“தமிழீழ விடுதலை அமைப்புகளும் தமிழர் பெற்ற மாற்றங்களும்”
தமிழீழ விடுதலை அமைப்புகள் மூலம் தமிழ்மக்கள் பெற்றுக்கொண்ட மாற்றங்களை கணக்கிடல் என்பது சாதாரண ஒரு செய்தியாக பார்க்க முடியாது. இதிலும் பெற்ற மாற்றங்கள் என்று குறிப்பிடக்காரணம் அவை நன்மையளித்திருக்கலாம் இல்லை தீமைகளையும் தந்திருக்கலாம் அதேவேளை தமிழீழ மக்களின் விடுதலையைப்பற்றி சிந்திக்கின்றோமோ இல்லையோ போராட்டக்குழுக்களின் பெயர்களை பயன்படுத்தி இன்றும் பலர் காலத்தை நகர்த்துகின்றனர். எனவே இன்னும் தொடர்கின்றது. விடுதலைக்கு போராடிய ஒரு இனம், பலமிழந்து, அடுத்தகட்டத்துக்கு தம்மை கடத்திச்செல்ல புதிய வழிகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் நேரத்திலும் அதனை குழப்பும் விதமாக ஒருதலைப்பட்சமான எழுத்துகள், மக்களின் வாழ்வியல் தொடர்பான புரிதலின்றிய செய்திகள், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களின் நன்மை தீமைகள் தொடர்பான சுய மதிப்பிடல் இன்றிய பதிவுகள் எங்களிடம் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் எங்களின் தமிழர்களால் செய்யப்படும் ஒன்றாகவே இருக்கின்றது. இதனை அரசியல் செய்பவர்கள், செய்திகள் எழுதுவோர், புத்தகங்கள் வெளியிடுவோர் மற்றும் இணையத்தளங்களில் எழுதுவோர் என்று எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ செய்தபடி இருக்கின்றனர். தமிழீழ விடுதலை போராட்டம் தொடர்பாக உண்மையான சரியான புரிதல்களை மக்களுக்கு வழங்கிய வர்களிலும் இலங்கை அரசுக்கு அல்லது இராணுவத்துக்கு சாதகமான கருத்துடன் பலர் இருக்க தவறவில்லை. சிறிய உதாரணம் சொல்கின்றேன்.
ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் பின்பு விடுதலை இயக்கங்களின் வரவானது காவல்துறை, இராணுவம் என்பவற்றின் மீதான தாக்குதல்களை அதிகரித்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் காவல்துறை மெதுவாக தங்கள் செயற்பாடுகளை குறைக்க அல்லது தவிர்க்க ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்லலாம். இதேவேளை இராணுவ தரப்பு தங்கள் செயற்பாடுகளை அதிகரிக்க தொடங்கிவிட்டது. உண்மையில் இராணுவம் என்பது எல்லையை காக்க வேண்டுமே தவிர, சொந்த நாட்டுக்குள் புகுந்து, தனது மக்கள் மீது படை நடவடிக்கை செய்யக்கூடாது. தன் நாட்டு மக்களை அரசும் சரி, இராணுவமும் சரி பாதுகாக்க வேண்டுமே தவிர, தாக்கியழிக்கவோ அல்லது அவர்களது அன்றாட வாழ்வியலை குழப்பவோ கூடாது. அதேவேளை இராணுவத்தினுள் பல பிரிவுகளுமுண்டு. அப்பிரிவுகளில் சண்டைக்களங்களில் முன்வரிசையில் தாக்குதல்களை நிகழ்த்தும் குழு, தாக்குதல் செய்து முன்னே நகரும் இராணுவத்தை தொடர்ந்து அவர்கள் கைப்பற்றும் இடங்களை பிடித்து தக்க வைக்கும் குழு, அதன்பின் கைப்பற்றிய இடங்களை பாதுகாக்கும் குழு என்று குழுக்களும், குழுக்களின் நடவடிக்கைகளும் வேறுபடும். இதில் ஊர்மனைக்குள் தங்கும் இராணுவத்தை பொறுத்தவரையில், அந்த இராணுவத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமெனின் அந்த இடங்களில் இந்த இராணுவம் தங்கியிருக்காது. அதாவது அச்சுறுத்தல் உள்ள இடங்களில் இராணுவம் தங்கமறுக்கும். இலங்கையை பொறுத்தவரையில் இராணுவம் வடக்கு கிழக்கில் குடிமனைகளுக்குள் புகுந்து மக்கள் மீது தாக்குதல்களை நடாத்தும். இவ்வாறு தாக்குதலுக்காக வருகின்ற அல்லது கண்காணிப்பில் ஈடுபடுகின்ற இராணுவம் விடுதலை அமைப்புகளின் தாக்குதலுக்கு உள்ளாகுவதும் உண்டு.
