கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின்
சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
முதலில் எல்லோரையும் கைது செய்தனர்
சிலரது கண்களை கட்டினர்
சிலரது கைகளை கட்டினர்
இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன
வரிசையாக இருத்தப்பட்டனர்
புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும்
வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர்
மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில்
குருதியின் மேலாய் பூக்களை தூவ
தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள்
மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது
உருக்கிக் கொட்டுகிறது
சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது
கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன
துப்பாக்கிகள் விசாரணை செய்கின்றன
பிரிபடாத நிலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.
சடலங்களால் நிரம்பிய நிலத்தில்
கனவு முறியடிக்கப்பட்ட இரத்தத்தில்
அநியாயம் வென்று களிக்கும் வெறியில்
இனம் துடிக்கும் பெருங்கொலைகளின் தொடர்ச்சி நிகழ்ந்தன
அந்த இரத்தம் வெளியில் தெரிய வேண்டி வந்தது
அந்த கூக்குரல்கள் வெளியில் கேட்க வேண்டி வந்தன
அந்தக் காட்சிகள் வெளித்தெரிய வேண்டி வந்தன
சித்திரவதைகளினால் அந்தப் பெருநிலம் அதிர்ந்து கொண்டிருந்தது.
இரத்தம் வடிந்து நனைந்து போன நிலத்தில் இருத்தப்பட்டனர்
மண் சித்திரவதை செய்யப்பட்ட நிலத்தில் இருத்தப்பட்டனர்
மழை வெருண்டபடி மேலும் அழுகின்றது.
– தீபச்செல்வன்