12 ஆம் திகதி வரப்போகும் பிரேரணையின் முக்கியத்துவம்.
நிபந்தனைகளின் மூலமாக ரணிலுக்கு ‘செக்’ வைக்கும் சஜித்.
உடன் தேர்தலுக்குச் செல்ல ரணில் மகிந்த உடன்பாடு?.
ரணில் விவகாரத்தில் இறுக்கத்தை தளர்த்துவாரா மைத்திரி?.
“அக்டோபர் புரட்சி’ என உலகளாவிய ரீதியில் பேசப்பட்டுவந்த அரசியல் சொல்லாடலுக்கு மத்தியில், இலங்கை அரசியல் வரலாற்றில் 2018 அக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியலமைப்பு சதிப்புரட்சி காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது முக்கியமானது.
இன்று நாட்டில் ஒரு அரசாங்கம் இல்லை. ஆனால், பாராளுமன்றம் இருக்கிறது. அங்கே உள்ள உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மாத்திரம் தமது கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் அரசாங்கத்தின் சேவையாளனாக மக்களுக்கு எந்த சேவையையும் பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்றுத்துறைக்கு கீழ் இயங்கக்கூடிய நிர்வாகத்துறையின் ஒருபக்கம் மாத்திரம் இயங்குகிறது. ஆனால் இந்த இயக்கத்துக்கு தேவையான நிதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய சூழல் வரும்போது நாடு குழப்பமான பொருளாதார சூழ்நிலை நோக்கி சென்று மக்கள் வீதிக்கு இறங்குவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கின்றன. அதற்கு முன்னதாக இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கான பகீரத பிரயத்தனமே இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
அத்தகைய நகர்வுகள் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தெளிவாக தெரியும் என்கின்ற போதும் அதற்கு வெளியே இடம்பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய அரசியல் நிகழ்வுகளை சற்று ஆராயலாம்.
அவசரமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அரசியலில் பழுத்த அனுபவமுடையவர். அவர் அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, பிரதமராக, நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்து தன்னை மேலுயர்த்த எத்தனித்துக் கொண்டிருந்த வேளை அவருக்கு “போனஸ்’ ஆக வந்து கையில் கிட்டியதே இந்த ”திடீர்” பிரதமர் பதவி. இப்போது இடைக்காலத் தடை மூலம் அந்தப் பதவி கேள்விக்கு உட்படுத்தி உள்ள போதிலும் கூட, பதவி இருக்கிறது கடமைகள் செய்யத்தான் இடைக்கால தடை என்றும் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றில் மனு செய்திருப்பதாகவும் கூறும் அவரது உள்ளார்ந்த எண்ணம் இதுதான். “இன்னும் இரண்டு வருடம் காத்திருந்தால் நான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பிரமதராகி இருப்பேன் என்பது உண்மைதான். ஆனால் அதற்கிடையில் போனஸ் ஆக கிடைத்ததை ஏன் கைவிடவேண்டும்’.