உண்மையில் ஊர்மனைகளுக்குள் புகும் இந்த இராணுவம் பலமான இராணுவம் அல்ல. தாக்குதலை கண்டால் சிதறி ஓடும் இராணுவம். ஆனால் அதே இராணுவம் தாங்கள் நிற்கும் இடத்தில் பாதுகாப்பு உள்ளது. எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றால், தங்கள் தாக்குதல்களை ஆரம்பிக்கும். தங்கள் ஆயுதபலத்தினை பயன்படுத்தி தாங்கள் விரும்பியபடி மக்களை அடித்தல், வீடுகளை உடைத்தல், வீடுகளை கொளுத்துதல், மக்களை சுடுதல் போன்ற எல்லா தாக்குதல்களையும் செய்யும். ஆனாலும் எங்களில் பலர் அதனை நியாயப்படுத்துவார்கள். விடுதலை அமைப்புகள் கொரில்லா யுத்தமுறையை கைக்கொள்கின்றனர். இதனால் இராணுவம் அவர்களை கண்டறிய முடியாமையால் மக்களை தாக்குகின்றது. இது இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தமுடியாத ஒன்று. காரணம் இராணுவத்தை தாக்குபவர்களை சரியாக இனம் காணமுடியாத நிலையில் இராணுவம் மக்களை தாக்குகின்றது. எவ்வளவு புத்திசாலித்தனமாக இராணுவத்துக்கு பக்கபலமாக கருத்து சொல்கின்றார்கள் என்று யோசிக்கவேண்டிய தருணம் இதுதான். தங்களை தாக்குபவர்களை இனம் காண முடியாது என்று ஆயுதமற்ற பொதுமக்களை தாக்குவது இராணுவத்தின் சரியான செயலுமல்ல, அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனால் அப்போதும் இராணுவம் சரி, விடுதலை அமைப்புகள்தான் தவறானது, இவர்கள் தாக்காவிட்டால் இராணுவம் எதையும் செய்யாது என்று பேசுவார்கள். இவை எல்லாம் அன்றுடன் முடிந்துவிடவில்லை, இது போன்ற அரசுக்கு அல்லது இராணுவத்துக்கு சாதகமான கருத்துகள் சொல்வது இன்றும் தொடரும் எங்கள் பரிதாபநிலை.
இனி விடுதலை அமைப்புகள் தொடர்பாக எண்ணுவோம். விடுதலை அமைப்புகளை பொறுத்தவரை அவை பலமுள்ளவையாக தோன்றினவோ இல்லையோ பல்கிப்பெரிகின. ஏறத்தாழ முப்பத்து மூன்று விடுதலை அமைப்புகளுக்கு மேல் பட்டியலிடப்பட்டன. உண்மையில் இது அன்றே ஆரம்பித்துவிட்ட விடுதலை போராட்ட சிதைப்பு நடவடிக்கை என்றே சொல்லமுடியும். காரணம் ஒரே வலுவான அமைப்பு என்றால் அந்த அமைப்பு தெளிவான சரியான பாதையில் சென்று இலக்கினை அடையும் வாய்ப்பு உண்டு. எனவே இதனை குழப்பும் நடவடிக்கையாக பல்வேறு இயக்கங்கள் தோன்றின என்றே சொல்லமுடியும். இந்தியாதான் ஈழ தமிழ் மக்கள் வாழ, அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அமைப்புகளுக்கு பயிற்சி கொடுத்து போராட்டத்துக்கு வித்திட்டது என்றால், ஏன் ஒரு இயக்கத்தை மட்டும் உருவாக்கி, அவர்களுக்கு மட்டும் பயிற்சி கொடுத்து, உறுதியுள்ளவர்களாக மாற்றி அனுப்பவில்லை. அநேகமாக வலுவான என்று சொல்லப்பட்ட எல்லா இயக்கங்களும் இந்தியாவினை அடித்தளமாக கொண்டுதான் வளர்ந்தது எனின் ஏன் இயக்கங்கள் பல்கிப்பெருகும் நிலை வந்தது. இன்று இயக்கங்கள் தொடர்பாக கதைகதையாக சொல்பவர்கள், அன்று நாம் எல்லோரும் ஒரே நோக்கில் செல்பவர்கள் ஏன் வேறுபட்டு நிற்கவேண்டும் என்ற கேள்விகளை எழுப்பவில்லை.
விடுதலை அமைப்பு தொடர்பாக பலருக்கு தெரிந்த உண்மைகள் உண்டு. அதேவேளை தெரியாத உண்மைகளும் உண்டு. பல கட்டுக்கதைகளும் உண்டு. போராடவென இயக்கம் ஒன்றை உருவாக்கி அதற்காக ஈழ மண்ணில் இருந்து பிள்ளைகளை அழைத்துச் சென்று, உணவுகூட கொடுக்க முடியாத பரிதாபநிலைக்கு உள்ளாக்கி, இறந்த பிள்ளைகளும் உண்டு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகிய இயக்கங்களால் மீட்கப்பட்டு அந்த இயக்கங்களில் இணைக்கப்பட்டவர்களும் உண்டு. மீண்டும் நாட்டில் கொண்டுவந்து விடப்பட்டவர்களும் உண்டு. அப்படியான செயல்களை செய்தவர்கள் இன்றும் உள்ளார்கள். இவ்வாறு இன்னும் பல சொல்லமுடியும். இக்கதைகளை நான் எழுதுவதற்கு காரணம் இந்தியாதான் எங்களை வாழவைக்கும் என்று சொல்வோர், உண்மையாக சொல்கின்றார்களா?. இவை தெரிந்துதான் சொல்கின்றார்களா அல்லது எங்களை முட்டாள்கள் ஆக்குகின்றார்களா?. இன்னுமொரு செய்தியையும் சொல்ல விரும்புகின்றேன். இது நான் வானொலியில் கேட்டது. காலம் திகதி சரியாக சொல்லமுடியவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் பெயரையும் மறந்துவிட்டேன். உண்மையில் தமிழீழ விடுதலைப்போராட்டம் தமிழ் மக்களுக்கு விடிவு தேட ஆரம்பித்தது என்று சொன்னாலும், காலப்போக்கில் அது ஒருவரை ஒருவர் இழிவு பேசுதல், பழித்தல், சொல்லிச்சிரித்தல், காட்டிக்கொடுத்தல் என்ற நகைச்சுவை நிலைக்கும் ஆளானது. அதேபோன்று வானொலியிலும் செய்திகள் சொல்லப்பட்டது. அப்படியான ஒரு நிகழ்ச்சியில் கேட்டது. அது கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் நிகழ்வு. அன்றைய நாள்களில் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவில் சென்று அன்றைய முக்கிய உறுப்பினர்கள் யாரையோ சந்திக்கின்றார்கள். அப்படிச்சந்திக்கும்போது பேசப்பட்டதாக ஒருவர் மற்றவர்க்கு சொல்வார். “இலங்கையும் இந்தியாவும் கிறிக்கற் விளையாடினால் நாங்கள் இந்தியாவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவம்” என்று சிவசிதம்பரம் கூறியதாக பெரிய ஆளை சந்தித்து சின்னப்பிள்ளை கதை பேசியதாக சொல்லி சிரித்தார்கள். உண்மையில் தமிழர்களின் நிலை இதுதான். எதையும் புரியாமல் எல்லோரையும் நம்பிக்கொண்டிருப்பது.
