அந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் கஞ்சியாகவே ஊற்றினார்கள். ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர்கள் அந்தக் கஞ்சியைக் குடித்துத்தான் படித்து மேல்நிலைக்கு வந்தார்கள். இன்று கஞ்சி என்பது ஏழ்மைப்பட்டோர் உணவுப் பட்டியலிலும்கூட இடம்பெறுவது இல்லை என்பது துரதிருஷ்டம்.
செரிமானத் திறனை மீட்டெடுக்க
உடலின் செரிமானத் திறன் மந்தமாகிப் போன நிலையில் அரிசிக் கஞ்சியே மிகச் சிறந்த உணவு. எந்த நோயென்றாலும் நடுத்தர வயதினர் என்றால் தொடர்ந்து மூன்று நாளைக்குக் காலை, பிற்பகல் இரண்டு வேளையும் கஞ்சி மட்டுமே அருந்துவது உடல்நலனை மேம்படுத்தும்.
இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற மாவுத்தன்மை மிகுந்த உணவையே தொடர்ந்து சாப்பிட்டு நம்முடைய இரைப்பையிலும் குடலிலும் செரிமானத் திறனும் உணவின் சாரத்தை ஈர்க்கும் திறனும் மந்தமாகி இருக்கும். இந்நிலையில் உயிர்மச் சத்துகளும் எரிமச் சத்தும் நிரம்பிய அரிசிக் கஞ்சியைக் குடிக்கிறபோது, அவர்களது செரிமான உறுப்புகள் மட்டுமல்லாமல், மலக் குடலும் கழிவு நீக்கப் பாதையும் சட்டென்று இரண்டே நாட்களில் திறன் பெறுவதைத் தெளிவாக உணர முடியும்.
தூய்மைப்படுத்தும் உத்தி
பேதிக்கு எடுத்துக்கொண்டு வயிற்றைச் `சுவச்’ செய்து முடித்த பின்னும், விரதம் இருந்து உள்ளுறுப்புகளைத் தூய்மைப்படுத்திய அடுத்த நாளும், காய்ச்சலில் இருந்து மீண்ட பின்னரும் அரிசிக் கஞ்சியைக் குடித்தால் உடல் முழுவதும் ஊக்கம் பரவுவதைத் துல்லியமாக உணரலாம்.
உடலில் கழிவுத் தேக்கம் உச்ச நிலையை எட்டி விடுவதே, நோய்க்குக் காரணம் என்ற உடலியல் உண்மையை அனைத்து மருத்துவ முறைகளும் ஒப்புக்கொள்கின்றன. என்றாலும் மாற்று மருத்துவம் என்ற பெயரில் அழைக்கப்படுகிற நமது மரபு சிகிச்சை முறைகளே அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
ஆண்டுக்கு இரண்டு முறை பேதிக்கு எடுக்கும் தற்சிகிச்சை முறை, நமது பாரம்பரியத்தில் இருந்துவந்தது. தற்போது அது வழக்கொழிந்து விட்டது. பேதிக்கு எடுப்பது நல்லது என்றால், பீதியடைகிறார்கள். அது சற்றே கடுமையான சிகிச்சை என்றாலும், அனைத்து நோய்களுக்கும் பேதிக்கு எடுப்பது எளிய தீர்வாக இருக்கும். நோய் முற்றி உடல் பலவீனமான நிலையில் பேதிக்கு எடுத்தால் எதிர் விளைவுகளை அளிப்பதாகச் சில நேரங்களில் அமைந்துவிடும். எனவே, இது பற்றிய பயிற்சி உள்ளவர்களின் துணையுடன் பேதிக்கு எடுப்பதே நல்லது.
