வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலையில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடத்தில் காணப்பட்ட சைவ ஆலயம் அழிக்கப்பட்டு; புத்தர் சிலை நிறுவப்பட்டிருந்த நிலையில் அதுவே இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் சைவ ஆலயம் இருந்த இப் பிரதேசத்தினை உள்ளடக்கி இராணுவ முகாம் இயங்கியது. அந்த இராணுவ முகாமில் ஓர் பிக்கு தங்கியிருந்து சைவ ஆலயம் இயங்கிய பகுதியில் அரசமரம் நாட்டி புத்தர் சிலையை வைத்து வழிபாட்டில் ஈடுபட்டார்.
தொடர்ந்து 2013ம் ஆண்டு இங்கே பகிரங்கமாக புத்தர் சிலை நிறுவ முயன்றபோது எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டபோதும் 2016 காலத்தில் அங்கே சிறிய ஆலய வடிவில் கட்டிடத்தினை பிக்கு அமைத்தார்.
இப்பகுதியில் இருந்து 2016ம் ஆண்டு இராணுவம் முழுமையாக அகன்றபோதும் பிக்கு தான் தங்கியிருந்த கட்டிடத்தில் தொடர்ந்தும் குடிகொண்டார். அத்தோடு அப்பகுதி தமக்குரியது என தொல்பொருள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிட்டது. அவ்வாறு வெறியிடப்பட்ட வர்த்தமானியில் செம்மலைக் கிராமத்தின் பெயரும் செட்டிமலையானது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பிய காலத்தில் புத்தசாசன அமைச்சு பிரதேச செயலாளரிடம் அப் பிரதேசம் தொடர்பான விளக்கத்தை கோரியது. இதன்போது செட்டிமலை என்ற ஓர் இடமே இல்லை. எனவும் அப்பகுதியில் எங்குமே புத்த விகாரை இருந்தமைக்கான சான்றும் இல்லை. என பிரதேச செயலகம் விளக்கம் அளித்திருந்த்து. இருப்பினும் விகாரை அமைக்கும் பணி மட்டும் நிறுத்தப்படவே இல்லை. இந்த நிலையிலேயே அங்கே தங்கியிருந்த பிக்கு முன்னர் வைத்திருந்த சிறு புத்தர் சிலையினையும் அகற்றி 6 அடி உயர புத்தர் சிலை ஒன்றினை தற்போது வைத்துள்ளார்.
அவ்வாறு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது