அவனுக்கு வியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது.
கம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இருட்டில் பார்த்தால் எதுவுமே தெரியாது. நெஞ்சத்தை ஏதோவொன்று அழுத்தும். ஆனால் நிலவில் இனிமைதான்.
எங்கும் வெண்ணிறப் படிமங்கள். மரங்களின் நிழல்கள் மறைக்க முயன்றன; முடியவில்லை.
நாலாவது வரிசையில் கடைசியா……இடம் அடையாளம் தெரிந்தது. அங்குதான் அவனின் அண்ணன் உறங்குகின்றான்.
பின்பக்கம் சத்தம் கேட்டது. ‘சமையற்கட்டைவிட்டு அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். இண்டைக்கெண்டாலும் அண்ணனிட்ட போவேணும்’ மனம் குறுகுறுத்தது.
‘சே……அண்ணா எவ்வளவு இனிமையானவன் ……’
அப்போதெல்லாம் வீட்டுக்கு முன்னுக்கு வெறும் பற்றைக் காடுதான். வளர்ந்து, உயரமாக, பார்க்கவே பயமாக இருக்கும். படலையைத் திறந்து வெளியில் வந்தால் அம்மா பின்னாடியே வருவாள்; பேசுவாள். “ அம்மா ஏன் இப்படிக் கத்துகிறாள்” என மனது சலிக்கும்.
“ஏனம்மா ……?”
“பத்தேக்கை பேயள், பிசாசுகள் இருக்கு, உன்னை வந்து பிடிச்சுக் கொண்டு போயிடுங்கள்”.
இரவில் படுக்கும்பொழுது பயமாக இருக்கும். ஏதோ நெஞ்சை அழுத்துவது மாதிரி……காலதரை மூடுவது நல்லதாகப் படும், ஆனால் எழும்பப் பயமாக இருக்கும்.
கண்களை மூடினால் பேய்களும் பிசாசுகளும்……கறுத்த – பற்கள், நீண்ட – தலைவிரித்த……பிசாசுகள் கைகளை அகலவிரித்து இவனைப் பிடிக்க வருங்கள்.
ஓடுவான். பாம்புகள், பூச்சிகள், முட்கள்……பயந்து நடுங்கியபடி நிற்பான். அகலவிரித்த கைகளுடன் பேய்கள் இவனை நெருங்குங்கள். அண்ணன் வருவான்; கையில் வாளிருக்கும். கைகளை ஓங்கி விசுக்குவான்.
பேய்களும் பிசாசுகளும் ஓடும். பாம்புகளும் பூச்சிகளும் செத்தழியும். அண்ணன் இவனைத் தூக்கி அணைப்பான். ‘அவன் எப்போதும் வீரன்தான்’.
திடீரென ஒருநாள் வீட்டுக்கு முன்னால் வீதியில் பலர் குழுமினர். அன்றும் மறுநாளும் ஒரே வேலை. அம்மாவும், அண்ணனும் அங்குமிங்கும் ஓடித்திரிந்தார்கள். மூன்றாவது நாள் காலையில் அந்தப் பற்றைக் காடு முற்றாக இல்லாமல் போனது.
நிம்மதியாக இருந்தது. படலையைத் திறந்து முன்னுக்கு வரக் கூடியதாக இருந்தது. அம்மா முன்னர் போல் பின்னால் வருவதில்லை.
நாட்கள் சில சென்றன. வெயில் சாயும் மாலை நேரம். மக்கள் கூடினர். மாமாக்கள், அண்ணாக்கள், கையில் துப்பாக்கிகள்……இவன் கண்களை அகலத் திறந்தபடி இருந்தான். அண்ணன் அருகில் நின்றான். அம்மா படலையுடன் ஒட்டியபடி வேர்த்து விறுவிறுக்க நின்றாள். இன்னும் சில நிமிடங்களில் அழத் தொடங்குவாள்.
