தமிழகக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் முரண்பாடுகளால் பிரிந்து நின்றாலும் ஈழத் தமிழர்களுக்குத் தேவையேற்படும் போது ஒருமித்து ஆதரவாகக் குரல் கொடுப்பவரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
அத்துடன் செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி தறைந்த நிலையிலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் ஈழச் சிக்கலைப் புதிய கோணத்தில் அணுகும் நிலை ஏற்பட வாய்ப்பில்லையென தொல் திருமாவளவன் தெரிவித்ததுடன் இதற்கு காரணம் அக்கட்சிகளை வழி நடத்துநர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழின முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீண்ட காலம் அரசியலில் இருப்பவர்கள் என்பதாகுமெனவும் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மர நடுகை நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தினக்குரலுக்கு அளித்த விசேட நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை நிச்சயம் இங்குள்ள அரசியல் தலைமைகளிலிருந்து வருமென நம்பிக்கை வெளியிட்ட தொல் திருமாவளவனுடனான நேர்காணல் வருமாறு;
கேள்வி: வடக்கிற்கு யுத்தம் முடிந்த கையோடு வந்தவர் என்ற ரீதியில் அன்றைய நிலைக்கும் தற்போதைய சூழ்நிலைகளுக்குமிடையிலான வித்தியாசம் எவ்வாறு உள்ளது எனக் கருதுகின்றீர்கள்?
பதில்: நான் 2002 இல் “மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டில் பங்குகொள்ள வடக்கு வந்த நிலையில் வன்னியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தேன். இதன்பின்னர் 2004 இல் புத்தகம் வெளியீட்டு நிகழ்வுக்காக வந்திருந்த நிலையில் வன்னியில் 11 நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் தமிழ் ஊடக அறிவியல் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டியதுடன் நடேசன், சூசை, பொட்டு அம்மான், தமிழேந்தி, பரா உள்ளிட்ட முன்னணித் தளபதிகளைச் சந்தித்தேன்.
அதன்பின்னர் 2009 ஒக்ரோபரில் இந்தியப் பாராளுமன்றக் குழுவினரில் ஒரு நபராக இங்கே வந்தேன். இதையடுத்து 2010 ஜனவரியில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வந்தேன். பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள 2011 இல் வந்தபோது விமான நிலையத்திலேயே வைத்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டேன்.
இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் மரநடுகை நிகழ்ச்சியில் பங்குகொள்ள மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்துள்ளேன்.
நான் யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009இல் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வந்தபோது வவுனியாவிலுள்ள “மானிக் ஃபர்ம்’என்கிற இடம்பெயர்ந்தோர் முகாமில் மக்களைச் சந்தித்தோம். அடுத்து யாழ்ப்பாணம் வந்து மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றோம்.
அச்சமயம் இங்கு எங்கு பார்த்தாலும் இராணுவமயமாகக் காணப்பட்டது. படையினர் வீதிகளில் சுற்றித் திரிவதையும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதையும் கண்டேன்.
தற்போது இராணுவத்தினர் அவ்வாறு வீதிகளில் நிற்பதைக் காண முடியவில்லை. எனினும், தற்போது இராணுவம் மற்றும் காவல்துறையைச் சார்ந்த உளவுத்துறையினரின் கண்காணிப்பு, பின்தொடர்தல் போன்ற நெருக்கடிகள் உள்ளதென அறிந்தேன். குறிப்பாக, நான் பங்குகொண்ட நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொண்டதாக அறிந்து கொண்டேன்.
இது இவ்வாறிருக்க, இப்போது தமிழர் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையில் முரண்பாடு அதிகமாகத் தென்படுகின்றன.அத்துடன், தமிழ் மக்களிடையே அரசியல் தலைமைக்கான ஒரு வெற்றிடம் உள்ளது எனவும் உணர்கின்றேன். இதையிட்டு பெரும் கவலையடைகின்றேன்.
மேலும், தமிழ் மக்களிடத்தில் கடந்த காலங்களில் இருந்த அதே துயரமும் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
கேள்வி: தமிழ் மக்களிடையே அரசியல் தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக கூறுகின்றீர்கள். இதனை ஈடுசெய்யும் நிலைமை உள்ளதா?
பதில்: கடந்த காலங்களில் புலிகளின் தலைமை மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை
தந்தது. தற்போது பாராளுமன்ற ஜனநாயகப் பாதையில் தமிழ் மக்களிடையே பல தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு
நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய நிலையில் இல்லை.
எனவே, இங்கு அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக உணர்கின்றேன். நமது தமிழ் அரசியல் தலைமைகள் இதனை உணர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என கருதுகின்றேன். நிச்சயம் இவர்களிலிருந்து
நம்பிக்கைக்குரிய ஒரு தலைமை உருவாகுமென நம்புகிறேன்.
