பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம், அரசியல் கைதிகள் விடுவிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விரைந்து நீதி வழங்கல், பொது மக்களின் காணிகள் விடுவிப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கில் பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய கவனயீர்ப்பு பேரணியினை இன்று காலை முன்னெடுத்திருந்தனர்.
இந்த கவனயீர்பு பேரணியானது அம்பறை மாவட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் வாக்கிரிசா வீதியில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சென்று திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுர வலையில் வரிசையாக நின்று தமது கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
சுமார் இருநூறுக்கும்(200) மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் பணிக்குழு அறிக்கையினை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், படையினரிடம் இருக்கும் பொது மக்களின் காணிகள் உடன் கையளிக்க வேண்டும், நல்லாட்சி அரசே இரும்புக் கூட்டுக்குள் அரை உயிருடன் இருக்கும் எமது உறவுகளின் உயிகளை காப்பாற்றுங்கள், பத்து வருடங்களாக நாம் வீதியில் போராடி வருகின்றோம் சர்வ தேசமும், ஜ.நா.சபையும் மனித உரிமை தாபனமும் எமக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பேரணியில் கலந்து கொண்டு இருந்தனர்.
இங்கு பேரணியின் முடிவில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் அக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஆகியோரும் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் திருகோணமலை சங்கத் தலைவி திருமதி செ.சறோஜாதேவி கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை அரசு எமக்கான நீதியை வழங்காத நிலையில் இன்று சர்வ தேசத்திடம் நீதி வேண்டி கையேந்தி நிற்கின்றோம். நாங்கள் பத்து வருடங்களாக வீதியில் நீதி கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றோம். இன்றுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை. சர்வதேசம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் ஊடாக விரைவாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுகின்றோம்.” என தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி கருத்து தெரிவிக்கையில்,
“தொடர்ந்து நாம் வீதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வேண்டி பத்து வருடங்களாக போராடி வருகின்றோம். எம்மை இலங்கை அரசும் தமிழ் அரசியல் வாதிகளும் கண்டு கொள்ளாது இருப்பது எமக்கு வேதனை அளிக்கின்றது. இந்நிலையில் நாம் மழையையும் பாராது சர்வ தேசத்திடம் மடிப்பிச்சை கேட்டு கையேந்தி இன்று இந்த போராட்டத்தினை செய்கின்றோம்.” என தெரிவித்தார்.
இதேவேளை அம்பாறை மாவட்ட தலைவி தம்பியப்பா செல்வராணி கருத்து தெரிவிக்கையில்,
“நாம் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி பத்து வருடங்களாக இலங்கை அரசிடமும் பல தடவைகளுக்கு மேலாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசின் முக்கியமானவர்களிடமெல்லாம் கோரிக்கை விடுத்தும் இதுவரை ஒன்றும் பயனளிக்கவிலை. இந்நிலையில் இன்று சர்வ தேசத்தினையே இறுதியாக நம்பி இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.” என தெரிவித்தார்.
அத்துடன் அம்பாறை மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் வாணிசைமன் தனது கருத்தினை தெரிவிக்கையில்,
“இன்று இலங்கை நாட்டின் பாராளுமன்றத்திற்குள் ஜனநாயகம் காணாமல் போய் இருக்கின்றது. யுத்த காலம் தொடக்கம் யுத்தம் நிறைவடைந்தும் தமது உரிமைக்காக தொடர்ந்தும் பெண்கள் வீதியில் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் சர்வ தேசம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் போன்ற அவல நிலைகளுக்கு விரைவாக நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் நாட்டில் உள்ள பயங்கரவாத சட்டத்தினையும் நீக்குமாறு கோரிக்கை விடுகின்றோம்.” என்றார்.