மன்னர் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், இன்று புதன் கிழமை காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை (19) 119 ஆவது நாளாக இடம் பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய் மற்றும் இன்று புதன் கிழமை ஆகிய இரு தினங்களிலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்கு அனுப்ப சேகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதைகுழியை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் வருகை தருகின்றனர்.ஆனால் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி பார்க்க அனுமதி வழங்க முடியாது.
குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் தற்போது விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது. விசாரனை முடியும் வரை எவ்வித கருத்துக்களையும் கூற முடியாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்பு பணிகளை பார்வையிட்டுள்ளனர்.
-தற்போது மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதவான் முன்னிலையில் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
-நீதிமன்றம், விசேட சட்டவைத்திய அதிகாரி குழு,தொல் பொருள் திணைக்களம்,பெறுப்பான அரச திணைக்களம், பொலிஸ் நிலையம்,குற்றவியல் பொலிஸார் ஆகியோர் இணைந்து தற்போது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவற்றில் தற்போது 2 மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.என அவர் மேலும் தெரிவித்தார்.