மனநலம் குன்றுதல்
எந்த நோயாக இருந்தாலும், அந்நோயினால் பாதிக்கப்பட்டால் இந்த நோய் நமக்கு வந்திருக்கிறது. அதை மருத்துவத்தின் மூலம் போக்கிக் கொள்ளலாம் என்று நோயாளிகள் அறிந்துகொள்ளலாம். ஆனால் இந்த மனநோய் என்பது தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதைக்கூட உணர்ந்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகக் கொடுமையான ஒரு நோயாகும்.
மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் மக்களிடையே (படித்தவர் உட்பட) விழிப்புணர்வும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாகக் கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப்படுகிறார்கள். அவர்களைக் கண்டு சமூகம் பயப்படுகிறது (‘பராசக்தி’ வசனம்!).
மன நலம் ப|ற்றிய விழிப்புணர்வு
இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வயதானவர்களாக இருப்பது தான் கொடுமை. தனிமை, விரக்தி போன்றவை அவர்களை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன. அதற்கடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அதிலும் குறிப்பாக சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள், இரவு நேரங்களில் பணியாற்றுபவர்கள் தான் மனநோய்க்கு அதிகளவில் ஆளாகின்றனர். தொடர்ச்சியான அதே வாழ்க்கை முறை அவர்களை நசுக்குகிறது.
கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் மனநோய்க்குப் பாதிப்படைபவர்கள் அதிகமாக உள்ளனர் என்கின்றனர். மனநலம் பாதிப்பை நோய் எனச் சொல்லவும் முடியாது. அது ஒவ்வொருவரின் மனநலத்தைச் சார்ந்தது, அதை மருந்து, மாத்திரை கொண்டு சரிசெய்ய முடியாது. பிறர் காட்டும் அன்பே அதிலிருந்து விடுபடச் சிறந்த மருந்து. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தி, ஊக்குவித்து, அவர்களைச் சோம்பலை போக்கி, மனக்காயத்தை துடைத்தால் மனிதர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க முடியும். மனநலப் பிரச்னைக்களுக்கு கீழ்க்காணுவது போன்று பல காரணிகள் உள்ளன.
தற்காலங்களில் ஒரே குழந்தை பெற்றுக்கொள்ளும் குடும்பத்தில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் காரணத்தால் குழந்தைகள் தனித்து விடப்படுகின்றனர். அவ்வாறு வளரும் குழந்தைகளே அதிக மன நோய் பாதிப்புக்கு ஆளாவது தெரிகிறது. குழந்தைகளின் தனிமை, குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தைகளிடத்தில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எதிர்த்துப் பேசுவது, அடம் பிடிப்பது என நடத்தை ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாக சோகம், கோபம், தனிமை போன்ற மாற்றங்கள் ஏற்படுவதும் இயற்கைதான். சில குழந்தைகள் அந்தச் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்போது, காலப்போக்கில் தானாகவே மறைந்துவிடும். ஆனால், சில குழந்தைகள் தொடர்ந்து தவறான நடத்தை மற்றும் உணர்ச்சி மாற்றங்களைத் தானாகவே வளர்த்துக் கொள்ளும்போது அது அவர்களின் ஆளுமையாகவே மாறி மனநலப் பிரச்னையை உருவாக்கிவிடுகிறது.
தேவையான ஓய்வின்றி அதிக வேலை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் மன அழுத்தம். போட்டி மனப்பான்மை மற்றும் அதிக ஆசையின் காரணமாக அடுத்தவரை விட அதிகமாக முன்னேற வேண்டும் என்ற வெறியினால் ஏற்படும் மன அழுத்தம்.
வலைத்தளங்கள் மற்றும் சோஷியல் மீடியா எனப்படும் தகவல் பரிமாற்ற சாதனங்களால் ஏற்படும் மன அழுத்தம் இன்று மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம் அல்லது மணவிலக்கு ஆகிய சூழ்நிலை அழுத்தங்கள்
விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகள் மரபியல் பிறழ்ச்சிகள், மூளைக்காயம், குறைபாடு, மது, போதைப்பழக்கம், தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு ஜோதிடத்தில் சந்திரனுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு.