அவரது எண்ணத்தின்படி அது “போனஸ்’தான். அதனை தக்கவைக்க அவர் செய்த கைங்கரியங்கள், நடத்தைகள் அவரது பிரதான இலக்கான இரண்டு வருடத்திற்கு பின்னரான மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை இப்போது கேள்விக்கு உட்படுத்தி இருக்கின்றது என்பது மாத்திரம் உண்மை. இது அவர் சறுக்கிய இடம் என்பதும் இப்போது அவருக்கும் புரியாமல் இல்லை. இனி அவர் மீண்டு எழ “அனைத்துவித’ ஆயுதங்களையும் கையில் எடுப்பார். அதில் பிரதானமானது இனவாதமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
அடுத்தது ஜனாதிபதி மைத்திரி மகிந்தவுக்கு ஏன் இந்த “போனஸ்’ வாய்ப்பினைக் கொடுத்தார் என்பது பார்க்கப்படவேண்டியது. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு அடுத்து 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரும் வரை தன்னைப் பற்றிய ஒரு அதீத கணிப்பீட்டில் இருந்தவர் மைத்திரி. தன்னிடம் ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப்போன தனது தலைவரான மகிந்த ராஜபக்ஷ தனது கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை தோற்கடிப்பார் என இவர் எண்ணவில்லை. ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின்னரான மகிந்தவின் அரசியல் நகர்வுகள் மைத்திரிக்கு மாத்திரமல்ல சந்திரிக்காவுக்கும் எதிரானதாக வளர்ததெடுக்கப்பட்டது என்பதனை உணரவேண்டும். மைத்திரியை ஜனாதிபதியாக்குவதில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பங்கு முக்கியமானது. சந்திரிக்காவின் நோக்கம் மைத்திரியை ஜனாதிபதியாக்குவது மட்டுமல்ல மகிந்தவிடம் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியையும் மீட்டெடுப்பதும் ஆகும். எனவே தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரி தலையில் குருவி தலையில் பாராங்கல்லாக சுதந்திர கட்சியின் தலைவர் பதவி சுமத்தப்பட்டது. அந்த சுமையை அவரால் தூக்கிச் செல்ல முடியவில்லை. இன்றைய நிலையில் சுதந்திர கட்சியானது அதன் 1977 ஆம் ஆண்டு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
மறுபுறம் “பண்டாரநாயக்க’ எனும் பெயரின் பின்னணியில் இருப்பதால்தானே சந்திரிக்கா பண்டாரநாயக்க அதிகாரத்தில் இல்லாதபோதும் தனது பதவியை பறிக்க முடிகிறது என எண்ணிய மகிந்த குழுவினர் “ராஜபக்ஷ’ வை முன்னிறுத்தும் அரசியல் கட்சியை தோற்றுவித்தனர். அதுவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன. (மலர் மொட்டு சின்னம்). இந்த சின்னம்தான் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் “பண்டாரநாயக்க’ கட்சிக்கு ஆப்பு வைத்தது. அந்த தேர்தல் முடியும் வரை இந்த ஆபத்தினை உணராதவராகவே மைத்திரி இருந்துவிட்டார். எனவே அதற்கு பின்னான அவரது நகர்வுகள் எல்லாம் எப்படியாவது மகிந்தவுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து தனது உயிரையும் கட்சியையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இருந்தன.
எனவேதான் மகிந்த மொட்டு சின்னக் கட்சியில் உத்தியோகபூர்வமற்ற தலைவராக செயற்படுகிறார் என தெரிந்தும் அவரை சுதந்திர கட்சி போஷகராக நியமித்த அதே சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இல்லாதுபோனால் உங்கள் பதவிகள் பறிபோகும் என தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளை மாற்றிக்கொண்டே வந்தார். அவை ஒன்றும் சாத்தியமாகவில்லை. அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த ஆட்சிக்கு வருவது உறுதியானதும் தன்னோடு சேர்ந்திருந்த கூட்டத்தில் 16 பேர் வெளியேறி மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி சுதந்திர கட்சியை மேலும் பலமிழக்க செய்தனர். எஞ்சியிருந்த சுமார் 20 பேரைக் காப்பாற்றிக்கொள்ளவும் அவரால் முடியவில்லை. அதைவிட மகிந்த பதவிக்கு வந்தால் தனது உயிருக்கு ஆபத்து அல்லது சரத் பொன்சேகாவுக்கு நேர்ந்தது போல் சிறை செல்ல நேரிடும் என்ற பயம் அவரை சரணாகதி அரசியலுக்கு இட்டுச் சென்றது.
