அதன் கட்டுப் பலமிழந்து இருந்ததால், அது தாங்கக்கூடியளவு நீர் நிறைந்ததும் உடனடியாக வான் கதவுகளைத் திறந்து விடுவதே நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு அப்போது இருந்த ஒரே தீர்வு. ஒரு பைக்கெற்றுச் சீமெந்தைக்கூடப் பெற முடியாத நிலையில் பொருளாதாரத் தடை இறுக்கமாக இருந்தது. மழை அதிகமாகப் பெய்து நீர்க் கொள்ளளவு அதிகரித்திருந்த ஒரு சூழலில் குளத்தின் வான் கதவை உடனடியாகத் திறந்து நீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், வான் கதவின் அடியில் சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருந்த, இரும்பு ஆணி ஒன்று கழன்று விட்டதால் வான் கதவைத் திறப்பது சாத்தியப்படவில்லை.
பெண் போராளிகளின் துணிகரச் செயல்
வான்கதவைத் திறப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் பல முயற்சிகளை முன்னெடுத்தும் அது முடியாமல் போனது. இதனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளிடம் சுழியோடி ஒருவரை இதைச் சீர்செய்யும் வேலையைச் செய்து தருவதற்குத் தந்துதவுமாறு கோரப்பட்டது.
கடற்புலிகளும் அதை ஏற்று ஒரு சில நிமிடங்களில் இரண்டு பெண் போராளிகளை அனுப்பியிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் போராளி நீச்சல் உபகரணங்களை அணிந்து கொண்டு நீரில் குதித்து உள்ளே போய்ப் பார்த்துவிட்டு வெளியே வந்து குறிப்பிட்ட ஆணிதான் வான் கதவைத் திறக்கமுடியாமலிருப்பதற்குக் காரணம் என்பதை உறுதி செய்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின ரைக்கொண்டு அந்த ஆணியை உடனடியாகத் தருவித்து மறுபடியும் நீருக்குள் புகுந்து சென்று சில நிமிடங்களில் அதைப் பூட்டிச் சீர் செய்திருந்தார். உடனடியாக வான்கதவைத் திறந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீரில் இருந்து குளக்கட்டுப் பாதுகாக்கப்பட்டது.
அன்று கடற்புலிகளின் சுழியோடிப் போராளிகள் அந்தப் பணியை நிறைவேற்றியதால் இரணைமடுக்குளக் கட்டில் ஏற்படவிருந்த இடர் தடுத்து நிறுத்தப்பட்டது.
போராட்ட வரலாற்றில் இரணைமடு
மிழீழப் போராட்ட வரலாற்றில் இரணைமடுக்குளத்துக்கும் அதை அண்மித்த பெருங்காட்டுக்கும் முக்கிய இடமுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் அவரது துணைவியாரும் கொழும்பு வானூர்தி நிலையம் ஊடாக உள்நாட்டுக்குள் கால் பதிக்க முடியாத நிலை அப்போது இருந்தது.
அந்தச் சூழலில் ஐரோப்பாவில் இருந்து அவர்கள் இருவரும் மாலைதீவுக்குச் சென்று, அங்கிருந்து தண்ணீரில் இறங்கக்கூடிய சீப்பிளேன் ஒன்றின் உதவியுடன் இரணைமடுக்குளத்தில் வந்திறங்கினார்கள். அவர்கள் தரையிறங்கிய பகுதி்க்கு விரைந்த தலைவர் பிரபாகரன் படகிலிருந்து கைலாகு கொடுத்து அவர்களைக் கரையேற்றியிருந்தார்.
விடுதலைப் புலிகளின் இரகசிய விமானத் தளமும் இரணைமடுக் காட்டுப் பகுதிக்குள்ளேயே உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் பின்னர் வெளிப்பட்ட விடயங்களாக இருக்கின்றன. இப்படியாகப் புலிகளால், கேந்திர முக்கியப்படுத்தப்பட்டிருந்த இரணைமடுக் காட்டையும் குளத்தையும் புலிகளிடமிருந்து மீட்டமை என்பது சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை சாதனைதான்.