மக்கள் அரசின் நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்து தவித்த வேளையில் இயக்கங்கள் மக்கள் மத்தியில் நடமாட ஆரம்பித்தன. தனித்தனியாக ஒவ்வொரு இயக்கமாக நான் விபரிக்கபோவதில்லை. சில செய்திகளை மட்டும் சொல்லி நகர விரும்புகின்றேன். இயக்கங்களின் வரவு காவல் துறையின் கட்டுப்பாடற்ற செயல்களை கட்டுப்படுத்தியதால் மக்கள் தமிழீழ இயக்கங்களை ஆதரிக்க தலைப்பட்டனர். உதாரணமாக சொல்வதானால் அன்றைய காலத்தில் காவல்துறைக்கான காக்கி காற்சட்டையும், வெண்ணிற உள் பெனியனையும் மட்டும் போட்டபடி, ஈருளியில் வரும் காவல் துறைக்கே மக்கள் பயந்து நடுங்குவர். அவர் கடமையில் இல்லாதிருந்தாலும், வீதியிலோ அல்லது தாம் நிற்கும் இடத்திலோ அதிகாரம் செய்யும் வலு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் சொல்வதை வேதவாக்காக எடுக்கவேண்டும் இல்லாவிடில் தனியாக ஒருவர் அல்லது கூட்டாக பலர் வந்து அடி, உதை, என்பவை மட்டுமன்றி காவல் நிலையம் வரை கூட்டிச்சென்று அங்குள்ளவர்கள் எல்லோரும் அடிப்பார்கள். இது வெறும் கதை அல்ல, நானும் அனுபவித்திருக்கின்றேன். அதேவேளை உள்ளே செல்வாக்கிருந்தால் இராச மதிப்பும் கிடைக்கும். காவல்துறை என்னும் போது சிங்களவர்கள்தான் காரணம் என்று சொல்லமுடியாது. தமிழ் காவல்துறையினர் தான் அதிகமான பாதிப்புகளை மக்களுக்கு செய்வார்கள். காவல்துறையிடம் பட்ட துன்பம் தொடர்பாக தெளிவான செய்திகளையும், செல்வாக்கு உள்ளவர்கள் பெறக்கூடிய நன்மைகளையும் அகாலம் நூலில் புஷ்பராணி அவர்கள் எழுதி உள்ளார்.
அடுத்து அன்றைய சண்டியர்கள். சண்டியர்கள் தொடர்பான பெயர்கள் எதையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. காரணம் அவர்கள் வரலாற்று நாயகர்கள் அல்ல. மக்களை வருத்திய மனசாட்சி இல்லாத மனிதர்கள். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ்நகர், அத்தியடி, ஆனைக்கோட்டை, சுண்ணாகம், கீரிமலை, சங்கானை, இப்படியே மறுவளமாக பரந்தன், கிளிநொச்சி என்று எல்லா இடமும் அவர்களின் பெருக்கம். இன்னும் பல ஊர்சண்டியர்கள் இருந்தனர். அவர்களை எதிர்த்து பேசமுடியாது. அவர்களுக்கு பயந்துதான் வாழவேண்டும். காவல்துறைக்கு அவர்கள் செல்லப்பிள்ளைகள். அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு போனால் மீண்டும் அடிவேண்டும் நபராக போனவர்தான் அமைவார். எனவே அவர்களை எதுவும் செய்யமுடியாது. இந்நிலையில் இயக்கங்களின் தோற்றம் சந்திச்சண்டித்தனங்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டது. குற்றம் செய்வோருக்கு அதி குறைந்த, மற்றும் அதி உயர்ந்த தண்டனை துப்பாக்கிச்சூடு என்ற நிலை வந்ததால் சண்டியர்கள் பயம் கொள்ள ஆரம்பித்தனர், சண்டித்தனங்கள் ஒழிந்தன. அதிலும் மக்களுக்கு விடுதலை கிடைத்தது.