இதனைச் செய்வதற்காக ஐ.தே.க வை குறை காணும் தேவை அவருக்கு ஏற்பட்டது. ஐ.தே.கவும் அதற்கு வாய்ப்பளிக்கும் பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது. ரணில் மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான சூத்திரதாரி மைத்திரிதான் என்பது இப்போது பலருக்கு புரியும். எனினும் அதனை தனது ராஜதந்திரத்தால் மைத்திரி அணியில் இருந்தும் வாக்குகளைப் பெற்று ரணில் வென்றுவிட மைத்திரிக்கு இருந்த ஒரே தெரிவு தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பறிப்பது தவிர வேறு வழியில்லை. எனவே அப்போதிருந்தே திட்டமிட்டு இப்போதைய நிலைமையை உருவாக்கினார். அதற்கு அதிகபட்ச விலையான “பிரதமர்’ பதவியை கொடுக்க முன்வந்தார்.
ஐ.தே.க வின் பலவீனம் ரணில் விக்கிரமசிங்க என்றால் பலமும் அவரே. இங்கு பேசப்படும் மகிந்த ரணில் ஆகிய இருவரையும் விட தோற்றத்திலும் செயற்பாடுகளிலும் வேறுபட்ட நபர் ரணில். இவரது உடல்மொழிக்கும் அவரது உறுதியான மனோதிடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவரது கட்சிக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைந்த விடயங்கள். அவரது உடல் மொழியும், உரைமொழியும் பலவீனமிக்கவை. ஆனால் மனோதிடம் பலமானது. எல்லாவிதமான அவமானங்களையும் தாங்கிக்கொண்டு முனனோக்கிச் செல்லும் மனநிலை எல்லோருக்கும் வராது.
இலங்கை அரசியல் வரலாற்றில் இவரைப்போல அவமானப்படுத்தப்பட்ட அரசியல் தலைவர் வேறு யாராகவும் இருக்க முடியாது. அதன் உச்சம் தான் வெற்றிபெற்றால் ரணிலை பிரதமராக்குவேன் என கூறி தனக்கு ஐ.தே.க வாக்குகளைப் பெற்றுக்கொண்ட மைத்திரிபால சிறிசேன அவரை பிரதமராக நியமித்தது மடடுமல்லாமல் அவருடன் சேர்ந்து மூன்று வருடகாலம் பணியாற்றிவிட்டு திடீரென முறித்துக் கொண்டு ரணிலின் “பால்நிலை உறவாடல்’ முறையை கொச்சைப்படுத்தி “வண்ணத்துப்பூச்சி; (சமனலயா) என வர்ணித்தமையமாகும்,.
ரணிலின் மிகப்பெரிய பலவீனம் அதுதான் என்பது மைத்திரிக்கு தெரியும் என்பதாலேயே அதனைக் கொண்டு தாக்கினார். அதனால் அவர் தாக்கமுற்று அலரி மாளிகையை விட்டு விலகிச் செல்வார் என எதிர்பார்த்தார். ஆனால் ரணிலின் அவமானத்தைத் தாங்கிக் கொள்ளும் மனோதிடத்தின் முன்னே அது பலிக்கவில்லை.
ரணிலின் தனிப்பட்ட பால்நிலை உறவுப்பழக்கம் குறித்து கேள்வி எழுப்புவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது அவரது தனிப்பட்ட விடயம். ஆனால் அதன் அடிப்படையில் கட்சியில் சிலருக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வந்துள்ளார் என்பதுதான் அவரது பலவீனம். அதனையே “சமனல கண்டாயம’ (வண்ணத்துப்பூச்சி அணி) என மைத்திரி கொச்சையாக வர்ணித்தார்.
ரணில் தனது அத்தகைய நட்புவட்டத்தை சூழ வைத்துக்கொண்டது மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு நிகரானதுதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குடும்ப ஆட்சியாக அமையும்போது வெளித்தெரியும் அளவுக்கு இந்த “குழு’ ஆட்சி வெளித்தெரிவதில்லை. ஆனால், ரணிலின் அரசியல் பலவீனம் அதுதான்.