போரின் பின்னரான மாற்றம்
2010ஆம் ஆண்டின் பின் இரணைமடுக்குள விடயத்தில் பல புதினங்கள் நடந்தேறின. மகிந்த அரசு போரை வெற்றி கொண்ட பிறகு முதல் தடவையாக அதைச் சூழ்ந்த பிரதேசங்களில், நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு 2011ஆம் ஆண்டு அறுவடை விழா ஒன்று கிளிநொச்சி– உருத்திரபுரத்தில் நடத்தப்பட்டிருந்தது. அந்த விழாவுக்கு அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வருகை தந்தார். இரண்டு கிலோ மீற்றர்கள் நீளமுடையது இதன் கட்டு. நீரேந்து பகுதி, நீள் வட்ட அமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்துக்குள்ளே காணப்படுகின்றது.
இதன் கொள்ளவான 36அடி நீரைத் தேக்க முடியாத நிலை நீண்ட காலமாகக் காணப்பட்டு வந்தது. தற்போது அந்த இலக்கு நிறைவு செய்யப்பட்டு அதற்குரிய வான் கதவை சிங்கள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார். வான் கதவைத் திறந்து விட்டு அங்கு உரையாற்றிய அரச தலைவர் ‘’வடக்குக்கான மிகப் பெரிய நீர்த் தேக்கத்தை மக்களிடம் கையளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சூழலை ஏற்படுத்தித் தந்த முப்படை களுக்கும் நன்றிகூறுவதற்குக் கடமைப்பட்டுள்ளேன்.’’ எனவும் ‘‘இந்த முழுமைப்படுத்தப்பட்ட இரணைமடு நீர்த்தேக்கமானது வடக்குக்கான நல்லிணக்கத்தைப் பலப்படுத்த உதவும்’’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மக்களைக் கவனிக்காமல் அரசியல் நிகழ்த்தப்படுகிறது
இரணைமடுக்குளம் புலிகளின் முக்கிய மான ஒரு மையமாக இருந்தது. புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏனைய தமிழ்த் தலைவர்களுக்கும் முக்கியமானதாகக் காணப்பட்டது. தற்போது சிங்கள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முக்கியமதானதாக இருக்கிறது.
பிற்பட்ட வர்களின் நோக்கு நிலைகளில் கிளிநொச்சி மக்களின் விவசாயம் என்பதாக அரசியலே முன்னி றுத்தப்படுகிறது. மாத்தளை -– மொறஹாகந்த நீர்த் தேக்கத்திலிருந்து வறட்சியான காலங்களில் இரணைமடுக்குளத்துக்கு நீரை ஊட்டுகின்ற வேலைத் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இரணைமடுவின் வான் கதவுகளைத் தானே வந்து திறந்து,அதற்கான சான்றுகளையும் நிறுவிவிட்டுச் சென்றுள்ளமையானது இதுவரை மாகாண நீர்த்தேக்கமாக இருந்த இரணைமடுக் குளத்தைத் தேசிய நீர்த்தேக்க மாகத் திரு நிலைப்படுத்திய தாக எடுத்துக்கொள்வதற்கே வகை செய்கிறது. ஒட்டுக்குழு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த சந்திரகுமார், ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த சம்பந்தர், சிறீதரன், ஐங்கரநேசன் ஆகியோரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எனப்பலரும் இரணைமடுவின் இந்த வான் கதவுகளை 2010ஆம் ஆண்டின் பின்பான காலத்தில் தமது அரசியல் தேவைகளுக்குப் பயன்படுத்தியிருந்தனர்.
தற்போது அரச தலைவர் இந்த வான்கதவுகளைத் திறந்து விட்டது என்பது வேறொரு பரிமாணத்தை அதாவது தேசிய பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது.
போர் இடம்பெற்ற காலத்தில், இந்தக் குளத்தின் வான்கதவுகளை, பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கமக்காரர் அமைப்பினர் எனப் பலரும் அவதானித்து அதற்குப் பொறுப்பான ஊழியர்களால் அந்தக் கதவுகளைத் திறந்து விடுவதே வழமையாக இருந்து வந்தது.
அப்போது அவர்கள் மிகச் சாதாரணமாக மேற்கொண்ட பணியைத் தற்போது மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிங்கள அரச தலைவர் எனப் படம் காட்டித் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் சிங்கள அரச தலைவர் குள வேலையை முழுமைப்படுத்தி மக்களிடம் கையளித்தது என்பது தேசிய நீர்ப்பாச னத் திட்டத்துக்குள் உள்ளடக்கப்படவிருக்கும் பெரிய நடவடிக்கை ஒன்றின் முதல் படி என்று நோக்கினல், அது தவறில்லை. இரணைமடுக்குளம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு நீர் வழங்குவது என்பதற்கு அப்பால், ஒர் அரசியல் குளமாகவும் மாறியுள்ளது.