தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் கூட்டமைப்பு அதிரடி முடிவு எடுக்கப்போவதாக ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. அது என்ன வென்றால் கூட்டமைப்பில் தற்போது அங்கத்துவம் வகிக்கும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொது நலவாய நாடுகளின் பிரதிநிதிகளை வரவழைத்து தற்போதைய நெருக்கடிகள் குறித்து விளக்கப் போகிறார்கள். ஒரு நாட்டின் எதிர்கட்சி என்ற வகையில் இது முக்கியம் தான் ஆனால் அதைவிட முக்கியமான சில கருமங்களை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு நல்லாட்சி காலத்தில் கோட்டை விட்டிருக்கிறது.
ஒரு சிங்களக்கட்சி எதிர்கட்சியாக இருந்து அந்தக்கட்சியும் அதன் தலைமையும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தீர்க்கும் வகையில் மேற் சொன்னதைப் போல நடவடிக்கை மேற்கொள்வது சாதாரணம். ஆனால் 70 ஆண்டுகளாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி இறுதியல் எந்த முடிவும் இல்லாமல் எவரது தயவும் இல்லாமல் அனாதைகளாக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியும் அதன் தலைமையும் இப்படி உப்புச்சப்பற்று செயற்படுவது வேதனையானது.
அந்த அடிப்படையில் சம்ந்தனிடமும் அவரது சகாக்கலான 14 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் பொது வெளியில் சில கேள்விகள்.
01. தமிழ் மக்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கையில் இருக்கின்ற இரு பெரும் தேசியக்கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவு எடுத்தால் தான் அது நிரந்தர தீர்வாக அமையும் என்று கூரினீர்கள். ஆனால் கடந்த 3 வருடங்கள் இலங்கையில் தேசிய அரசாங்கம் இருந்ததே அந்த தேசிய அரசாங்கத்தை வைத்து நீங்கள் சாதித்தது என்ன?
02.நல்லாட்சி என்று ஒரு அரசாங்கத்திற்கு பெயர் வைத்து விட்டு அதன் பங்காளியாக இருந்து கொண்டு இப்போது உங்கள் எஜமானுக்கு ஆபத்து என்றவுடன் வெளிநாட்டு பிரதிநிதிகளை அவசரமாக அழைக்கும் நீங்கள் உங்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுக்காக எத்தனை தடவை வெளிநாட்டு இராஜ தந்திரிகளை கூட்டாக சந்தித்திருக்கிறீர்கள்?
03.இரண்டு ஆண்டுகளை எட்டப்போகும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் ஒரு நாளாவது அந்த மக்களின் போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெறும் பன்னாட்டு இராஜ தந்திரிகளுடைய சந்திப்பு போன்று ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அந்த மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றீர்களா?
04.நீங்கள் அனைவருமே முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தான் தமிழர் தாயகமெங்கும் வகை தொகையின்றி புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வந்தன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது இன்று இடம் பெறும் இராஜ தந்திரிகளின் சந்திப்பு போன்று ஒரு சந்திப்பை ஏற்படுத்தி எமது தேசத்தின் இனப்பரம்பலில் சிங்கள தேசம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று வெளி நாட்டவருக்கு எடுத்துச்சொல்லியிருக்கிறீர்களா?
05.தமிழர் தாயகத்தில் மகிந்த ஆட்சியின் பின்னர் உங்கள் தயவில் கொண்டுவரப்பட்ட நல்லாட்சிக் காலத்திலும் மகிந்த ஆட்சியில் குவிக்கப்பட்ட அதேயளவு இராணுவம் தமிழர் தாயகப்பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனவே. எப்போதாவது ஒரு நாள் தமிழர் தாயகப்பிரதேசத்தில் சிங்கள இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பில் இராஜதந்திரிகளை அழைத்து முறையிட்டுள்ளீர்களா?
06.தமிழர்கள் சந்ததிகளாக வாழ்த இடங்களில் அத்துமீறி சிங்களவர்களை கொண்டுவந்து குடியேற்றியது நல்லாட்சி. உதாரணமாக கொக்கச்சான் குளம் என்ற தமிழ் கிராமத்தை இலங்கையின் வரைபடத்தில் இருந்தே அழித்து அதை கலாபொகஸ்வெவ என்று அடையாளப்படுத்தியதே இந்த நிலப்பறிப்புக்கு நீங்களும் உடந்தையாக இருந்தீர்களே. எப்போதாவது ஒரு நாள் தமிழர்களின் நிலப்பறிப்பு குறித்து இன்று இடம்பெறும் இராஜதந்திரிகளின் சந்திப்பு போன்று ஒரு சந்திப்பை நடத்தினீர்களா?
07.வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது “நான் வேலை வேண்டும் என்று கேட்டால் அரசாங்கம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஆனால் அது தீர்வை குழப்பிவிடும்” என்றீர்கள் ஆனால் நல்லாட்சி முடிவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழர்களுக்கு தீர்வும் இல்லை. படித்தவர்களுக்கு வேலையும் இல்லை. இது தொடர்பில் எப்போதாவது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சு நடத்தினீர்களா?
08.பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் எந்த குற்றங்களும் செய்யாமல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல பத்தாண்டுகளாக எந்த தீர்வுமின்றி சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் உங்களது நல்லாட்சி காலத்தில் இரண்டு தடவை உண்ணாவிரதம் இருந்து சாவுவரை சென்று உங்களது வெற்று கோசங்களால் உண்ணாவிரதப்போராட்டத்தையும் கைவிட்டு இன்றும் சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றார்களே. ஒரு நாளாவது அவர்கள் பற்றி நீங்கள் சிந்தித்து இலங்கையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்து தொடர்பில் எத்தனை முறை இன்று ஒன்று கூடுவது போல் ஒன்று கூடி இராஜதந்திரிகளிடம் முறைியிட்டுள்ளீர்கள்?
09.சுமந்திரன் சொல்கிறார் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் தமிழர்களின் தீர்வு பற்றி பேச முடியாதாம். அப்படியானால் கடந்த மூன்றாண்டுகளில் அரசின் பங்காளியாக இருந்தீர்களே ஒரு நாளாவது சர்வதேச இராஜதந்திரிகளை அழைத்து சிங்கள தேசம் தீர்வு விடயத்தில் எம்மை ஏமாற்றுகிறது என்று ஒரு இனத்தின் மக்கள் பிரதிநிதிகளாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்களா?
10.இலங்கையை ஆளும் இரு பெரும் தேசியக்கட்சிகள் அதிகாரப்போட்டியில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் இன்றைய சூழலை பயன்படுத்தி சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் நீங்கள் இது வரை எத்தனை தடவை இராஜதந்திரிகளை இன்று சந்திப்பது போல் சந்தித்திருக்கிறீர்கள்?
இப்படி பல ஆயிரம் கேள்விகளை கூட்டமைப்பை நோக்கி கேட்க முடியும். ஆனால் அவ்வாறான எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் “பாப்பம் தம்பி” என்கிற ஒற்றை வார்தையோடு கூட்டமைப்பும் கூடவே காலமும் கடந்து செல்கிறது.
– சிவா கரன்.