்ணிலேயே பணி புரிந்தான். ஒரு வைத்தியனாக – ஒரு தாதியாக – ஒரு போர் வீரனாக – குழுத்தலைவனாக இவனது வாழ்வு தொடர்ந்தது. முகாமில் போராளிகளுக்கு தேவையான எல்லா உணவுகளையும் தேடிக்கொடுப்பான். தான் மட்டும் மரக்கறி உண்பான். கேட்டால் ”எனக்கு அதில விருப்பமில்லை” என்பான். ஆனால் வீரச்சாவெய்திய பின்னர்தான் அவன் ஒரு பிராமணப்பையன் என்பது அனைவருக்கு தெரிந்திருந்தது.
(விடுதலைப்புலிகள் ஏடு – மார்கழி 1992)
…………………
காந்தள் மலர் 2014