களவுகள் நடைபெற்ற காலம் அது. திருடர்கள் தொடர்பாகவும் விடுதலை அமைப்புகளின் தங்கள் கவனத்தை திருப்பின. திருட்டில் ஈடுபடுவதாக பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பொருளாதார சுமையும், பணத்தின் மேலுள்ள ஆசையும் மக்கள் திருடர்களை வெறுக்க காரணமாக இருந்தது. வாழ்வின் தேவைகள், பணம் வைத்துள்ளோர் மீதுள்ள வெறுப்பு, பழகிவிட்ட தொழில், சுலபமான தொழில் என்பதால் திருடர்கள் களவு செய்ய விரும்பினர். இதனால் யாரும் கேள்விகள் கேட்கவில்லை. எனவே சுட்டுக்கொல்லுதல் தொடர்ந்தது. சிறிய களவுகள் செய்தோரும் கொல்லப்பட்டது கவலைக்குரியதுதான். ஆனால் மக்கள் பயமின்றி வாழும் ஒரு சுமூக நிலையுருவாகியது. இரவில் கூட விடுதலை அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீதிகளில் திரிந்ததால் குற்றங்கள் குறைந்தன. குற்றங்கள் செய்ய மக்கள் அஞ்சினர். எனவே பயந்து வாழும் நிலையிலிருந்து மீண்டு விடுதலையுடன் வாழக்கூடிய நிலை வரத்தொடங்கியதும் மக்களின் விருப்பத்துக்குரியவர்களாக விடுதலை அமைப்புகள் நிலைபெறத்தொடங்கினர்.
அடுத்து அரச தொழிலாளர்கள். மக்கள், பொது வேலைகளில் ஈடுபடுவோர்களை பொறுத்தவரை . அன்றும் சரி இன்றும் சரி, தமிழ் மக்கள் மத்தியில் தொழிலாற்றும் அரச ஊழியர்கள், தாங்கள் தான் பெரியவர்கள் என்ற முடியை தமக்கு தாமே சூட்டிக் கொண்டே வாழ்கின்றனர். இதற்குள் சாதிச்சிக்கல்களும் அடங்கும். சிலர் சிங்கள அரசஊழியர்கள் பெருமளவில் உதவும் போக்கில் இருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை தமிழர்களின் சாதி மதம் தொடர்பாக சிந்திக்கமாட்டார்கள். அதுவரை காலமும் தங்களை பெரியவர்களாக எண்ணிய அரச ஊழியர்கள் இயக்கங்களின் வருகையின் பின் தங்களது வேலைகளை சரியாக செய்யவும், மக்களை அனுசரித்து நடக்கவும் பழகிக்கொண்டார்கள். சாதி, இன, மத அடிப்படையில் வேறுபாடுகள் காட்டமாட்டார்கள். இந்த நடைமுறை மாற்றங்கள் மக்களிடையே நல்ல நம்பிக்கையான எதிர்காலம் தமிழனுக்கு வரும் என்ற புதிய எண்ணத்தை தோற்றுவித்தது. மக்கள் அமைதியாக வாழமுடியும் என்பது மட்டுமல்ல தங்களது சிக்கல்களை தீர்த்துவைக்க தங்கள் பிள்ளைகளே வந்து விட்டார்கள் என்கின்ற மிடுக்கும் வந்துவிட்டது. தப்பு செய்பவர்கள் உயிர்வாழமுடியாது என்று நிலைமை மாறியதால் பெண்கள் கூட இரவு பகல் என்று பாராது ஊருக்குள் நடமாட தொடங்கிவிட்டார்கள். எல்லோரது பாதுகாப்பும் விடுதலை அமைப்புகளுக்கு பொறுப்பானது. பெண்களுக்கு ஏதாவது சிக்கல்களை தருபவர்கள் அதி உயர் தண்டனைக்கு உள்ளாகும் நிலையில் இருந்தது. இது மக்கள் மத்தியில் விடுதலை அமைப்புகள் தொடர்பாக நல்லதொரு நம்பிக்கைநிலை தோன்ற வழிவகுத்தது எனலாம். இதற்கு நான் சிறப்பாக ஒரு உதாரணம் சொல்வதாயின், இவ்வாறான காலகட்டத்தில் நான் தொழில் நிமித்தம் வேறு ஊரில் இருந்தேன். வாரம் ஒருமுறை அல்லது இருவாரத்திற்கு ஒரு முறை ஊருக்கு செல்வேன். எனது நண்பர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல, ஒவ்வொருவர் ஒவ்வொரு விடுதலை அமைப்பினை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்படியான ஒரு அருமையான சூழல் நிலவியதை எல்லோரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுடப்பட்டமை மற்றும் காவல்துறை சார்பான பசுதியாம்பிள்ளை, சண்முகநாதன், பேரம்பலம், பாலசிங்கம், குமார், குருசாமி போன்றோர்களின் அழிப்பு, அரசுக்கு ஆதரவுதரும் தலைவர்களிடமும், தமிழ் மக்களின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தும் தமிழர்களிடமும், அச்சத்தை உருவாக்கியிருந்தது. மேலும் காவல்துறை முடக்கம், ஏனைய தமிழ்மக்கள் மீதான பாதகமான விளைவுகள் என்பனவும் தடுக்கப்பட்டன.
