மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இருந்து யாழ்பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவம் இளநிலை பட்டப்படிப்பு முடித்து பின் கண்டி பெரதேனியா பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டமும் பெற்றுள்ளார். புதிய முயற்சிகளை பரீட்சித்துப் பார்ப்பதில் எப்போதும் ஆர்வமுடையவராக இருக்கும் இவர், தற்போது ஒருங்கிணைந்த பண்ணையத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். சசிகுமாரின் பண்ணையின் பெயர் VOVELS ஆகும். மாடுகளின் கழிவுகளை எரிவாயுவாக்கி அதனையே சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறார். அத்துடன், மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு என பல்வேறு விடயங்களிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார். விவசாயம், கால்நடை தொடர்பான கருத்தரங்குகள் கண்காட்சிகள் எங்கு நடந்தாலும் பெரும்பாலும் அங்கு ஆஜராகிவிடுவார். தற்போது இயற்கைவழி இயக்கத்தில் இணைந்து முக்கிய செயற்பாட்டளாராகவும் ஈடுபட்டு வருகின்றார். 2016 ஆம் ஆண்டு வடமாகாணத்தின் சிறந்த பாற்பண்ணையாளர் விருதினையும் வேறுபல பெறுமதி மிக்க விருதுகளையும் வென்றுள்ளார். கால்நடை பண்ணை, சேதன விவசாயம் என சாதிக்கும் அவருடன் பேசியதில் இருந்து,
2015 ஆம் ஆண்டு 25 பால்மாடுகளுடன் பண்ணையை ஆரம்பித்தேன். மாடுகளுக்கு பசுந்தீவனம் வளர்ப்பதற்கு உரிய முயற்சிகளை செய்யாத காரணத்தினால் மாடுகளுக்கு தீவனத்தை பெறுவது பெரும் சிரமமாக இருந்தது. இதனால் எதிர்பார்த்தளவு இலாபத்தை பால் உற்பத்தியில் இருந்து பெற முடியவில்லை. மாடுகளுக்கு முக்கியமானது தீவனம் தான். இதற்கு ஒரு மாற்றுத்திட்டத்தை சரியாக வகுக்கலாம் பெரிய அளவில் பண்ணையை கொண்டு செல்வது கடினமாகும். இயற்கை வழி இயக்கத்துடன் இணைந்து செயற்பட தொடங்கியதன் பிற்பாடு இயற்கை விவசாயத்தையும் செய்து பார்க்கலாம் என்கின்ற ஆர்வம் வந்தது. 10 பைகளில் சேதன பசளைகளை கொண்டு தொடங்கிய மரக்கறிப் பயிர்கள் இன்று 500 பைகளையும் தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. பத்து வல்லாரைக் கன்றுகளை வட்ட வடிவமான பாத்தியில் நட்டேன். அது இப்போது மிகச் சிறப்பாக பற்றிப் படர்ந்து வளர்ந்துள்ளது. பண்ணையின் பின்புறம் உள்ள சிறிய காணித்துண்டிலும் மரக்கறிப் பயிர்களை பயிரிட உள்ளேன்.
இயற்கையில் விளையும் மரக்கறிகளை இயற்கை வழி இயக்கத்தின் வாராந்த வெள்ளிக்கிழமை அங்காடியில் விற்பனை செய்யக் கூடியதாக உள்ளது. எனது குடும்பத்தினரும் சேதன முறையில் விளைந்த மரக்கறிகளையே விரும்பி உண்கின்றனர். நண்பர்களையும் சேதன மரக்கறிகளை பயன்படுத்துமாறு ஊக்குவித்து வருகின்றேன். உதாரணமாக சேதன முறையில் விளைந்த பயற்றங்காயை பச்சையாக சாப்பிட்டாலே அதன் இயற்கையான சுவை அலாதியாக இருக்கும்.
தற்போது பால்மாடுகளை விற்றுவிட்டு வெளிமாவட்டத்தில் இருந்து நல்லினக் கன்றுகளை வாங்கி வளர்த்து வருகின்றேன். எமது வெப்பமான காலநிலையில் அந்தக் கன்றுகளை வளர்த்தெடுக்க பெரும் சிரமங்களை எதிர்நோக்கினாலும், பல சவால்களையும் எதிர்கொண்டு வளர்த்து வருகின்றேன். இதன் மூலம் நல்லின பால் மாடுகளை உருவாக்குவதே என் நோக்கம். தற்போது CO3 புல்வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றேன்.
விவசாய திணைக்களம், கால்நடைத்திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் எமது பண்ணைக்கு பல்வேறு உதவித்திட்டங்களையும், ஊக்குவிப்புக்களையும் வழங்கி வருவதோடு பெறுமதியான ஆலோசனைகளையும் வழங்கி வருவது தான் இந்தப் பண்ணையின் இன்றைய வளர்ச்சிக்கு காரணமாகும்.