புதைகுழிக்குள் பெட்டி ஒன்றை இறக்கினார்கள். அண்ணன் ஓடினான். அம்மாவும் போனாள். அம்மாவை ஒட்டியபடி நடந்தான். கிட்டவாகப் போனதும் எட்டிப் பார்த்தான்.
அண்ணனொருவன் உறக்கத்தில்…… சுற்றி நின்ற மாமாக்களின் – அண்ணாக்களின் துப்பாக்கிகள் வானத்தைப் பார்த்தன. முழங்கி ஓய்ந்தன. அம்மா அவனை இழுத்தணைத்தாள். திரும்பி நடந்தாள்.
இரவு, அவனுக்கு உறக்கம் வரவில்லை.
“அம்மா! அந்த அண்ணைக்கு என்ன நடந்தது?”
“அந்த அண்ணை நித்திரை கொள்ளுறான்”.
“ஏன் அவனுக்கு வீடில்லையா?”
“இல்லை. அவனுக்கு அதுதான் வீடு. இந்த மண்ணும் காற்றும் நீயும்தான் சொந்தம்”.
அவனுக்கு விளங்கவில்லை. உறக்கமும் வரவில்லை. இரவு நீண்டது. ‘பாவம் அவன் பேய்களுக்கும் பிசாசுகளுக்கும் நடுவில் என்ன செய்யப் போகிறானோ’?
நாட்கள் சென்றன. அண்ணாக்களில் பலர், அங்கு உறக்கத்தில்……ஒவ்வொரு முறையும் அம்மா அழுதாள். அண்ணா கலகலப்பை மறந்து இறுகிப் போவான். இவனோ உறங்க மாட்டான். தவிப்பான். ஒருநாள் அம்மாவிடம் கேட்டான்,
“அந்த அண்ணாக்களை பேய் பிசாசுகள் ஒண்டுஞ் செய்யாதா?” அம்மா சிரித்தாள், அவனைக் கட்டி அணைத்தாள்.
“அண்ணாக்களைக் கண்டா பேய் பிசாசுகள் பயத்தில் ஓடிடும்; அவங்கள் விரட்டிப் போடுவாங்கள்”.
அவனுக்கு அமைதியாக இருந்தது; மகிழ்ச்சியாகவும் இருந்தது. சில நாட்களில் அண்ணன் வீட்டை விட்டுப் போய்விட்டான்.
அம்மா அதனை எப்படி ஏற்றுக் கொண்டாளோ தெரியவில்லை. ஆனால் அவன் சோர்ந்து போனான். அவனுக்கு அண்ணின் அரவணைப்புத் தேவைப்பட்டது. அம்மாவிடம் கேட்டான்.
“அண்ணன் எங்க போட்டான்”?
“இயக்கத்துக்கு”
“ஏன்”
“போராட”
அவனுக்கு விளங்கவில்லை. அம்மா இப்படித்தான். சரியாகப் பதில் சொல்லத் தெரிவதில்லை. அண்ணன் வரக் கேட்க வேண்டும்.
இப்போதெல்லாம் அவன்தான் வாசலில் அம்மாவுடன் நின்றான். புதைகுழிக்குள் அண்ணாக்களை இறக்கும் பொழுது ஓடிச்சென்றான். அம்மா முன்னைவிட அதிகமாக அழுதாள். பார்ப்பதற்காகப் பரிதவித்தாள். வர வர அம்மாவின் போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. ‘நிம்மதியாக உறங்குவதற்காக யாரும் அழுவார்களா……?’
அமைதியான காலை நேரம். படலை திறந்து சத்தம் கேட்டது. அண்ணன் வந்தான். அவன் ஓடிச் சென்றான். கைகளைப் பிடித்து இடுப்பில் கால்களை வைத்து தோளுக்குத் தாவினான்.
அன்று முழுவதும் மகிழ்ச்சிதான். மகிழ்ச்சிப் பிரவாகம். அன்றுதான் அவர்களிருவரும் தனியாக இருக்கும் பொழுது அவன் கேட்டான்.
“ஏனண்ணா எங்களை விட்டுப் போனனி……?”
