காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயி, முருகேசன். தன் தந்தையின் இறுதிச்சடங்கின் இடையில் கூட கிரிக்கெட் ஸ்கோர் பார்க்க மறக்காதவர். அந்தளவிற்கு கிரிக்கெட் பைத்தியம்! அப்பாவிடமிருந்து மகள் கௌசல்யாவுக்கும் `கிரிக்கெட்’ தொற்றிக்கொள்கிறது. ஒருமுறை, இந்திய அணி தோற்றபோது துன்பத்தில் கலங்கிய அப்பாவின் கண்களில், தான் இந்திய அணியில் ஆடி ஜெயித்து ஆனந்தக் கண்ணீர் வரவழைக்க வேண்டுமென ஆசைபடுகிறாள் கௌசல்யா. இன்னொரு புறம், வறட்சி வஞ்சித்தாலும் விவசாயத்தை விட மாட்டேன், நிலத்தையும் விற்கமாட்டேன் என அடம் பிடிக்கிறார் முருகேசன். இருவரின் பயணங்களும் இலக்கினை அடைந்ததா, அவர்களின் பாதையில் குறுக்கிடும் தடைகள் உடைந்ததா என பயணிக்கிறது திரைக்கதை.
ஒரு பக்கம், எட்டாத உயரத்திலிருக்கும் கிரிக்கெட். இன்னொரு பக்கம், எட்டிப்பார்க்க கூட ஆளில்லாத விவசாயம். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இரு வாழ்க்கை போராட்டங்களையும் ஒரே கோட்டில் `சின்க்’ செய்து அமைத்திருக்கும் திரைக்கதை, பழக்கபட்டதாய் இருந்தாலும் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கிறது. வசனங்கள் படத்தின் முதுகெலும்பு. பாட்டாகவே பாடியிருக்கிறார் அருண்ராஜா. ஒன்றிரண்டு இடங்களில் அவைதான் கதையையே நகர்த்துகிறது. சில இடங்களில் மட்டும் சம்பந்தமில்லாமல், செயற்கையாய் துருத்திக் கொண்டு நிற்கிறது. திபு நினன் தாமஸின் பின்னணி இசை ஆவ்ஸம்! பாடல்கள் செம எனர்ஜி. அடுத்தடுத்த ஆல்பங்களுக்கு வெயிட்டிங் பாஸ்! தினேஷ் கிருஷ்ணனின் கேமரா, பொட்டல் காட்டின் புழுதியையும் மைதானத்தின் பிரமாண்டத்தையும் பிரமாதமாய் படம் பிடித்திருக்கிறது. குறிப்பாய், கிரிக்கெட் விளையாடும் காட்சிகளில் நிஜ கிரிக்கெட் பார்த்த உணர்வு. திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு, ரூபனின் படத்தொகுப்பும் பக்காவாய் ஒத்துழைத்திருக்கிறது. ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான அதே ஃபார்மூலாவில் ஃபீல் குட் படங்களுக்கான ட்ராமாக்களால் ஆன திரைக்கதைதான். அடுத்தடுத்து என்ன நடக்குமென முன்கூட்டியே தெரிந்தாலும், சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
`கனா’, உள்ளியது உள்ளிய அளவு உயரவில்லை என்றாலும், படத்தை தள்ளாது திரையில் காணலாம்.