இந்திய அணிக்கு எதிராக மெல்போனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் 7 வயது சிறுவன் ஒருவன், ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
PC : @MakeAWishAust
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளின் முடிவை பொறுத்தவரை, இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 7 வயதான ஆர்ச்சி ஸ்கில்லர் (Archie Schiller) என்ற சிறுவன் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த வலைப் பயிற்சியிலும் ஆஸ்திரேலியா வீரர்களுடன் இந்தச் சிறுவன் பங்கேற்றான்.
PC : @MakeAWishAust
லெக் ஸ்பின்னரான ஆர்ச்சியை அணியில் சேர்த்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவரிடம் தெரிவித்துள்ளார். அப்போது, அணியில் சேர்ந்து நீ என்ன செய்ய போகிறாய் என சிறுவனிடம் கேட்டபோது, `இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கி விக்கெட் எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளான். ஆஸ்திரேலிய அணியின் 15-வது வீரராக சிறுவன் சேர்க்கப்பட்டதற்கு, அவனது உடல்நிலைதான் முக்கிய காரணம். ஆர்ச்சி பிறக்கும்போதே அவனது இதயத்துடிப்பு சீரின்றி இருந்துள்ளது. அப்போது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
PC : @cricketcomau
மிகவும் அரிதான இதயக் குறைபாடு கொண்ட ஆர்ச்சிக்கு இதுவரை 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அவரது ஆயுள்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன் ஆர்ச்சி, `ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாவதே தனது கனவு’ என தெரிவித்துள்ளான். தன் மகனின் கனவை நனவாக்கும் முயற்சியில் அவனது பெற்றோர் ஈடுப்பட்டனர். சிறுவனின் ஆசை குறித்து அறிந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகம், இந்திய அணிக்கெதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் 15-வது வீரராக அவரை அணியில் தேர்வு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்த 7-வயது சிறுவனை இணை கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறுவனது ஆசையை நிறைவேற்றியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.