ஒருவரின் மனநிலையைத் தீர்மானிக்கும் கிரஹம் சந்திர பகவான் ஆவார். ஒரு ஜாதக அமைப்பில் சந்திரன் நல்ல நிலையில் அமரும்பொழுது, ஜாதகரின் மனநிலை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது, சந்திரன் சர ராசியில் அமரும்பொழுது, ஜாதகரின் மன ஆற்றல் மிகுந்த வேகத்துடனும், ஸ்திர ராசியில் அமரும்பொழுது ஸ்திரமான எண்ணங்களுடனும், உபய ராசியில் அமரும் பொழுது அனைவருக்கும் பயன்தரும் காரியங்களை ஆற்றும் தன்மை பெற்றவராகவும் ஜாதகரை பண்படுத்தும்.
வேதத்தில் புருஷசூக்த மந்திரத்தில் சந்திரனை மனதுடனும் தொடர்புப்படுத்தும் மந்திரம் உள்ளது. “சந்திரமா மனசோ ஜாத:, சக்ஷோர் சூர்யோ அஜாயத”. பொதுவாக முழு நிலவு அன்று மனநோயாளிகளின் பிரச்னைகள் அதிகரிக்கும், அந்த நாளன்று சிலர் ஓநாய்களாக மாறுவர் என்ற நம்பிக்கைகள் உண்டு. பைத்தியத்தையே ஆங்கிலத்தில் லுனாடிக் என்பர். லூனா என்றால் சந்திரன் என்று பொருள்.
மனோகாரகன் என்று அழைக்கப்படுபவர் சந்திரன். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் காட்சிகொடுப்பவர். சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டில் சஞ்சரிப்பதையே நாம் சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் மனோகாரகன் (மனம் தொடர்புடையவர்) என்பதால் இந்த நாட்களில் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நிற்கும்பொழுது மனநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும்.
ஜோதிடமும் மனோவசியமும்
• மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதைக் கட்டுப்படுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுப்படுத்த முடியும்.
• பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனைத் தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள்.
ஜோதிடத்தில் மன நோய்க்கான கிரஹ நிலைகள்
ஜோதிடத்தில் மனதிற்கு சந்திரனையும், புத்திசாலித்தனத்திற்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரஹங்களாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று கிரஹங்களும் நல்ல நிலையில் இணையும்போது மிகுந்த புத்திசாலித்தனத்தையும் அவர்களில் ஒருவர் அசுபத்தன்மை பெற்றாலும் மன நிலையில் பாதிப்புகள் ஏற்படுகிறது.
ஒருவருடைய மன நிலை மற்றும் புத்திசாலித்தனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பாவம் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம்பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநிலைக்கு முக்கியமானதாகும். ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரஹங்கள் தொடர்பின்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மையின்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும்.
1. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்புப்பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.
2. சந்திரன் விருச்சிக ராசி மற்றும் காலபுருஷனுக்கு எட்டாம் வீட்டில் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது மற்றும் சனி 6/8/12 அதிபதியாகி அவருடன் சேர்ந்து எந்த ராசியிலும் நிற்பது.
3. ஒருவருடைய ஜாதகத்தில் பக்ஷ பலமற்ற சந்திரன் ஜென்ம லக்னத்திற்க்கு 6/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது.
4. சந்திரனும் ராகுவும் லக்னத்தில் நின்று திரிகோணங்களில் அசுபர்கள் நிற்பது.
5. சந்திரன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜெனன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது.
6. ஆத்ம காரகனாகிய சூரியன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜெனன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது.
7. லக்னத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் சேர்ந்து நின்ற நிலையில் பலமிழந்த சந்திரனும் புதனும் சேர்க்கை பெற்று நிற்பது.
