நாரை தலைகுனிந்திருக்கும்
எல்லாப் பூக்களும் சிவக்கும்
ஒரு பறவையாய் அசையும் நிலத்திற்
புரள்வாள் தாய்
வானம் மண்ணில் உருகித் தீரும்
காந்தளின் விழிகள் கசியும்
சிறகுகளில் விளக்குகளை சுமந்து
துயில் நிலங்களை வட்டமிடும்
பறவைகள் வரையும் தேச வரைபடத்தை
எல்லோரும் குரலெடுத்து அழைப்பர்
தாய் நிலம் கேட்டு
கல்லறைகள் கண் விழிக்கும்
வீரத் தலைவனின் பேருரை கேட்க
ஒரு புலியென உறுமும் தேசம்
மிலாசும் பெருந்தீயாய்.
– தீபச்செல்வன்