கேள்வி: தமிழகத்தில் பெரும் கட்சிகளின் தலைவர்களான செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் மறைந்த நிலையில் தற்போது இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்: செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் இல்லாத நிலையில் தற்போது மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அக்கட்சிகளை வழிநடத்துகின்றனர். இவர்கள் இருவருமே நீண்ட காலம் அரசியலில் இருப்பவர்கள்தாம். திடீரென அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. ஆகவே இவர்களுக்குத் தமிழ் ஈழ அரசியலும் புதிதல்ல. கடந்த காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் , அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எப்படி ஈழச் சிக்கலை அணுகியதோ அவ்வாறே இப்போதும் இவர்கள் இருவரும் அணுகுகின்றனர். எனவே இவர்களின் தலைமையில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஈழச் சிக்கலை புதிய கோணத்தில் அணுகும் நிலை ஏற்பட வாய்ப்பில்லை.
கேள்வி: தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மரநடுகை நிகழ்வில் பங்குகொள்ள ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?
பதில்: முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கடந்த 20 ஆண்டு காலமாகவே எனக்கு நன்கு அறிமுகமானவர். அண்மையில் தமிழகத்தில் என்னுடைய பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 17 அன்று பனம் விதைகள் நாட்டும் பணியினை மேற்கொண்டோம். ஓரிரு நாட்களில் பத்து இலட்சத்துக்கு மேலான பனம் விதைகளை நாட்டினோம்.
இதனைக் கவனித்த ஐங்கரநேசன் தனது இயக்கத்தின் மரநடுகை நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் இளைஞர், இளம்பெண்களுக்கு எமது தாய்மண் அறக்கட்டளைச் சார்பில் 100 சைக்கிள்களை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதன்படி மரநடுகை மற்றும் 100 சைக்கிள்கள் வழங்குதல் நிகழ்வுகளில் பங்கேற்கவே யாழ்ப்பாணம் வந்தேன். நவம்பர் மாதத்தை மரநடுகை மாதமாக அறிவித்திருப்பது நல்ல முயற்சி. இதைப் போல தமிழகத்திலும் குறிப்பிட்ட ஒரு மாதத்தை மரநடுகைக்கான மாதமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கேள்வி: முன்னாள் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு குறித்துக் கூற முடியுமா?
பதில்: முன்னாள் வடக்கு முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனைக் கடந்த சனிக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்தேன். சுமார் இரு மணிநேரம் அவரோடு உரையாடினேன் . தமிழ்நாடு, இலங்கை மற்றும் இந்திய அளவிலான அரசியல் குறித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். நிறைவாகத் தற்போது அவர் தொடங்கியுள்ள தமிழ் மக்கள் கூட்டணிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு மன நிறைவாக இருந்தது.
கேள்வி: தெற்கு அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: திடீரென இலங்கை பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
சிங்கள அரசியல் தலைவர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் இது நடந்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் அதிபரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடைவிதித்திருப்பதும் ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதும் சனநாயகத்தைப் பாதுகாத்திட வாய்ப்பளித்துள்ளது. இது அதிபரின் எதேச்சதிகாரத்துக்கு எதிராக விழுந்த பலத்த அடியாகும். இதற்குப் பின்னரும் சிறிசேன அதிபர் பதவியில் நீடிப்பது நாகரிகமாக இருக்காது. ராஜபக்ஷவுக்கும் இது ஒரு பாடமாகும்.
கேள்வி: இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழகத்தில் எவ்வாறு உங்கள் கட்சி செயற்படவுள்ளது?
பதில்: தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் பெரும்பாலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அங்குள்ள அரசியல் முரண்பாடுகளால் தி.மு.க. ஆதரவு, அ.தி.மு.க. ஆதரவு என்று அரசியல் கட்சிகள் பிரிந்து நிற்க நேரிட்டாலும் ஈழத் தமிழர்களுக்காக ஒரே குரலாக ஒலித்து வருகின்றனர். தேர்தலில் நிற்காத தமிழ் அமைப்புகளும் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் பிரிந்து நின்றாலும் ஈழப் பிரச்சினையில் ஒரே நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றன.
இதனால் இந்திய மத்திய அரசுக்கு அவ்வப் போது நெருக்கடியைக் கொடுக்க முடிகின்றது. மீண்டும் அப்படியொரு தேவை ஏற்பட்டால் விடுதலைச் சிறுத்தைகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒருமித்த குரலைக் கொடுப்போம்.
கேள்வி தமிழக அகதி முகாம்கள் குறித்து என்ன கூறுகின்றீர்கள்?
பதில்; தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் சுமார் ஒரு இலட்சம் பேர் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்து கொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும் . 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்ட மன்றத்தில் அகதிகள் சம்பந்தமாகப் பேசினோம். அன்றைய தி.மு.க. அரசு எமது கோரிக்கையை ஏற்று மாதாந்த உதவி தொகையை ஒரு மடங்கு உயர்த்தியது. மேலும் ஒரு சில முகாம்களில் குடிநீர் மற்றும் மின்சார வசதிகளைச் செய்து கொடுத்தது.