மக்கள் ஒழுங்கமைப்பு, நிர்வாக சீராக்கம், தப்பு செய்வோருக்கான தண்டனைகள் என்பன விரிவடைந்து, காவல் நிலையங்கள், இராணுவம் என்பன தாக்குதலுக்கு உள்ளாக ஆரம்பித்தது. ஆனால் விடுதலை அமைப்புகளை பொறுத்தவரை மறைந்திருந்து தாக்குதல், அல்லது தாக்கிவிட்டு மறைதல் என்ற சித்தாந்தத்திற்கு அமைய இராணுவத்தை தாக்கிவிட்டு சென்று விடுவார்கள். அதேவேளை தாக்குதலுக்கு உள்ளான இராணுவம், அல்லது அதன்பின் வரும் இராணுவம் மக்களை தாக்கும். இது படிப்படியாக மக்களிடம் ஆதரவு, எதிர்ப்பு, ஆதரவு கலந்த எதிர்ப்பு என்று பலவகையான மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது. இருந்தாலும் மக்கள் விடுதலையை விரும்பினார்கள். மக்கள் மத்தியில் பிரபலமான முதலாவது தாக்குதல் விடுதலைப்புலிகளால் ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து மூன்று யூலை இருபத்து மூன்று அன்று திருநெல்வேலியில் இராணுவத்தின் மீது நிகழ்த்தப்பட்டது. மறுநாள் காலை மாதகல் முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவம் பண்டத்தரிப்பு சந்தை அடங்கலாக உள்ள பகுதிக்குள் சரமாரியாக சுட்டுத்தள்ளியது. அங்கிருந்து புறப்பட்டு சண்டிலிப்பாய் சந்தியில் சிற்றூந்து ஒன்றில் வந்தவர்களை சுட்டுவிட்டு, பின் மானிப்பாய் இப்படி பல இடங்களில் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து மக்களை பயமுறுத்தியது. துப்பாக்கிகளுடன் இல்லாத, துப்பாக்கி சத்தமே கேட்காத சாதாரண மக்கள் தாக்கப்பட்டனர். பயந்தனர். சாவினைகண்டு அஞ்சினர். அன்றைய தினம் நானும், இன்னும் ஒருவரும் இளவாலை சந்தியில் பயணம் போவதற்கு வாகனத்துக்காக நின்றிருந்தோம். ஒரு சிற்றூந்து வந்தது. அதனை மறித்தும் நிற்கவில்லை. அவர் வாழைக்குலை ஒன்றுடன் வந்தவர் பண்டத்தரிப்பு சந்தையில் விற்பதற்கு, நான் பிரத்தியேக வகுப்பிற்காக யாழ்ப்பாணம் போவதற்கு. அதன் எந்த வாகனமும் வரவில்லை. பின்புதான் தெரியும் அது இராணுவத்தினர் பயணம் செய்த சிற்றூந்து என்பதும், துப்பாக்கிவேட்டுகளை தீர்த்ததும், மக்கள் இறந்ததும், திண்ணைவேலியில் நடந்த தாக்குதலும். ஆனாலும் நாங்கள் நின்ற இடத்தில் இராணுவம் எதுவும் செய்யாமல் சென்றுவிட்டது. அன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை நிலை இதுதான். தங்களின் அன்றாட வாழ்வியலுக்காக செயற்படுவதுதான் முக்கிய நோக்கு. நாட்டுநிலையை அவதானிப்பது, செய்தி கேட்பது, அரசியல் தொடர்பாக சிந்திப்பது என்பவை எல்லாம் அதன்பிறகுதான். இது மட்டுமல்ல இந்தத் தாக்குதல்தான் ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து மூன்று இனக்கலவரத்துக்கு காரணமானது என்றும் ஒரு பேச்சுண்டு.
இதன் பின்பு காவல்துறை மீதும், இராணுவம் மீதும் தாக்குதல்கள் விடுதலை புலிகளால் மட்டுமல்ல ஏனைய விடுதலை அமைப்புகளாலும் நடத்தப்பட்டன. இவற்றை எண்பத்து மூன்றின் பின் எண்பத்து ஏழுக்கு முன் என்று சொல்லலாம். இத்தாக்குதல்களில் சில தாக்குதல்கள் மிகவும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தன. குறிப்பாக தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) நடாத்திய சாவகச்சேரி காவல் நிலை தாக்குதல், கொக்காவில் மாங்குளம் தாக்குதல்கள் மிகவும் திட்டமிடப்பட்டு வேறுபட்ட விதத்தில் நடத்தப்பட்டிருந்தன. அதாவது சாவகச்சேரி காவல் நிலையம் தாக்கப்பட்ட போது அதனை பாதுகாக்க ஓடிவந்த நாவற்குழி இராணுவம்,மீதும் வழி மறிப்பு தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தப்படும் இடத்துக்கு விரைந்து ஓடிவந்து ஊர்மனைக்குள் இருக்கும் மக்களை அடித்து நொருக்கும் இராணுவம் பயந்து ஓடிய முதல் தாக்குதலாக இதனை குறிப்பிடலாம். இந்த வழிமறிப்பு தாக்குதல் ஒரு தாக்குதல் நடந்தால் அந்த தாக்குதல் நடைபெறும் இடத்துக்கு பாதுகாப்பு கொடுக்கவோ அல்லது எதிர் தாக்குதல் செய்யவோ இராணுவம் செல்ல முடியாத நிலையை தோற்றுவித்தது. இது ஒருவகையில் இராணுவத்தின் செயல்பாட்டு முடக்கத்தை கொடுத்த அதேவேளை மக்களும் துணிந்து நடமாடும் நிலையை தோற்றுவித்தது.
