எதிர்வரும் 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபையின் கலாசார சபையான “எழுநீ பண்பாட்டு முற்றம்”, “எழுநீ விருதுகள் – 2018” எனும் பல்துறை சேவையாளர்களை கௌரவிக்கும் பிரமாண்டமான விழாவினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் இவ்விழாவில் வவுனியாவின் ஒரு சில மூத்த கலைஞர்கள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும், பல்துறை சேவையாளர்கள் தெரிவில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் முகநூல் வாயிலாகவும் பத்திரிகைகளிலும் (18-11-2018) அதுபோல எவ்வித புலன் விசாரணைகளுமற்ற முறையில் சில இணையத்தளங்கள் வாயிலாகவும் பிழையான செய்திகள் பரப்பப்படுகின்றன.
அதுமட்டுமன்றி இவ்விழா குறித்தவொரு கட்சி சார்ந்து நடைபெறுவதாகவும் அதனைத் தாம் புறக்கணிப்பதாகவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது.
எனவே இச்சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடும் தார்மீகப் பொறுப்புணர்வும் கருதி, ஏற்பாட்டுக்குழு இத்தெளிவுபடுத்தல் பதிவினை இங்கே பதிவிடுகிறது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின் தெரிவு செய்யப்பட்ட வவுனியா நகரசபை பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றது.
அதன் அடிப்படையில் வவுனியா நகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கியதாக 7 பேர் கொண்ட கலாசாரக் குழு ஒன்று உள்ளூராட்சி சபைகளின் உப விதியின் பரிந்துரைகளுக்கு அமைவாகத் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் கௌரவ பரதலிங்கம் தலைமையில் உருவாக்கப்பட்டது.
வவுனியா நகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மொழி, கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கலை இலக்கிய மன்றங்களையும் விளையாட்டுக் கழகங்களையும் தனித்தனியே அழைத்து கௌரவ நகரபிதா கலந்துரையாடினார்.
அக்கலந்துரையாடல்களின் மூலம் அவர்களுடைய செயற்பாடுகள் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றின் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டார்.
பின் அனைத்துக் கலை இலக்கிய மன்றங்களையும் சேர்த்து பொதுக்கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
அப்பொதுக்கூட்டத்தில் ஒவ்வொரு மன்றத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டு உள்ளூராட்சி சபைகளின் உபவிதிகளுக்கமைய இக்கலாசார சபை உருவாக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் அழைக்கப்பட்ட ஒரு சில மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.
இக்கலாசார சபையுடன் நகர சபையின் கலாசாரக் குழுவும் இணைக்கப்பட்டது.
இக்கலாசார சபைக்கு “எழுநீ பண்பாட்டு முற்றம்” என்ற பெயர் சூட்டப்பட்டது. அதனூடாக வவுனியா மாவட்டத்து பல்துறை சேவையாளர்களை கௌரவிக்கும் “எழுநீ விருதுகள் -2018” என்னும் விருது வழங்கும் விழா ஒன்றினை நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் பல்துறை சேவையாளர்களை விருதுக்காக பரிந்துரைக்கும்படி பத்திரிகைகள், இணையத்தளங்கள், முகநூல்கள் வாயிலாகவும், தனிப்பட்டவர்களுக்கான அறிவித்தல் மூலமாகவும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
ஆச்சரியப்படும் வகையில் 250 ற்கும் மேற்பட்ட பல்துறை சேவையாளர்களை வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பலர் பரிந்துரை செய்திருந்தார்கள்.
இதில் பல சேவையாளர்களை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பரிந்துரை செய்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்பரிந்துரைகளை விருதுக்காக இறுதிப்படுத்துவதற்கு நகரசபையின் எழுநீ பண்பாட்டு முற்றத்தினர் ஏழு பேர் கொண்ட ஒரு தெரிவுக்குழுவை தமக்குள் தெரிவு செய்தனர். அது நடுவர் குழாமாக செயற்பட்டது.
அத்தெரிவுக்குழுவில் நகரசபையின் கலாசாரக் குழுவின் தலைவர் பரதலிங்கமும் உள்வாங்கப்பட்டிருந்தார். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் முகநூல்கள் வாயிலாக வெளியிடப்பட்டுமிருந்தன.
அதேநேரம் பரிந்துரை செய்யப்பட்டிருந்த பல மூத்த கலைஞர்கள், விருது பெற்றுக்கொள்பவர்களுக்கு மதிப்பளிக்கத் தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு காலாசார சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்கள்.
அதற்கமைய விருது கொடுத்து மதிப்பளிப்பதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களும் மேற்குறித்த சேவையாளர்களையும் இணைத்து 90 பேர் வரை மதிப்பளிப்பவர்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்விருது விழாவில் நூற்றுற்கு மேற்பட்ட பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் சுமார் 70 வீதமான மூத்த கலைஞர்கள் மாவட்டம் தழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்த விடயங்கள் முற்றிலும் தனிப்பட்டதும் இரகசியமானதும் எனக் கருதியும் விருது பெறும் சேவையாளர்களும், விருது வழங்குனர்களும் விமர்சனத்துக்கு உள்ளாகக்கூடாது எனக்கருதியும் அந்த விபரங்களை எழுநீ பண்பாட்டு முற்றத்தினர் இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை.
ஆனால் தெரிவு செய்யப்பட்ட சேவையாளர்களுக்கு 04.11.2018 திகதியிடப்பட்ட நகரபிதாவின் கையெழுத்துடனான கடிதங்கள் எமது இணைப்பாளர் ஊடாக நேரடியாகச் சென்று வழங்கப்படுவதுடன் அவர்கள் தொடர்பான ஒரு நிமிட ஒளிப்பதிவு ஆவணமும் பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையிலேயே எதுவித விசாரணைகளும் ஆதாரங்களும் இன்றி சிலர்; திட்டமிட்டு சில எதிர்மறையான செய்திகளை பரப்புவதையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம்.
அது போல இலைமறை காய்களாகவுள்ள சேவையாளர்களின் சமூக அங்கீகாரத்துக்கு குறுக்காக நின்று சிலர் குந்தகம் விளைவிப்பதையிட்டும் நாம் வருத்தமடைகிறோம்.
இந்நிகழ்வானது தமிழ்த்தேசியத்தின் பல்துறை சேவையாளர்களை ஊக்குவிப்பதற்கும்; அவர்களது சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்குமானதேயன்றி எவ்வித தனிப்பட்ட நோக்கங்களுக்கும் அப்பாற்பட்ட பொதுநோக்காகும். இதனை யாவரும் புரிந்து இணைந்து செயற்பட்டு அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணமாய்த் திகழ்வதே எமது சமூகத்திற்கு ஆரோக்கிமானதாகும்.
எமது மக்களுக்காக பாகுபாடற்ற ஒன்றிணைவையே நாம் விரும்புகின்றோம்.
கலை, இலக்கியம், மொழிச் செயற்பாடுகளே தமிழ்த் தேசியத்தின் தூண்கள் என்பதையும், தேசியத்தின் அடையாளங்களை வலிமைப்படுத்துவதும் அச்சமூகத்தினை முதன்மைப்படுத்துவதுமே தேசிய இன விடுதலைக்கு வழிகோலும் என்பதையும் கருத்தில் எடுத்து செயற்படுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
ஏற்பாட்டுக்குழு
எழுநீ விருதுகள் – 2018
எழுநீ பண்பாட்டு முற்றம்
நகரசபை
வவுனியா.