இந்த பலவீனத்தைக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனமடையச் செய்யலாம் என்பது மைத்திரியின் எண்ணமாக இருந்தது. இதனால்தான் மகிந்தவுக்கு வழங்குவதற்கு முன்னர் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகிய இருவரையும் அழைத்து பிரதமர் பதவியை ஏற்கச் சொன்னதாக சொல்வது ரணிலை விட நல்லவரைக் கொண்டு ஆட்சி நடாத்த அல்ல. ஐ.தே.க வை உடைப்பதுவே உள்நோக்கம். மகிந்த அணி கொடுத்த “ஐடியா’தான் அது.
அதுவும் சாத்தியமாகாத போதே அதிரடியாக மகிந்தவுக்கு கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை”விலைக்கு’ வாங்கி, குறிப்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகளை இழுத்து மகிந்த ஆட்சியைத் தொடர்ந்து ஐ.தே.கவை பின்தள்ளிவிடலாம் என்ற எதிர்பார்ப்பு இறுதியில் தோல்வியில் முடிந்திருக்கிறது.
இந்த நிலைமையில் ரணில் பக்க நியாயங்கள் புரிந்துகொள்ளப்படல் வேண்டும். தனது பலவீனத்தை உணர்ந்தவர் என்பதற்கு உதாரணம்தான் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை வேட்பாளராக்கியது. அதேபோல 2015 இல் மைத்திரியை வேட்பாளராக்கியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ரணில் தனது பலவீனத்தை உணர்ந்தவராக மட்டுமல்ல மகிந்த பலம்மிக்கவராக இருந்த காலத்தில் அவரை வீழ்த்துவதற்கு ரணில் செய்த விட்டுக்கொடுப்பை இலகுவில் கணிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில் தான் போட்டியிட்டு தோல்வியுற்றிருந்தால் மகிந்த தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருப்பார். அதனை தவிர்க்க ரணிலின் விட்டுக்கொடுப்புகள் மதிக்கப்படல் வேண்டும்.
இப்போது கூட ரணில் மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதை விட மகிந்த அணியின் கரங்களுக்கு மீண்டும் ஆட்சி செல்வதை தடுக்க ரணில் பிரதமராக இருந்த சூழலுக்கு திரும்பவும் நாடு கொண்டுவரப்படல் வேண்டும் எனும் கருத்து மேல் எழுந்து வருகின்றது.
இந்தக் கருத்து நிலைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை சிறு கட்சிகள் மாத்திரம் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட வந்திருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி நேரடியாக இதனைச் சொல்வதில் அரசியல் சிக்கல் இருக்கின்றதே தவிர அவர்களின் மறைமுக செயற்பாடும் அதுவே.
எனவே இன்றைய நிலையில் ஜனாநாயகத்தினை வெற்றிபெறச் செய்வதன் குறியீடாக ரணில் மாறிப்போயிருக்கிறாரே அன்றி அவரைப் பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கில் இன்றைய நகர்வுகள் இல்லை. அக்டோபர் 26 இற்கு முன்னதான நிலைக்கு நாடு செல்ல வேண்டும் என வலியுறுத்தும் சிறுபான்மை கட்சிகள் அடுத்த தேர்தல் சூழலில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் மாற்றம் வராதபோது தாங்கள் அந்த அணியில் சேரப் போவதில்லை என கூறியுள்ளனர்.
ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ராதாகிருஸ்ணன் போன்றவர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. அவர்களின் தெரிவு சஜித் பிரேமதாசவாக உள்ளதும் வெளிப்பட்டுள்ளது. ரிசாட் பதியுதீன் ரணிலே தொடரலாம் என்ற நிலையில் இருப்பதாகவும் அதற்கு அவரது வளர்ச்சியில் பங்கெடுத்த அரசியல் பிரமுகர் காரணம் என்றும் கூறப்படுகின்றது. அதேபோல சிறு கட்சிகளான ராஜித சேனாரத்ன, ஹெல உறுமயவின் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க போன்றவர்கள் சஜித் வசம் கட்சியோ அல்லது பிரதமர் பதவியோ செல்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டுபவர்களாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
இதற்கு இந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாட்டில் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியைப் பெறும் எண்ணம் உள்ளுர இருக்கின்றமையே காரணமாகும். இந்த கனவு அதிகபட்சமானது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு சஜித் உறுதியான நிலைப்பாட்டில் அந்தப் போட்டியில் நிற்கிறார்.