நோய் விரட்டும் புழுங்கலரிசி கஞ்சி
எந்த நோயாக இருந்தாலும் தொடர்ச்சியாகப் பசிக்கிற போதெல்லாம் நன்றாக நீர்த்த வெறும் புழுங்கலரிசிக் கஞ்சியைக் குடிக்கக் குடிக்க உடல்நலம், எந்த மருந்தும் இல்லாமல் மேம்படுவதை இரண்டு மூன்று நாட்களிலேயே உணரலாம். நோய்க்கு ஆட்படாத நிலையிலும் வாரம் ஒரு முறையேனும் கஞ்சி அருந்துவதை நம்முடைய சமையலறைப் பண்பாடாக மாற்றிக்கொண்டால், வீட்டில் அனைவருமே நோயை வரும் முன் காப்பவர்களாக மாறிவிடுவோம்.
பனிக்காலப் பிரச்சினைக்கு
இது பின் பனிக்காலம். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையில் புறச்சூழலில் குளிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரத்தன்மை மிகுந்திருக்கிறது. எனவே யாருக்கு வேண்டுமானாலும் சளி, காய்ச்சல், தலைபாரம், பழைய உடல் தொல்லைகள் முதலானவை தலைதூக்குவது இயல்புதான். இவற்றைத் தொல்லையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உடல் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் முயற்சி எனும் உண்மையைப் புரிந்துகொண்டால், வெகு விரைவில் அதலிருந்து மீண்டுவிட முடியும்.
நன்றாகக் கவனித்துப் பார்த்தால், மேற்சொன்ன இயல்புக்கு மாறான நிலையில் பசி இருக்காது. காரணம் முதல் வேலையாக வயிற்றைத் தூய்மைப்படுத்தும் வேலையில் உடல் இறங்கியிருக்கும். கூடுதல் தற்காப்பு நடவடிக்கையாக வாயில் கசப்புச் சுவையை உருவாக்கியிருக்கும்.
வாயில் கசப்பும், வயிற்றில் பசியின்மையும் இருக்கிற நிலையில் எதையும் உண்ணாதிருப்பதே நோயிலிருந்து விரைவாகக் குணமாவதற்கு வழி. வயிறு தூய்மை அடைந்த பின்னர், ஓரளவு பசியுணர்வு தோன்றியதும் நம்முடைய விருப்பமான உணவு வகைகளின் மீது பெரும் நாட்டம் உருவாகும். அவற்றை உண்ண முயற்சித்தாலும் உண்ண முடியாது. இதுபோன்ற நேரத்தில் உண்ணத் தகுந்தவை கஞ்சி வகைகளே.
காய்ச்சலுக்கேற்ற கைவைத்தியம்
சளி, காய்ச்சல் என்றால் கொள்ளுக் கஞ்சி. முளை கட்டி காய வைத்த கொள்ளை ஒரு பங்கும், மூன்று பங்கு அரிசியும் சேர்த்துக் கடந்த வாரம் பார்த்த அதே செய்முறையில் கஞ்சியாகக் காய்ச்சி அருந்தலாம். முளைகட்டிய கொள்ளு இல்லாதபோது சாதாரணக் கொள்ளையும் அரிசியையும் லேசாக வறுத்துப் பயன்படுத்தலாம்.
எலும்பில் பலமான அடி அல்லது முறிவு போன்றவை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்தில் உண்பதற்கு ஆவல் இருக்காது. இந்நிலையில், சாப்பிட்டால்தான் நல்லது என்று உடலின் இயல்புக்கு மாறாக உணவைத் திணித்து உடலியக்கத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற நேரத்தில் பசி தோன்றத் தொடங்கியதும் முழு கறுப்பு உளுந்துடன் மூன்று பங்கு அரிசி கலந்து வழக்கமான செய்முறையில் கஞ்சி காய்ச்சி அருந்தினால், குணமடைதல் விரைவு பெறும்.
மாதவிடாய் சோர்வுக்கு அருமருந்து
இதே கஞ்சியைப் பூப்படையும் பெண்ணுக்கு அளித்தால் திடீரென ஏற்பட்ட குருதிப் போக்கை, உடல் எளிதாக ஈடுசெய்துகொள்ளும். மாதந்தோறும் ஏற்படும் குருதிப் போக்கு, பெண்ணுடல் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளும் நடவடிக்கை. இக்காலத்தில் உடல் மிகவும் பலவீனமடையும். பெண்கள் எரிச்சலும் கோபமும் காட்டுவது இயல்பு. அவர்களுடைய உடலுக்கு ஊக்கமளிக்கும் உளுந்துக் கஞ்சியுடன் இரண்டு ஸ்பூன் கறுப்பு எள்ளை வறுத்துப் பொடித்துச் சேர்த்து அருந்தினால், உடல் வலி பெருமளவு குறையும்.