அடுத்து கிளிநொச்சி காவல் நிலையம் மீதான ஒரு தாக்குதலை குறிப்பிடலாம். அந்த தாக்குதல் தமிழீழ இராணுவம் எனப்பட்ட (T.E.A) அமைப்பினால் நிகழ்த்தப்பட்டது. இரவு வேளையில் ஒரு வாகனம் வந்து காவல் நிலையத்தின் முன் நின்றது. அதன் மீது காவல் நிலையத்தவர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அத்துப்பாக்கி குண்டுகள் வந்து நின்ற வாகனத்தை தாக்கியவுடன் அதிலிருந்து புறப்பட்டு வந்த வாயு எரிந்து, துப்பாக்கி பிரயோகம் செய்தவர்களையும், காவல் நிலையத்தின் உள்ளே இருந்தவர்களையும், காவல் நிலையத்தையும் தாக்க ஆரம்பித்தது. மிகக்குறுகிய நேரத்துள் பாரிய மாற்றம் கொடுத்த தாக்குதல் இது. புதிய முறையிலான தாக்குதல். அங்குள்ளவர்கள் எல்லோரும் பயந்த தாக்குதல். அந்த தாக்குதலின் போது உள்ளே இருந்த ஒரு காவல்துறை சாரதி பின்னர் ஒருமுறை சொன்னார் “ அதென்ன இவங்கள் சுட, மரம் எரியுது, சுட்டவரின்ரை தலைமயிர் எரியுது, உடுப்பு எரியுது, எல்லாரையும் நடுங்க வைச்சிட்டப்பா, பாத்திருப்பீங்கள் பாதிப்பேருக்கு மீசையும் போச்சு” இப்படியான மக்களுக்கு எதுவும் செய்ய இராணுவம் முனையாத தாக்குதல்களும் நடந்தன. தாக்குதல்கள் தொடர்பான அநேக விபரங்கள் இணையத்தளங்களில் உண்டு. அதனால் நான் அதிகமாக எழுதவிரும்பவில்லை. இவ்வாறு தாக்குதல்களை நிகழ்த்தி விரைந்து வெளியே வந்து வெளியே வரும் இராணுவத்தை முடக்கி போராட்டம் விரிவடைந்தது. இந்தக்காலத்தில் தான் ஏறத்தாழ முப்பத்து மூன்று இயக்கங்கள் இனம்கானப்பட்டது.
இயக்கங்கள் தொடர்பான வரைமுறையற்ற பெருக்கம் தொடர்பான ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இது ஒரு புத்தகத்தில் இடம்பெறும் செய்தி. நூலின் திறமை கண்டு இதனை சொல்லவில்லை. ஆனால் இந்நூலாசிரியர் அதிகமான செய்திகள் எழுதுகின்றார். அவற்றை சரி, பிழை பார்க்கும் தகைமை எனக்கில்லை. ஆனாலும் நான் இலங்கையில் இருக்கும் வரை சாதி என்ற சொல்லையும் சாதிகளின் ஒரு சில பெயர்களையும் அறிந்திருக்கின்றேன். ஆனால் தலித் என்ற சொல்லை இலங்கையில் பயன்படுத்தி நான் அறியவில்லை. அதேபோன்று அநேக இடங்களில் விடுதலைப்புலிகளையும், அதன் தலைவரையும் சாடுவதில் முன்னிற்கின்றார். கடந்ததை சொல்லி மக்களை குழப்பிவிடுவதிலும், நல்லதை சொல்லி வெளிப்படுத்துவதே சிறப்பு. எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள் எங்களின் பல்லைத் தோண்டி எங்களின் மூக்கில் பிடித்தால் எங்களுக்குத்தான் நாறும் என்று. “தனது அப்பா, அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, இயக்கம் ஆரம்பித்து அதற்கு பூனைப்படை எனப்பெயரிட்டு, நடாத்தியதாகவும், பின்னர் அது தடை செய்யப்பட்டதாகவும் முப்பது நிறச்சொல் எனும் நூலில் சோபாசக்தி சொல்கின்றார். அதேவேளை யார் எதைப்பேசினாலும், எம்மிடம் ஆயுத பலமும், மற்றவர்களை எதிர் பார்க்காமல் நாமே போராடினால்தான் வெல்லலாம் என்ற உறுதியும் கொண்ட ஒரே தலைவன் என்றால் அது விடுதலைப்புலிகள் தலைவன்தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது என்பது எனது எண்ணம். ஏனென்றால் ஆரம்பம் முதல் எல்லோராலும் இலக்கு வைக்கப்பட்ட ஒருவராகவும், சாவே வரினும் தனது இலக்கில் இறுதிவரை மாறாமல் நின்ற ஒரே தலைவனாகவும் விடுதலைப்புலிகளின் தலைவர் குறிப்பிடப்படுகிறார்.
