உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ-380 ரக விமானம் அவசர நிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் அதிகாலை தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சுகயீனமுற்ற நிலையைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்குவதற்காக இந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் பயணித்த விமானம் இவ்வாறு இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் தரையிறக்கம் செய்யப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் 490 பயணிகளும், 22 விமான பணியாளர்களும் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சுகயீனமுற்ற பயணி மேலதிக சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை முடிவடைந்ததன் பின்னர் குறித்த விமானம் மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி இன்று காலை 7.40 அளவில் சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.