பண்ணையில் உயிர்வாயு தொட்டி அமைத்துள்ளபடியால் இயற்கையாகவே உயிர்வாயுவை பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. கிழமையில் இரண்டு நாட்களுக்கு பண்ணையில் சேரும் மாட்டு சாணியை இயற்கை எரிவாயுத் தொட்டியில் போட்டால் ஏழு நாள் சமையலுக்கு தேவையான எரிவாயு கிடைக்கும்.
விவசாயத்தில் ஒரு பண்ணையத்தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களை கூட்டாக மேற்கொள்ளுதலே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும். இதனுடைய சிறப்பு என்னவென்றால் ஒரு பண்ணைத் தொழிலின் கழிவுப்பொருள் மற்றொரு பண்ணைத்தொழிலுக்கு பசளையாக மாறுவதால், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கின்ற நீர்வளத்தை சிறப்பாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெற்று வருடம் முழுவதும் இலாபம் கிடைக்க ஏதுவாகிறது. அதனையும் விட ஒன்றால் சிலவேளைகளில் நட்டம் ஏற்படுமாக இருந்தால் அதனை மற்றையது ஈடு செய்யும், உதாரணமாக எனது பண்ணையில் உற்பத்தியாகும் மாட்டெரு தான் எனது சேதன மரக்கறி உற்பத்திக்கு பிரதாக மூலப்பொருளாக விளங்குகிறது. இதையும் தவிர மாட்டு சலத்தையும் பெரியதொரு கொள்கலனில் சேமித்து விவாசய நிலத்துக்கு விசிறப்படுவதால் சிறந்த இயற்கை உரமாக, கிருமிநாசினி அமைகின்றது.
அசோலாவை பொறுத்தவரை எமது பண்ணையில் அது சிறப்பாக வளர்ந்து வருகின்றது. வேப்ப மரத்துக்கு கீழ் தான் அசோலாத் தொட்டியை அமைத்துள்ளேன். அதற்குள் கப்பீஸ் ரக மீனும் வளர்த்து வருகிறேன். இதனால் அதனுள் நுளம்புக் குடம்பிகள் உருவாகாது. அசோலாவை நாட்டுக் கோழிகளும் விரும்பி சாப்பிடுகின்றன. அசோலா போடுவதால் கோழியின் வளர்ச்சியில் வித்தியாசம் தெரிகிறது. அசோலா வளர்ப்பைச் சரியாக மேற்கொண்டால் அது ஆடு மாடுகளில் இருந்து கோழி, தாரா வரை பெரும்பகுதி விலங்குகளின் உணவுத்தேவைகளை ஈடு செய்யும்.
மாடுகளுக்கு தீவன தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ‘ஹைட்ரோபோனிக்’ முறையை பரீட்சித்து பார்த்ததில் வெற்றி கிடைத்தது. ‘ஹைட்ரோபோனிக்’ எனும் முளைப்பாரி தீவனப்பயிர்களை மண் இல்லாமல் எட்டு நாளில் வளர்த்து கால்நடைகளுக்கு உணவாக தரலாம். சோள விதைகளை ஒரு நாள் தண்ணீரில் ஊறவைத்த பின்னர், நான்கு மணி நேரம் உலரவிட வேண்டும். இவற்றை ஓர் ஈரமான சாக்கில் போட்டுவைத்தால் முளைப்பு வந்துவிடும். தொடர்ந்து, தட்டுகளில் அந்த முளைப்புகளை வைத்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது தண்ணீர் விட்டால் போதும். எட்டாவது நாளில் ஒரு அடி வரை வளர்ந்துவிடும். அவற்றை அப்படியே கால்நடைகளுக்கு தீவனமாக தரலாம். ஒரு கிலோ விதையில், 8 கிலோ தீவனம் பெறலாம். இதற்கு தண்ணீர் அதிகம் செலவாகாது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால், பாலில் ஒரு சதவீதம் கொழுப்பு சத்து அதிகரிக்கும். விவசாயிகள் வறட்சி காலம் மட்டுமின்றி எந்த சமயத்திலும் இம்முறையை கையாளலாம் என்றார்.
மாடுகளுக்கு தீவனம் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இருந்தால் மாடு வளர்ப்பது எளிதானதாகும். ஒருங்கிணைந்த பண்ணைகள் எம் தேசமெங்கும் பெருகினால் தான் நாம் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி நகர முடியும். பட்டப் படிப்பு படித்துவிட்டு அரசாங்க வேலைக்காக மட்டும் வீதியில் அலையும் இளையோர் மத்தியில் தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கும் சசிகுமாருக்கு நிமிர்வின் பாராட்டுக்கள். ஒவ்வொரு இளையோரும் எம்மிடம் இருக்கும் வளங்களை வைத்து எப்படி முன்னேறுவது என சிந்திக்க வேண்டும். அப்போது எம் தேசம் வளமாகும்.
தொடர்புகளுக்கு- 0773187946
துருவன்
நிமிர்வு 2018 ஒக்டோபர் இதழ்