ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் முருகனைச் சந்திப்பதற்காக, இலங்கையிலிருந்து வந்த அவருடைய தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது.
எனக்குச் சிறை நிர்வாகம் தண்டனை வழங்கியிருப்பதால், ‘சந்திக்க அனுமதிக்க முடியாது’ என்ற காரணத்தைக் கூறியுள்ளனர்.
என்னுடைய தரப்பு நியாயத்தை விளக்கக்கூட அதிகாரிகள் வாய்ப்பு அளிக்கவில்லை’ என வேதனைப்படுகிறார் முருகன்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகனைச் சந்திப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தார் அவருடைய தாய் சோமணி.
சிறையில் மனு போட்டு விட்டு முருகனுக்காகக் காத்திருந்தவருக்குச் சிறை நிர்வாகம், எந்த அனுமதியையும் வழங்கவில்லை.
இதையடுத்து, முருகன் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் வழக்கறிஞர் புகழேந்தி.
அந்த மனுவில், என் தாயார் மிகுந்த சிரமப்பட்டு இலங்கையிலிருந்து வந்திருக்கிறார். என்னைச் சந்திப்பதற்கு சிறை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை.
அவருடைய விசா காலம், இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு வருகிறது. வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதிக்குள் அரைமணி நேரம் என்னுடைய தாயாரைச் சந்திக்க அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார்.
மனிதாபிமான அடிப்படையில் முருகனின் தாயாருக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோவிந்தராஜ் வாதிடும்போது, ‘ சிறையில் செல்போன் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரைச் சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை’ எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, முருகனின் தாய் சோமணிக்கு அனுமதி வழங்க நீதியரசர்களும் மறுத்து விட்டனர்.
இதனால், மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார் முருகன். தன்னுடைய தாயாருக்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து, வேலூர் சிறை கண்காணிப்பாளர் வழியாக, சிறைத்துறைத் தலைவருக்கு விரிவான கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில், ‘ நானும் எனது மனைவி நளினியும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் (solitary confinement) இருந்து வருகிறோம்.
சிறையிலேயே பிறந்த எங்களுடைய மகளைப் பார்த்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. என்னுடைய பெற்றோர், சகோதரர்கள், மகள் என அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
சாதாரணமாக ஆயுள் தண்டனை சிறைவாசிகள் வருடத்தில் நான்கு முறை, 15 நாள்கள் விடுமுறையில் சென்று தங்கள் குடும்பத்தினருடன் சேருகின்றனர்.
மாதத்தில் மூன்று முறை தங்கள் குடும்பத்தாருடன் பொதுத்தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த உரிமைகள், சலுகைகள் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை.
சாவை எதிர்பார்த்து படுக்கையில் கிடக்கின்ற தாய் தகப்பனைப் பார்க்கக்கூட எனக்கு அனுமதியில்லை. இவ்வாறு என்னுடைய துரதிஷ்டமான பல இன்னல்களைப் பட்டியலிட முடியும். இவை அனைத்திலும் என்னைச் சிக்க வைக்கப்பட்டுள்ள வழக்கு நியாயப்படுத்தி விடுகிறது.
இந்நிலையில் கடந்த 27.3.2017 அன்று வேலூர், பாகாயம் காவல்நிலையத்தில் என் மீது குற்றம் சுமத்தி சிறை நிர்வாகம் சார்பில் ஒரு புகார் தரப்பட்டு நீதிமன்றத்தில் வழக்காகி உள்ளது.
அது தொடர்பாக பாகாயம் காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வருவதாகவும் செய்தி அடிபடுகிறது. மேற்படி புகாரில் நான் அடைத்து வைக்கப்பட்ட சிறையில் இருந்த கைபேசி கருவிகள் கைப்பற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4.4.2017 அன்று எனது 70 வயது தாயார் சோமணி, இலங்கையிலிருந்து 45 நாள்கள் விசாவில் இந்தியா வந்திருந்தார். மிகுந்த ஆபத்து நிறைந்த இன்னல் நிறைந்த பயணம் மேற்கொண்டு சிறை அதிகாரிகளிடம் என்னை நேர்காணலில் சந்திக்க விண்ணப்பம் செய்துள்ளார்.
