அது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 10 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள சிறு நகரப் பிரதேசம்.
அந்தப் பிரதேசத்தில் உள்ள அவர் அதிகாலையில் நித்திரை விட்டெழும்புவார்.
நிலம் வெளிக்கும் தருணத்தில் சந்தியில் நிற்பார் . வீதியின் ஒரு கரைப் பகுதியையும் வீதியின் உள் புறத்தையும் பார்த்துக் கொண்டு நடப்பார்.
எக்ஸ்றே கண் பார்வையினை எறிந்த படி சந்தியின் நாலு திசையும் நடந்து நடந்து பார்ப்பார்.
இரவுப் பயணத்தில் மோட்டார் சைக்கிள் ,சைக்கிளில் சென்றவர்கள் யாரும் ,பேர்ஸ், தங்க நகை,ஆவணங்கள்,பணம் ,பிரயாணப் பை போன்றவற்றை விழுத்தி இருந்தால் அவற்றை எடுத்துக் கொள்வார்.
நாளாந்தம் கிடைப்பது குறைவு. ஆனால் சுவீப் ரிக்கெற்றில் பரிசு விழுந்தது போல இடையிடையே பெரிதாக அகப்படும்.
யாராவது பேர்சை விழுத்தி அதில் பணம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்கள் இருந்தால் பணத்தை எடுத்து விட்டு அதில் கைத்தொலைபேசி இலக்கங்கள் ஏதும் இருந்தால் தொடர்பு கொண்டு தன்னை யாரென்று இனம் காட்டாமல் இவ்வளவு பணம் தந்தால் தான் தருவேன் என்று மிரட்டுவார்.
ஆவணங்களைத் தொலைத்தவர்கள் அதனை மீள எடுக்க பொலிஸ் பதிவு ,அது இதுவென்று ஏகப்பட்ட நடைமுறைகள்.
அதனால் இவரிடம் தொலைபேசி மூலமாகப் பேரம் பேசி இணக்கமாகித் தொகை ஒன்றை கொடுத்து எடுத்து விடுவார்கள்.
பகல் வேளையிலும் ,மாலை வேளையிலும் நடந்து வீதியைப் பார்த்து ஏதாவது அகப்படுகிறதாவெனவும் பார்ப்பார்.
இப்படியும் ஒரு தொழிலா என வியப்பாக இருக்கும் . வேறு இடங்களில் இப்படி ஒரு தொழில் இருக்கிறதாவென யான் அறியேன்.
நண்பர்களே அந்த இடம் எது? யார் இப்படிச் செய்து வாழ்வது எனப் பெயர் தெரிந்தால் தயவு செய்து பதிவிடாதீர்கள்.
நீங்கள் கண்ணியமானவர்கள். ஆகவே அப்படிச் செய்ய மாட்டீர்களெனத் தெரியும்.
– வே. தபேந்திரன்