சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாகச் செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுக்களை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம், செயற்குழு செயலாளரும் வடமேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்Vவின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் குருநாகலில் அமைந்துள்ள வடமேல் மாகாணசபையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு முடிவுரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது: –
அரசியல் நெருக்கடி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் மத்தியில் நற்பெயரைச் சம்பாதித்துள்ளது. அதேவேளை, எமது கட்சியின் அரசியல் நகர்வுகள் குறித்து சிலர் வைத்திருக்கின்ற தப்பபிப்பிராயங்களையும் அது போக்கியுள்ளது.
தேசிய கட்சிகளுடன் நாங்கள் உறவு கொண்டாடுகின்றபோது, தமிழ் கட்சிகளுடனான எங்களதுஉறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன. நாங்கள் எவ்வளவுதான் நெருக்கமாக நடந்தாலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புடன் முரண்பாடுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன.
எதிர்வருங்காலங்களில் தேர்தல்களுக்கு முன்னர் இல்லாவிட்டாலும் தேர்தல்களின் பின்னராவது, மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள்அனைத்தும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாகச் செயற்படமுடியுமா என்பது பற்றிநாங்கள் சிந்திக்கின்ற காலம்வந்துள்ளது. முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளில் நிர்வாக ரீதியில் விடை தேடவேண்டிய நூற்றுக் கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று, என்ன நிபந்தனைகள் விதித்தாலும் தமிழர் தரப்புடன் பேசாமல் நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற யதார்த்தையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் பிரச்சினை, நிர்வாகப்பிரச்சினை, இனப்பிரச்சினை போன்றவற்றுக்கு தீர்வு காண்கின்றபோது அவை யதார்த்தமாக இருக்கவேண்டுமானால் அது ஒரு புறத்திலிருந்து மாத்திரம் பெறக்கூடிய தீர்வகாக இருக்கமுடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில், கூட்டு வைத்திருக்கும் தேசியக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருகின்ற அதே நேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தேவையேற்படின் மலை யகக் கட்சிகளுடனும் சமாந்தரமாகப் பேசவேண்டும்.
தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன. இவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் தீர்வைத் தந்துவிடும் என்ற இறுமாப்பில் எதனையும் செய்துவிட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் தேர்தலுக்கு செல்வதற்கு முன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என எமது நாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சுக்கள் அடுத்த வாரமே ஆரம்பிக்கப்படவுள்ளன” என்றார்.