எவ்வித காரணமும் விளக்கமும் தரப்படாது என் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனக்கு இதுகுறித்த விவரங்களும் தரப்படவில்லை. என்மீது சிறைக் குற்றம் இருப்பதாகவும் அதற்கான தண்டனையைச் சிறை நிர்வாகம் விதித்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எனக்குச் சிறை நிர்வாகம் தண்டனை வழங்கியிருப்பது உண்மை எனில் அதற்கான சட்டப்படியான-முறையான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட எனக்கு எதிர்வாதம் செய்து கொள்வதற்கான சட்டப்படியான உரிமையை வழங்கியிருக்க வேண்டும்.
எனக்கு எவ்வித அறிவிப்பும் வாய்ப்பும் தரப்படாது எனக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கும் சட்டத்திற்கும் எதிரானது என்று உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளன.
மேலும் ஒரு குற்றத்துக்கு இரு விசாரணை இரு தண்டனை என்பது மிகப் பெரும் கொடுமையாகும் என இந்திய அரசியல் சாசனம் வரையறை செய்துள்ளது. இது சட்டத்துக்கும் நீதிக்கும் எதிரானது என அரசியல் சாசனம் தடை செய்துள்ளது.
என் மீது குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவாகி நீதிமன்றத்தில் வழக்காகிவிட்டது. புகழேந்திபாகாயம் காவல்துறையினர் புலன்விசாரணை செய்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் அதே புகாரில் சொன்ன குற்றச்சாட்டுக்கு சிறை நிர்வாகம் எனக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
ஒரு வழக்கை உள்ளுர் காவல்நிலையம் சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ வசமோ ஒப்படைத்து விட்டால் அதன்பிறகு அந்த வழக்கில் தனியாக விசாரணை செய்யவோ, தண்டனை பெற்றுத்தரவோ அதிகாரம் அற்றுப் போய்விடும்.
அதுவேதான் இந்தச் சூழ்நிலைக்கும் பொருந்தும். ‘ காவல்நிலையத்தில் வழக்கான பிறகு சிறை நிர்வாகத்திற்கு அது தொடர்பாக விசாரணை நடத்தவோ தண்டனை வழங்கவோ அதிகாரம் கிடையாது’ என சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்ற ஒரு வழக்கில் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
அதனையும் மீறி இந்தத் தவறு நடந்துள்ளது. மேலும் எனக்கு எதிரான குற்றச்சாட்டு நீதி விசாரணையில் நிலுவையிலுள்ளது. அது ஒரு தனி வழக்காக உள்ளது.
அதே வழக்கில் புகார்தாரரே விசாரணை நடத்துவதும் தண்டிப்பதும் நீதிமன்ற நடவடிக்கையில் நேரடியாகத் தலையிடுவதாகும். இந்தக் கோணத்தில் கூட எனக்கு எதிரான தண்டனை மிகுந்த சட்டமீறலாகும்’ எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய கடிதத்துக்கு எந்த விளக்கத்தையும் சிறைத்துறை நிர்வாகம் அளிக்கவில்லை.
முருகனின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ” சிறைவாசிகள் மீது சிறை நன்னடத்தையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேர்காணல் ரத்து செய்யப்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் சிறைத்துறை தலைவர் தண்டனை குறைப்பு வழங்குவார். அதேபோல், உறவினர்களுக்குத் தகவல் தெரியாமல் வந்துவிட்டால், அன்றைக்கு அனுமதி வழங்கி விட்டு, ‘இனி மனு போட முடியாது’ என்ற தகவலையும் சொல்லி அனுப்பி விடுவார்கள்.
ஆனால், இதுவரையில் முருகன் மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணையும் நடத்தப்படவில்லை. அவருக்குத் தண்டனை கொடுத்ததைப் பற்றி அவரிடமும் தெரிவிக்கவில்லை.
இப்படியொரு நடைமுறையை சிறைத்துறை அதிகாரிகள் பின்பற்றியுள்ளனர். சிறைத்துறை அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதலில் முருகனைப் பழிவாங்குகிறார்கள். சட்டரீதியாகவே இந்த விவகாரத்தில் போராட இருக்கிறோம்” என்றார் நிதானமாக.