ஸ்ரீலங்காவின் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தெரன ஊடகத்தின் ஊடகவியலாளர் இந்திக்க ஹந்துவெல மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட கடற்படை புலனாய்வு அதிகாரி பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் முறைப்பாட்டை செய்ய மறுத்ததை அடுத்தே விடுவிக்கப்பட்டதாக பொலிசார் அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும் முப்படைகளின் பிரதானி நீதிமன்றிற்கு வந்தது முதல் அங்கு குவிந்திருந்த கடற்படை அதிகாரிகளும், கடற்படை புலனாய்வாளர்களும் செய்தி சேகரிக்க விடாது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை பகுதிகளில் வைத்து 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றும் (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சிக்கு தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இதற்கமைய இன்றைய விசாரணைகள் இன்று பிற்பகல் 2.15 க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய அட்மிரல் விஜேகுணரத்ன, தனது வாகனத்தில் சென்றபோது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவுசெய்ய முயற்சித்த ஊடகவியாளர்கள் மீது முப்படைத் தளபதியின் பாதுகாப்பிற்காக வந்திருந்த கடற்படை புலனாய்வு அதிகாரியொருவர் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஊடகவியலாளரை தாக்கிய சிவில் உடையில் இருந்த கடற்படை புலனாய்வு அதிகாரியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கமைய நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட கடற்படை புலனாய்வு அதிகாரியை நீதவான் கடுமையான எச்சரிக்கையை விடுத்து விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை சாட்சிகளை மறைத்த மற்றும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிற்காக விளக்கமறியல் உத்தரவைப் பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது புகைப்படங்களையும், காணொளிகளையும் பதிவுசெய்த ஊடகவியலாளர்களுக்கு படைத்தளபதியின் புலனாய்வு அதிகாரிகள் மறுபடியும் இடையூறுகளை விளைவித்தமை குறிப்பிடத்தக்கது.