ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளின் படி நல்லிணக்கம், பொறுப்புகூறல் போன்ற விடயங் களில் இலங்கை முன்னேற்றகரமாக ஒன்றையும் செய்யாதவிடத்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற த்தின் முன்னால் நிறுத்தவேண்டும்.
எனக்கோரி சுமார் 11 ஆயிரம் பேருடைய கையொப்பங்கள் அடங்கிய இணைய விண்ணப்பம் பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. எனினும் இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சு
பிரித்தானியாவின் வெளியுறவுக்கொள்கையின்படி சர்வதேச குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் பொறுப்புக்கூறலை உண்மையை கண்டறிதல் நீதியை நிலைநாட்டல் மற்றும் நல்லிணக்கம்
என்பவற்றின் அடிப்படையில் காண்பதற்கே பிரித்தானிய அரசாங்கம் விரும்புகிறது என்று பிரித்தானிய அரசாங்கம் பதில் அளித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் அனைத்து சமூகங்களின் உதவியுடன் மேற்கொண்டுவரும் தேசிய நடைமுறைகளே சிறந்தவை என்று தாம் நம்புவதாகவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை நிலைநாட்ட எடுத்துள்ள முயற்சிகளை ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகம் வரவேற்றுள்ளமையையும்
பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கையின் உறுதிப்பாட்டுக்காக தமது அரசாங்கம் 8.3 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்கியுள்ளதாகவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.