மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது 40 சதவீதம் கட்டணச் சலுகை வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்த கட்டணச் சலுகை புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று ரயில்வேதுறை அறிவித்துள்ளது.
தற்போதுள்ள விதிமுறையின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 58 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மட்டும் ரயில் பயணத்தின்போது கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே முன்பதிவு படிவத்தில் திருநங்கைகளுக்கான (டி) இடம் ஒதுக்கப்பட்டபோதிலும், அவர்களுக்கான கட்டணச் சலுகை அளிக்கப்படாமல் இருந்து வந்தது.
ரயில்வே துறையைப் பொறுத்தவரை 53 வகையான பிரிவுகளில் கட்டணச் சலுகையை 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மக்களுக்கு வழங்கி வருகிறது. மாணவர்கள் கல்விச்சுற்றுலா செல்லும்போது 50 சதவீதகட்டணச் சலுகையும், எஸ்டி, எஸ்சி மாணவர்களாக இருந்தால் 75 சதவீத கட்டணச் சலுகையும், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு 75 சதவீத கட்டணச் சலுகையும் பொதுத்தேர்வு எழுதும் போது ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
யுபிஎஸ்சி, ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் ஆகிய தேர்வுக்குச் செல்லும்போது 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. விவசாயிகள், தொழில்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஏதேனும் துறைசார்ந்த கண்காட்சிகள், கூட்டங்களுக்குச் செல்லும்போது, 2-ம் வகுப்பு படுக்கை வசதியில் 25 சதவீதம் கட்டணச் சலுகை தரப்படுகிறது.
இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களும் கட்டணச் சலுகை பெறத் தகுதியானவர்கள். அவர்கள் 2-ம்வகுப்பு படுக்கை வசதியில் 50 சதவீதம் கட்டணச் சலுகையுடன் பயணிக்கலாம்.
மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்பட உள்ள கட்டணச் சலுகை குறித்து மத்திய ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் சுனில் உதாசி கூறுகையில், “மூன்றாம் பாலினத்தவருக்கான இடம் ரயில்வே முன்பதிவு படிவத்தில் அளிக்கப்பட்டாலும் அவர்களுக்குரிய கட்டணச் சலுகை அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரயில் பயணத்தில் 40 சதவீதம் கட்டணச் சலுகை வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது” எனத் தெரிவித்தார்.