கடந்த வார பாராளுமன்ற சூழலும் அடுத்த வார சூழலும் அடுத்த கட்ட அரசியல் நகர்வில் இன்னுமொரு திசை நோக்கி பயணிக்க செய்யும் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. நவம்பர் 5 ஆம் திகதி கொண்டுவரப்படவிருந்த பிரேரணை ஐ.தே.க. வினால் பிற்போடப்பட்டது. உண்மையில் வாபஸ் பெறப்பட்டது என்பதே உண்மை. நவம்பர்.14 முதல் 30 வரையான நாட்களில் கூடிய பாராளுமன்றம் மிக முக்கியமான பிரேரணைகளை ஆரம்பத்தில் பிரச்சினை மிகுந்த சூழலிலும் பின்னர் மிக அமைதியாகவும் நிறைவேற்றியது. இரண்டடாவது முறையாகவும் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் 14 ஆம் திகதி கூட்டப்பட்டபோது நியமிக்கப்பட்டிருந்த சிறுபான்மை அரசாங்கம் சபை முதல்வர் பதவியை தனதாக்கிக்கொண்டதன் மூலம் பாராளுமன்றத்தை வழிநடத்தும் திட்டத்துடனேயே இருந்தது.
பெரும்பான்மை, சிறுபான்மை என்பதற்கு அப்பால் அரசாங்கத்துக்கு பொறுப்பாக எந்த அணி இருக்கிறதோ அந்த அணி வகிக்கக் கூடிய அந்த பதவியில் அமர்ந்து கொண்ட தினேஸ் குணவர்தன தனது அடிக்குரல் கர்ஜனையில் சபையை ஒத்திவைத்துக் கொண்டு செல்ல எடுத்த முயற்சி சபாநாயகர் கரு ஜயசூரியவின் உறுதியான நிலைப்பாட்டினால் உடைத் தெறியப்பட்டது.
யாரும் எதிர்பாராத விதமாக பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை தற்காலிகமாக ஒத்திவைத்து பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முறையை எதிரணியினர் திட்டமிட்டிருந்தனர். அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைக்க மக்கள் விடுதலை முன்னணி அந்த முன்வைப்போடு 26 ஆம் திகதி முதல். ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு எதிராகவும் அத்தகைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தையும் ஒரேயடியாக முன்வைத்து குரல் பதிவு வாக்குகள் மூலமாக நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பு சரியா பிழையா என்பதற்கு அப்பால் அது சபையில் நிறைவேற்றப்பட்டது.
நவம்பர் 14 இற்கு பின்னதாக பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களின்படி ஜனாதிபதியை செயலாற்றுமாறு கோரும் பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது எனும் தீர்மானம் நீக்கப்பட்டதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி அதற்கு ஆதரவு தர இணங்கவில்லை. ஐ.தே.கவை சார்ந்த யாரையேனும் பிரதமராக நியமியுங்கள் என்றோல் அல்லது ரணில் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவோ ஒரு பிரேரணை முன்வைக்கப்படும் எனில் மாத்திரமே மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் கலந்து கொள்ளாது அல்லது எதிர்த்து வாக்களிக்கும். மாறாக மகிந்த மைத்திரி அணிக்கு எதிரான எல்லா பிரேரணைகளுக்கும் அவர்களின் ஆதரவு உண்டு.