“உனக்காகத்தான்” அவன் கன்னத்தைக் கிள்ளினான். விளங்கவில்லை.
“எனக்காக எண்டா……?”
அண்ணன் அவனைத் தூக்கி அணைத்தான்; முத்தமிட்டான்.
“நீ சிரிக்க……வளர……சுதந்திரமா ஓடி ஆட ……அமைதியா உறங்க ……”
அவனுக்கு விளங்கிய மாதிரியும் இருந்தது; விளங்காத மாதிரியும் இருந்தது. கேள்விகளை விட்டு விலகினான். அண்ணனின் தோளில் தொங்கிய துப்பாக்கியில் கண்கள் ஏக்கத்துடன் விழுந்தன. மெதுவாகத் தொட்டான்.
“இதென்னட்ட இருந்தா நானும் சுடுவன்”
அண்ணன் துப்பாக்கியைக் கையில் எடுத்தான்; அவனின் கண்களை நன்றாக உற்றுப் பார்த்தான்.
“உனக்காக இது காத்துக் கொண்டுதான் இருக்கும்”
அன்று இரவும் கனவில் பேய்களும் பிசாசுகளும் வந்தன. ஆனால் அண்ணாக்கு அருகில் ஏராளமான அண்ணாக்கள் வாள்களுடன் நின்றனர். பேய்கள் ஓடின. விழுந்தடித்து ஓடின. கனவிலும் மகிழ்ச்சிதான்.
மறுநாள் அண்ணன் சென்றான். அதன் பின் நீண்ட நாட்களாக வரவில்லை. அவனுக்கு அண்ணனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. இதயம் தவித்தது. இடை இடை காய்ச்சலும் வந்தது. முன்னால் புதைகுழிகளில் மேலும் மேலும் அண்ணாக்கள் உறக்கத்தில்……
ஒருநாட் காலை அண்ணனைச் சிலர் கொண்டுவந்தனர். கட்டிலில் கிடத்தினார்கள். அம்மா கதறி அழுதாள். ஓலமிட்டாள். இவன் கிட்டவாகப் போனான். யாரோ பின்னுக்கு இழுத்தார்கள். தூக்கினார்கள். விலகிச் சென்றார்கள்.
‘அண்ணனுக்கு என்ன, அம்மா ஏன் அழுகிறாள்?’ அவனுக்குச் சினமாக இருந்தது.
‘அண்ணன் ஏன் படுத்திருக்கிறான், என்னோட கூட கதைக்காமல்……இப்பெல்லாம் அவனுக்கு என்னில அன்பில்லை’. நினைக்க அழுகை வந்தது. அழுதான்; விம்மி விம்மி அழுதான்.
மாலை நேரம், அண்ணனைத் தூக்கினார்கள். அம்மா பெரிதாகக் குரல் வைத்து அழுதாள். நெஞ்சில் அடித்தடித்து அழுதாள். முடிவாக சரிந்து விழுந்தாள்.
வெளியில் வந்தவர்கள், முன்னால் உறங்கிக் கொண்டிருந்த அண்ணாக்களின் வரிசையின் பின்பாக அதோ தெரிகின்றதே அந்த இடத்தில், அண்ணனைப் புதைகுழிக்குள் இறக்கினார்கள்.
இவன் எட்டிப் பார்த்தான். சிரித்தபடி அண்ணா உறங்கிக் கொண்டிருந்தான். ‘ஆனால், அண்ணா வீடிருக்கக்கூடியதாக ஏன் இங்க வந்து படுக்கின்றான்?’.
கேள்விகளுக்குப் பதில் இருக்கவில்லை. அம்மாவும் கேட்கக்கூடிய நிலையிலில்லை. கேட்டபொழுதெல்லாம் அழுதாள். விளங்காத மாதிரி ஏதோ சொன்னாள். ‘அம்மாவுக்குப் பதில் சொல்லத் தெரிவதில்லை. அண்ணனிட்டைத்தான் கேட்கவேண்டும். அவன் எப்போதாவது ஒருநாள் எழும்பி வருவான்’.