இயக்கங்களின் உருவாக்கம் விடுதலை நோக்கிய பயணம் என்று தமிழர்கள் நம்பினார்கள். ஆனால் அதன் முன்பே பல்வேறு குழப்பங்கள் உள்ளே நடந்து முடிந்துவிட்டன. அதிகாரப்போட்டியோ, கொள்கை வேறுபாடுகளோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ அல்லது வேறு காரணங்களோ விடுதலைக்கான பயணத்தை நோக்கி இயக்கங்களை செல்லவிடாமல் தங்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நிலைக்கு தள்ளிச்சென்றது. பிரிவுகள் அதிகரித்தன. இது பற்றி அதிக விபரங்களை என்னால் சொல்லமுடியாது. காரணம் விடுதலை இயக்கங்கள் சம்பந்தபட்ட பலர் இவை தொடர்பான செய்திகளை எழுதியுள்ளனர். அவை தொடர்பாக கருத்து சொல்லவோ சரிபிழை சொல்லவோ என்னால் முடியாது. ஆனால் இயக்கங்களுடன் தொடர்புள்ள பலர் என்னுடன் நட்பாக இருதுள்ளனர். அனேகமாக இவர்கள் விடுதலை அமைப்புகளில் இருந்து விலகியவர்களாகவே இருந்தனர். அவர்கள் கதைகளை கேட்கும் போது மிகவும் வருத்தமான செய்திகள்தான் கிடைத்தன. அதேவேளை நடுநிலை என்று பார்க்கையில் அச்செய்திகளின் மறுவளமும் ஒன்று உண்டு. இதில் ஒருவர் சொன்ன செய்தியை மட்டும் குறிப்பிடுகின்றேன். அவர் தொடர்பாகவோ, அல்லது அவர் எந்த இயக்கம் சார்ந்தவர் என்றோ தேட வேண்டாம். இந்தியாவில் இருந்தவர். பயிற்சி என்பதிலும் தொழில்நுட்பம் என்பதுதான் அவரின் பாகம். தொழில் நுட்பத்தில் மிகவும் கெட்டிக்காரன். அதாவது நான் அவரை சந்தித்தது ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து ஐந்தில் அப்போது அவர் தான் இருந்த இயக்கத்திலிருந்து விலகிவிட்டார். அந்த நேரத்தில் கணணி பற்றி தெளிவாக தெரிந்த ஒருவர். கணணி இன்று போலல்ல அன்று. கணனியின் ஆரம்பகாலகட்டம். அன்றைய காலகட்டத்தில் கணணியை பயன்படுத்தி வேலைகள் செய்யும் ஆற்றல் உள்ளவர். அவர் இயங்கிய இயக்கம் மட்டுமல்ல, ஏனைய இயக்க தலைவர்களையும் நன்கு அறிந்தவர். அவர் விலகியதற்கு சொன்ன காரணம் இயக்கங்களின் செயற்பாடுகள் மக்களுக்காக அன்றி மக்களை வதைப்பதாக மாறிவிட்டது. இயக்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருமித்த கருத்துகளிலும் வேறுபட்ட கருத்துகளே அதிகம். ஏறத்தாழ ஒரே காலகட்டத்தினர் இயக்கங்களில் உள்ளனர் என்றபடியால் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தவோ, வழிப்படுத்தவோ முடியவில்லை. பலர் தேவையற்று கொல்லப்படுகின்றனர். ஆயுதம் ஏந்தியது மக்களை பாதுகாக்கவே தவிர பாதிக்கவல்ல. போராளிகள் மக்களுக்காக போராட வந்தவர்களே தவிர கருத்து முரண்பாட்டாலோ அல்லது தலைமைகளின் குழப்பநிலைகளுக்காக கொல்லப்பட அல்ல. என்னால் இயக்கத்துடன் ஒத்துபோகமுடியவில்லை. அதேவேளை மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியும் எனக்கில்லை. அதனால் விலகியதாக சொல்லவார். மிக நீண்ட நாட்கள், அதாவது எண்பதுகளின் மத்தியில் அவர் சொன்ன செய்தி. அதேவேளை அவர் சார்ந்த இயக்கத்தலைவர், அவரை புறப்பட அனுமதித்த போது “நீ இனி இலங்கையில் இருக்க வேண்டாம், வேறு எங்காவது செல்” என்று சொல்லியதால் இலங்கையில் இல்லை. அதேபோல அவர் எங்குள்ளார் என்றும் எனக்குத்தெரியாது. இதை நான் சொல்லக்காரணம் ஈழவிடுதலைப்போராட்ட அமைப்புகள் சாதாரணமாக சொல்லும் நிலையில் மட்டும் இருக்கவில்லை. சிறந்த அறிவு நிறைந்த பயிற்சி என்பவற்றை கொண்டுதான் உருவாகின.
ஒருபுறம் விடுதலை அமைப்புகள் தொடர்பாக பார்க்கும் அதேவேளை, அன்றைய நிலையில் மக்களாட்சி என்று சொல்லப்படும் அரசியல் தலைவர்களும் அரசியல் அநாதைகள் என்ற நிலையிலேயே இருந்தனர். நான் இவைபற்றி தெளிவாக விளக்கக் காரணம் தமிழீழ விடுதலை இயக்கங்கள் நல்ல சிறப்பான ஒரு நிலையில் இருந்தும் தங்கள் இலக்கினை மறந்துவிட்டு தமக்குள் குழப்பங்களை உருவாக்கி கொண்டன அல்லது குழப்பங்கள் உருவாக்க தூண்டப்பட்டன. இதனால் ஒற்றுமை சிதறி சண்டைகள் மூண்டன. ஈழத்தில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு ஏற்பட காரணமாயிருந்த அமைப்புகளே மக்களுக்கு துன்பமாக மாறின. எண்ணிக்கையில் அதிகமாக இருந்த இயக்கங்களை மக்களால் இனம் காண முடியவில்லை. எந்த இயக்கம் எதை செய்கின்றது என்றும் தெரியவில்லை. என்ன செய்வது என்றும் மக்களுக்கு புரியவில்லை என்றநிலை வந்தது. அதிக எண்ணிக்கையில் விடுதலை அமைப்புகள் இருந்தாலும் ஐந்து அமைப்புகளே பிரதானமாக பட்டியலிடப்பட்டன. அவை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (P.L.O.T), தமிழீழ விடுதலை இயக்கம்(T.E.L.O), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F) தமிழீழ விடுதலைப்புலிகள் (L.T.T.E), ஈழமக்கள் புரட்சிகர மாணவர் இயக்கம் (E.R.O.S). இதற்கும் மேலாக இன்னும் விடுதலைக்கு போராடுவதாக தம்மை அறிமுகப்படுத்திய இயக்கங்களுக்கு எதிராக மக்கள் போராடும் நிலையும் வந்தது.
ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து நான்கில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (P.L.O.T), தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F), ஈழமக்கள் புரட்சிகர மாணவர் இயக்கம் (E.R.O.S). ஆகியன இணைந்து ஈழத்தேசிய விடுதலை முன்னணி (E.N.L.F) எனற ஒரு அமைப்பை உருவாக்கினர். இதற்கு காரணம் இலங்கை அரசு தனது போர் ஆற்றலை கூட்டிக்கொண்டது. அதனை எதிர்ப்பதற்கு கூடிய பலம் தேவை என்பதுதான். பின்னர் ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து ஐந்தில் இந்த அமைப்புடன் விடுதலைப்புலிகளும் இணைந்து கொண்டனர். இந்த இணைந்த அமைப்பு அதே ஆண்டு யூலை மாதம் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுடன் பேச்சுவார்தைகளில் கலந்துகொண்டது. இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கமைக்கப்பின் பிரகாரம் இப்பேச்சுவார்த்தை நடை பெற்றது. ஆனால் தோல்வியில் முடிந்தது. பலமான நிலையில் விடுதலை அமைப்புகள் ஒன்றாக இருந்து, முக்கிய நான்கு கோரிக்கைகள் அதாவது, இலங்கைத்தமிழர்களை தனி ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவேண்டும், தமிழர் தாயகத்தை ஏற்றுக்கொண்டு அதன் ஒருமைப்பாட்டுக்கு உத்தரவாதம் தரவேண்டும், தமிழ் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவேண்டும், தமிழருக்கும் சகல சனநாயக உரிமைகளையும் தருதல் வேண்டும் என்பனவே அவை. இதை ஏற்றுக்கொள்ள அன்றைய இலங்கையின் சனாதிபதி மறுத்துவிட்டார். ஆனால் அதன்பின் இந்தக்கூட்டணியும் நிலைக்கவில்லை.
இங்கு விடுதலை அமைப்புகளின் வலுவான நிலைகண்டு, இலங்கை அரசு தனது படைவலிமையை உயர்த்த தொடங்கியது. இன்றும் சரி அன்றும் சரி அரசுகள் அரசுக்கு உதவினதே தவிர மக்கள் தொடர்பாக கவனிக்கவே இல்லை. சந்திரிக்கா அவர்கள் சனாதிபதியாக இருந்த போது தாக்குதலுக்கு உள்ளானார். அதில் அவரது கண் பாதிக்கப்பட்டது. அந்த தாக்கத்திலிருந்து மீண்டபின் அவர் சொன்ன செய்தி “ ஒரு இளம்பெண் குண்டு கொண்டு என்மீது பாய்கின்றார் என்றால் அவர்களுக்கு பாதிப்பு உண்டு. அதனை நாம் தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான்”. ஆனால் இந்த உலகமும் அங்கு இயங்கும் அரசுகளும் மக்களாட்சி பேசுகின்றனவே தவிர சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் எந்த நடவடிக்கையும் செய்வதில்லை. இது எங்களுக்கும் பொருந்தும். எனவே உலக உதவியுடன் படை வலிமையை உயர்த்தி, ஆயுதங்களை பெருக்கி, சண்டைக்கு படைகளை தயார் படுத்தி வடக்கு நோக்கி அனுப்பியது.
இயக்கங்கள் மக்களை நோகடிக்க தொடங்கின. வாகனங்களை பறித்தல், கொள்ளை யடித்தல், மக்களை சுடுதல் மட்டுமன்றி தங்களுக்குள்ளும் முரன்பட்டுக்கொண்டன. தலைமைகளின் கட்டுப்பாட்டில் முற்றாக இயங்கியதாக சொல்ல முடியாது. அவர்களுக்குள்ளும் மோதிக்கொண்டன. விடுதலையை உணர்ந்த மக்கள் மீண்டும் பயத்தில் உறைந்தனர். எவரை கண்டாலும் பயப்படும் நிலைக்கு வந்தனர். இவர்கள் இயக்கமா இல்லையா, பேசலாமா பேசமுடியாதா, நான் இதிலிருந்து தப்புவேனா இல்லையா என்ற பல்வேறு குழப்பநிலைக்கு ஆளானார்கள். பலர் இறந்தும் போயினர். பலர் ஊரைவிட்டு ஓட ஆரம்பித்தனர். ஒன்றுபட்டு நின்ற பலர் வேறுபட்டு சென்றனர். இராணுவம் தாக்குதல்களை வேகப்படுத்தியது. இயக்கங்கள் தமக்குள்ளும், மக்களுடனும் மோதின.
தொடரும்
பரமபுத்திரன்
.