எனவே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு உறுதியாக தெரியவர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நம்பிக்கை வெளிப்படுத்தும் தீர்மானம் ஒன்றே எதிர்வரும் 12 ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. இந்த பிரேரணை வெற்றிபெற்றால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதை விடுத்து மைத்திரிக்கு வேறு வழியில்லை. அதற்கு பிறகு அவர் பதவியில் இருப்பாரா அல்லது ராஜினாமா செய்வாரா என்பது ஜனாதிபதிக்கே வெளிச்சம். எனினும் அவர் ரணிலை நியமிக்க மாட்டேன் என விடாப்பிடியாக நிற்பது அதன்மூலம் வேறு ஒருவரை பிரதமராக்கி ஐதே.க.வை துண்டாக்குவதுவே திட்டம்.
இதனை நன்கு உணர்ந்த ஐ.தே.க. மேற்படி 12 ஆம் திகதி பிரேரணையை சஜித் ஊடாகவே சபைக்கு முன்வைக்கும் அதிரடி திட்டத்தை முன்வைத்துள்ளது. அவரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்ற தயாராகவே உள்ளார். அதற்கு முன்பதாக அவர் கட்சிக்குள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது, நான் பிரதமர் பதவியை பெறுவது என்றால் நேற்றே பெற்றிருப்பேன் அல்லது நாளையும் பெறுவேன்.
ஆனால், கட்சிக்கு துரோகம் செய்து அதனைப் பெறும் அவசியம் எனக்கில்லை. நான் மைத்திரியுடன் டீல் பேசி கட்சியை உடைக்க தயாரில்லை. ஆனால், கட்சியில் என்னை ஓரம் கட்ட நினைப்பவர்கள் இந்த சூழலை புரிந்து கொள்ளவேண்டும். ரணில் தான் மீண்டும் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பது போல அது அமைந்தால் உடனடியாக பொதுத் தேர்தலுக்கு செல்ல முடியாது என்பதிலும் உறுதியாக உள்ளேன். நாம் மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடாத்திவிட்டு அடுத்து பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதாகும்.
எனவே இப்போதைக்கு ஐ.தே.க. முன்னணியுடன் சேர்ந்து ஒற்றுமை காட்டினாலும் உள்ளே தலைமைத்துவ தீ எரிந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்படி நிபந்தனைகள் மூலம் சஜித் ரணிலுக்கு ஒரு “செக்’ வைக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தள்ளிப்போனால் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை களமிறக்கிவிட்டு அதிகாரம் குறைந்த ஜனாதிபதியாக அவரை வைத்துவிட்டு பொதுத் தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவது என்பதுதான் சஜித்தின் திட்டம்..
இதற்கு ரணிலின் பின்னூட்டம் எப்படி என்பதில்தான் இனிவரும் காட்சிகள் தங்கியிருக்கின்றன. உடனடியாக பொதுத்தேர்தலுக்கு செல்வதில் ரணிலும் மகிந்தவும் உடன்படுகின்றனர். அவர்கள் சந்தித்தபோது பேசிக்கொண்டது அதுதான்.
இன்றைய சூழ்நிலை போன்று இனியும் உருவாகலாம் என்பதனால் ஜனாதிபதி முறைமையையே இல்லாமலாக்கிவிடுவோம் என்பது அவரது புது நிலைப்பாடாக உள்ளது என தெரியவருகிறது. இது ஜனாதிபதி பதவிக்கு மட்டுமல்ல சஜித் பிரேமதாசவுக்கும் அவர் வைக்கும் பதில் “செக்’. ஆக, சஜித் வராமல் இருப்பதை ரணில் மட்டுமல்ல மகிந்த வும் விரும்புகிறார். எனவே எதிர்வரும் 12 ரணில் மீள நியமனம் பெற்றாலும் மகிந்தவின் இந்த ஆசையையும் ரணில் நிறைவேற்றினால் அவர் நிலைப்பாரா? நீடிப்பாரா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டிவரும்.