நாட்கள் சென்றன. அம்மா இயல்புக்கு வந்துவிட்டாள். எல்லாம் வழமையானது. ஆனால், அண்ணன் மட்டும் ஒரு நாளும் எழும்பி வரவில்லை. இப்போதெல்லாம் காலதர் மூடி இருந்தால் அவனுக்குத் தூக்கம் வருவதில்லை. திறந்தால்…… முன்பாக கல்லறைகளைத் தடவிவரும் தென்றலின் தடவுகை, அவனை உறக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
‘அண்ணனைக் கூப்பிடக் கூடாது. அவன் பாவம் நித்திரை கொள்ளுகின்றான்’ என்று, அம்மா சொல்லியிருந்தாள்.
அம்மா இல்லாத சில நேரங்களில் காலதரால் எட்டிப் பார்ப்பான். அண்ணனைக் கூப்பிட வேண்டும் போலிருக்கும்; ஆனாலும் ஒருநாளும் கூப்பிடவில்லை.
‘அண்ணா ஏன் இப்படி……என்னட்டக் கூடவராம ……நெடுகவும் படுத்துக்கொண்டு……அண்ணனிட்டையே கேட்க வேண்டும். பக்கத்தில போட்டா அவன் சொல்லுவான்’.
‘இன்றைக்கு எப்படியும் அண்ணனடிக்குப் போகவேணும்’.
அம்மா பின் கட்டில், வெளியில் வந்தான். சந்தேகம் தட்டியது. ‘அம்மா வேலையை முடித்து விடுவாளா……?’
பின்னுக்குப் போனான். மெல்லிய விளக்கொளியில் அம்மா. கழுத்தைக் கட்டி அணைத்தான்; உரசினான்.
“விடப்பன்……வேலை இருக்கு ……”
எட்டிப் பார்த்தான். நிறையப் பாத்திரங்கள் கிடந்தன.
விட்டிட்டு மெதுவாக முன்னால் வந்தான். நிலவு வெளிச்சம் போட்டது.
படலையைத் திறந்தான். வீதியைக் கடந்தான். இரும்புக் கம்பிக் கதவு மறித்தது. உள்ளே பார்த்தான்.
வெண் படிமங்கள்போல் கல்லறைகள். நிலவு கல்லறைளைத் தொட்டுத் தடவித் தாலாட்டியது.
கம்பிகளால் ஏறி உள்ளே இறங்கினான். இனிய வாசம். காற்றின் தடவலில் குளிர்மை.
மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான். அண்ணனுக்கு அருகில் போய் நின்றான்.
நிலவு, மரங்களின் சிலிர்ப்பு, அமைதி.
“அண்ணா, ஏன் இங்க வந்து படுத்தனி”?
அரசமரம் சத்தமாகச் சிலிர்த்தது. அருகில் நின்ற வேம்பு ஆடியது. மற்றைய மரங்களும் அப்படியே…… இலைகள் உதிர்ந்து விழுந்தன.
“உனக்காக …… நீ சிரிக்க…….வளர……சுதந்திரமா ஓடி ஆட……அமைதியா உறங்க……”
அண்ணனின் குரல்தான். இல்லை……அரசமரம். எதுவோ……அவனுக்கு விடை தேவை போல இல்லை.
அருகாக இருந்தான். குனிந்து முத்தமிட்டான். எழுந்து நடந்தான். காற்று வீசியது. அரசமரம் சத்தமாகச் சலசலத்தது. மற்றைய மரங்கள் ஆடின.
“நீ சிரிக்க…….வளர……சுதந்திரமா ஓடி ஆட……அமைதியா உறங்க……”
காற்றில் குரல். அண்ணன்தான். இல்லை……அரசமரம். இல்லை……எல்லா அண்ணாக்களும்……!
“உனக்காக …… நீ சிரிக்க…….வளர……சுதந்திரமா ஓடி ஆட……அமைதியா உறங்க……”
விடுதலைப்புலிகள் (கார்த்திகை 1992) இதழிலிருந்து.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”