இலங்கைப் பாராளுமன்றம் அந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் கலைக்கபட்டுவிட்டது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கவின் தரப்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகு வாங்கி மகிந்தவைப் பிரதமராக்கும் முயற்சி தோல்வியடைந்ததும் சிரிசேன பாராளுமன்றக் கலைப்பில் ஈடுபட்டார். அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக அரச அச்சகத்தை அதிரடிப்படையின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தி வர்த்தமானி அச்சிடப்பட்டது. இலங்கையின் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டினுள் போலிஸ்படை கொண்டுவரப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தவிற்கு ஆதரவு வழங்க மறுத்த பின்னர் ஏற்பட்ட சூழல் இலங்கை பாராளுமன்ற அரசியலில் மைத்திரி – மகிந்த புதிய ஆட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கியது. அதன் பின்னரான பாராளுமன்ற்க் கலைப்பு இலங்கையின் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தையும் குழு தோண்டிப் புதைத்துள்ளது.
இலங்கையின் பெரும்பாலான ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும், தனி மனிதர்களும் இன்றைய சூழலில் அந்த நாட்டின் குறைந்தபட்ச ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தடைந்துள்ளனர். இந்த ஒரே காரணத்திற்காக ரனில் விக்ரமசிங்கவின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரனிலின் நவ தாராளவாதப் பொருளாதாரக் கொள்ளையால் தமது அன்றாடப்பாஅ வாழ்க்கையைத் தொலைத்த அப்பாவிப் பொதுமக்கள் இன்று மகிந்த வரவை எதிர்பார்த்திருக்கின்றனர்.
மகிந்தவிற்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைக்கவும், ஜனநாயாகம் குறித்து மக்கள் சார்ந்து செயற்படவும் நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் எதுவும் இல்லாத நிலையில் மகிந்த மைத்திரியின் ஆட்சியே புதிய தேர்தலில் உறுதி செய்யப்படும் நிலை தோன்றியுள்ளது.
மீண்டும் இனவாதம் அரசியலாவதற்கும் அதன் வெம்மையில் நாட்டைக் கொள்ளயடிப்பதற்கும் மகிந்த குடும்பத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கும் ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை போர்க்காலப் பொருளாதாரத்திற்குப் பின்னான காலத்தில், யார் ஆட்சிக்கு வந்தாலும் நவதாராள வாதக் கொள்ளையிலிருந்து மீள முடியாது. ஆனால் இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பேரினவாதத்தின் வெம்மை தணிய வேண்டும்.
இவை அனைத்திற்கும் மேலாக வன்னியில் மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்திய மகிந்த ராஜபகச குடும்பம் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கிரிமினல்களை அதிகாரத்தில் அமர்த்த முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளும் மனிதகுலத்தின் அவமானம் என்று கருதும் நிலை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும்.
இன்று பெரும்பான்மைப் பலத்தோடு அதிகாரத்தில் அமர்வதை மேற்கு ஏகாதிபத்திய அரசுகள் விரும்பாத சூழலில், அமெரிக்கா,பிரித்தானியா,சுவிற்சிலாந்து போன்ற நாடுகள் மகிந்தவின் மீட்சியை எதிர்க்கின்றன. இவை தவிர்க்கவிலாத சூழலில் மகிந்தவோடு சமரசம் செய்துகொள்ளவு தயங்கமாட்டா.
இங்கு வேடிக்கை என்னவெனில் மகிந்த ராஜபக்ச கும்பலை ஆதரிப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்க்கிறோம் என்ற தலையங்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் சமூக வலைத்தள விசிறிகளும் மக்கள் மத்தியில் கோமாளிகளாகியுள்ளனர்.
தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ச குடும்பம் என்பது இனப்படுகொலையின் குறியீடு! ரனிலின் ஆட்சியில் குடும்பச் சுமை அதிகரித்து தமது வாழ்வாதார அடிப்படைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும், மகிந்தவிற்கு சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை.
ஆனால், ஐக்கிய நாடுகளிடமும், அமெரிக்காவிடமும் போர்க்குற்ற விசாரணைக்காக என மண்டியிட்டிருந்த பலர், ரனிலை ஆதரிக்கும் ஏகாதிபத்தியங்களை விட மைந்தவின் ஆட்சி மேலானது என புதிய விசுவாசிகளாக மாறியுள்ளனர்.
எந்தக் கூச்சமுமின்றி “மேற்கு எதிர்ப்பாக” ஒலிக்கும் இவர்களின் குரலும் குறைந்தபட்ச ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
இவ்வாறான அரசியல் பின்புலத்தில் ஏகாதிபத்தியங்களின் நேரடி அடியாளான ரனிலையும், முதிர்ந்து உதிரும் நிலையுள்ள பிற்போக்கு வலதுசாரிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஆதரிக்க வேண்டிய துர்பாக்கிய சூழலுக்கு மக்கள் தளள்ளப்பட்டுள்ளனர்.