வட தமிழீழத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 44 ஆயிரத்து தொள்ளாயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரத்து 661 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வட.மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த எண்ணாயிரத்து 539 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில், சுமார் இரண்டாயிரத்து 661 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மாகாணத்தில், 12 பிரதேச செயலகங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 646 குடும்பங்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவிக்கின்றது.
இவர்கள் 52 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆயிரத்து 661 குடும்பங்கள் இங்கு தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் எந்தவித உயிர்ச் சேதங்களோ ஏற்படவில்லை எனவும், குறித்த மாவட்டங்களில் 6 வீடுகள் முற்றாவும், 151 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீரற்ற வானிலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 ஆயிரம் பேர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வசந்தபுரம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பேராறு, மன்னா கண்டல், பண்டாரவன்னியன், கற்சிலைமடு, முத்தையன்கட்டு ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாழ்நிலப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுமுதல் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அங்கு ஒன்பதாயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனந்தபுரம், இரத்தினபுரம், பொன்னகர், வட்டக்கச்சி – மாயவனூர், சிவநகர், பன்னங்கண்டி, முரசுமோட்டை, கண்டாவளை உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மன்னாரில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இதுவரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவிலும் 77 குடும்பங்கள் பதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணத்தில் இதுவரை 273 குடும்பங்களை சேர்ந்த 708 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.