அதன் பின்னர் வந்த அ. தி.மு.க அரசும் மாதாந்த உதவித் தொகையை மேலும் சற்று உயர்த்தியது. எனினும், பிறநாடுகளில் ஈழத்தமிழர்களுக்கு செய்யப்படும் உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை தமிழகத்தில் இல்லையென்பது தான் உண்மையாகும். ஏனெனில் அகதிகள் தொடர்பான ஐ.நா.வின் சர்வதேச சாசனத்தில் இந்திய அரசு இன்னும் கையெழுத்திடவில்லை. ஆகவே தான் அகதிகளின் நலன்களில் இந்திய அரசுக்கோ தமிழக அரசுக்கோ போதிய அக்கறையில்லை. எனவே, ஐ.நா. சாசனத்தில் இந்திய அரசு கையெழுத்திட வேண்டுமென எமது கட்சி வலியுறுத்தி வருகின்றது.
கேள்வி: யுத்தம் முடிவடைந்தவுடன் 2009இல் இந்தியப் பாராளுமன்றக் குழு அன்றைய அரசத் தலைவர் ராஜபக்சேவைச் சந்தித்த வேளையில், அவர் உங்களுடன் பகிடியாகப் பேசிய போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?
பதில்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க இருக்கின்றோம் என்ற விடயம்
நாங்கள் கொழும்பில் ஒரு ஹோட்டலில் இருந்த போது எமக்கு சொல்லப்பட்டது. அது எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அப்போது அவரைச் சந்திக்காமல் தவிர்க்க நினைத்தேன். ஆனால் உடனிருந்த சக உறுப்பினர் ஒருவர், அவ்வாறு
செய்தால் அது பாராளுமன்றக் குழுவை அவமதித்ததாக ஆகிவிடும். எனவே
சந்திப்பைத் தவிர்க்க வேண்டாம் என்று கூறினார். அதனால் வேறுவழியின்றி நானும் உடன் சென்றேன்.
நாங்கள் அவரைச் சந்திக்க அவரது அலுவலகத்தில் காத்திருந்தோம். ஒரு சில நிமிடங்களில் ராஜபக்ஷ அங்கு வந்தார். உடனே பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். பிறகு அவர் பேச தொடங்கினார். ஓரிரு நிமிடங்களில் திடீரென என்னைச் சுட்டிக்காட்டி இவர் தமிழ் நாட்டில் எங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றார். எங்கள் கருத்தை இவர் ஒரு நாளும் கேட்டு அறிந்ததில்லை என்று சொன்னார்.
நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நம்மைப் பற்றிய தகவல்களை அறிந்து வந்திருக்கிறாரே என்று அதிர்ச்சியடைந்தேன். பின்னர், சில நிமிடங்களில் அச்சந்திப்பு முடிந்தது. உடனே நான் அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். ஒரு சில உறுப்பினர்கள் ராஜபக்ஷவை சூழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே இருந்த புகைப்பட பிடிப்பாளர் ஒருவர் என்னிடம் ஜனாதிபதியுடன் சேர்ந்து ஒரு குழு படம் எடுக்க வேண்டும் பொறுங்கள் என்று கூறினார். சரி என்று நான் சற்று ஓரமாகத் தள்ளி நின்றேன். ராஜபக்ஷவும் மற்ற உறுப்பினர்களும் பேசிக்கொண்டே வந்தார்கள். நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்ததும்
அனைவரும் வரிசையாக நிறுத்தப்பட்டனர். உடனே விறுவிறுவென புகைப்பட பிடிப்பாளர்கள் படம் எடுத்தார்கள். அப்போதுதான் திடீரென ராஜபக்ஷ எனக்கு பக்கத்தில் வந்து என் கையைப் பிடித்துக் கொண்டே பகிடியாக டி.ஆர்.பாலுவிடம் கூறினார்.
இவர் பிரபாகரனுக்கு ரொம்ப வேண்டியவர். நல்ல வேளை யுத்தம் நடக்கும் போது அவரோடு இல்லை. இருந்திருந்தால் இவரும் மேலோகம் போய் சேர்ந்திருப்பார் என்று கிண்டல் அடித்தார்.
அப்படி அவர் சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அந்தச் சூழலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்துப் போனேன். சக உறுப்பினர்களுடன் சேர்ந்து நானும் சிரித்துச் சமாளித்தேன். அவர் என்னைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு வந்துள்ளாரே என்று அதிர்ச்சியடைந்தேன்.
குறிப்பாக,அக்குழுவில் உள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான் மட்டும் புலிகளுக்கு ஆதரவாளன் என்பதை அவர் தெரிந்து கொண்டு தானே அப்படி அவர் பகிடி விட்டிருக்கின்றார் என்பதும் என் மீது அவருக்கு எவ்வளவு கோபம் இருந்தது என்பதும் அவரது பகிடியில் வெளிப்பட்டது.