உறவைப் பேணும் கஞ்சி
அதிக மூளை உழைப்பில் ஈடுபடு கிறவர்கள் பல விதமான சுவையை நாடுவது இயல்பு. ஆனால் அடிக்கடி மிகை சுவை உணவை உண்பதாலும், இரவுத் தூக்கம் கெடுவதாலும், குளிர்சாதன சூழலிலேயே இருப்ப தாலும் பித்தப்பை கல், சிறுநீரகக் கல் தோன்றுவது நம் காலத்தில் சர்வ சாதாரணமான ஒன்று. இவர்கள் மிகை சுவை உணவை உண்ட ஓரிரு நிமிடங்களிலேயே வலித் தொல்லையை உணர்வார்கள்.
இத்தொல்லைக்கு ஆளாகிறவர்கள் முழுமையாக வலியிலிருந்து மீளும்வரை தொடர்ந்து கஞ்சியைப் பருகி வருதல் நன்று. சுவையும் சத்துகளும் நிரம்பியதாகக் கஞ்சியை மாற்றிக்கொள்ள நோன்புக் கஞ்சி போன்ற ஒன்றைத் தயாரித்து உண்டால் ருசிப் பண்புக்கும் நிறைவு கிடைக்கும். உடல்நலத்தையும் தீமை அண்டாது.
இக்கஞ்சியை விடுமுறை நாட்களில் தயாரித்துக் குடும்பமாக அமர்ந்து அருந்தினால் குடும்ப உறவும் வலுப்படும். அனைவரது உடல்நலனும் மேம்படும். குறைவாக உண்டதும் வயிறு அடங்கினாற் போல இருக்கும். ஆனாலும், அடுத்த வேளைக்கு ஆரோக்கியமான பசியைத் தூண்டும்.
நோன்புக் கஞ்சி செய்முறை
சுமார் முக்கால் கிலோ அரிசி, 200 கிராம் ஆட்டுக் கறி, இரண்டையும் கனமான அகன்ற பாத்திரத்தில் போட்டு எட்டு பங்கு நீர் சேர்த்து வேக விட வேண்டும். அது வெந்துகொண்டிருக்கும்போதே, இரண்டு அங்குல இஞ்சியைத் துருவிப் போட வேண்டும். உடன் இருபது பல் பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிப் போட வேண்டும். அரிசியும் கறியும் மலரத் தொடங்கும் கட்டத்தில் பத்து கிராம்பு, ஐந்து அன்னாசிப்பூ, இரண்டங்குலப் பட்டை ஆகியவற்றைத் தட்டிப் போட்டு நான்கு ஸ்பூன் நெய்யில் தாளித்துக் கஞ்சியில் ஊற்ற வேண்டும்.
கஞ்சி நன்றாக மசிகிற பக்குவத்தை எட்டியதும் சுவைக்கு ஏற்பக் கல்லுப்பு சேர்க்க வேண்டும். விரும்பினால் மூன்று தக்காளிப் பழங்களைப் பொடியாக வெட்டிப் போடலாம். இறுதியாகக் கைப்பிடியளவு புதினா, கொத்துமல்லி தழை ஆகிய இரண்டையும் அரிந்து கஞ்சியுடன் சேர்த்துக் கலக்கிவிட்டு மூடி வைக்க வேண்டும்.
குடிக்கிற பதத்துக்கு ஆறியதும் எடுத்துப் பருகலாம். சுமார் பதினைந்து பேர் அருந்தப் போதுமானது என்பதால் குடும்பங்களின் கூடுகையின்போது சமைத்துச் சாப்பிட ஏதுவானது.
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்
தொடர்புக்கு: [email protected]