8. சந்திரனும் புதனும் 6/8/12 வீடுகளில் சேர்ந்து நின்று அவர்களுடன், செவ்வாய், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய அசுபர்களின் தொடர்பு பெறுவது.
9. பலமிழந்த சந்திரனோடு மாந்தி சேர்க்கை பெறுவது, அல்லது சந்திரனோடு சனி மற்றும் ராகு சேர்க்கை பெறுவது.
10. அசுபர் சேர்க்கை பெற்ற மாந்தி ஏழாமிடத்தில் நின்று லக்னத்தை அல்லது சந்திரனை பார்ப்பது.
11. கோப உணர்ச்சியைத் தூண்டும் கிரஹங்களான சூரியன், செவ்வாய், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சனி, பலவித ஃபோஃபியாக்களையும் தற்கொலை மனப்பான்மையையும் ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது ஆகிய கிரஹங்கள் மற்றும் மாந்தி சந்திரனோடு சேர்க்கைப்பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது.
மனபாதிப்பு எப்போது ஏற்படும்?
• சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்களாகும். .
• ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள், சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள்
• சந்திரன் கேது புத்தி காலங்கள், சூரியன் / ராகு / கேது தசா புத்தி காலங்கள்.
ஜோதிட பரிகாரங்கள்
• குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருக்கள் வழிபாடு
• கடையேழு வள்ளல்களில் அதியமான் ஆட்சிபுரிந்த `தகடூர்’ தான் இன்றைய தருமபுரி. அன்னை, கல்யாண காமாக்ஷி எழுந்தருளியுள்ள தலம் `கோட்டை காமாக்ஷியம்மன் கோயில்’ என்றுதான் மக்கள் குறிப்பிடுகிறார்கள். தர்மபுரியில் சனத்குமார நதிக்கரையில் நும்பள பல்லவ மன்னர்களால் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மல்லிகார்ஜூனசுவாமி, கல்யாண காமாட்சியம்மன் கோயில்.
• இந்தக் கோட்டை காமாக்ஷி அம்மன் கோயிலின் வடபுறம் அமைந்துள்ள சன்னதியே `சித்தேசுவரர்’ என இன்று அழைக்கப்படும் சோமேசுவரர் சந்நதி. சந்திரனுக்கு அருள் செய்தவர். மனக்குழப்பம் நீங்க, உள்ளத்தெளிவு பெற, சோமேசுவரரை வழிபடுதல் பயன்தரும். ஒவ்வொரு மாதப் பிறப்பிலும் முதல் வழிபாடு இவருக்குத்தான் நடத்தப் பெறுகிறது.
• மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு, திங்களூர், குணசீலம் மற்றும் திருப்பதி போன்ற சந்திர ஸ்தலங்ளுக்குச் சென்று வருவதும் சிறந்த பலனளிக்கும்.
• சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றைப் பூஜிப்பது.
• சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள்.
• மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள்.
• ராகு / கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு.
• ராகு கேது ஸ்தலங்களான திருநாகேஸ்வரம், திருகீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புறம், கேரளாவில் உள்ள மண்ணார்சாலா ஆகிய ஸ்தலங்களில் ஸர்ப வழிபாடு செய்வது.
• கும்பகோணம் நாச்சியார் கோவிலை அடுத்துள்ள திருநாறையுரில் மாந்தியோடு சேர்ந்து அருள் புரியும் குடும்ப சனி பகவான்.
• கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க ஸ்வாமிகோயிலில் ஜென்ம நக்ஷ்திர நாளில் சென்று வழிபடுவது.
உளவியல் ஆலோசனை
மனநலம் முக்கியமானது எனத் தெரிந்தும், உடல் நலத்திற்கு மருத்துவரைப் பார்ப்பது போல் நாம் மன நலத்திற்கான பணியாளர்களை அணுகுவதில்லை. பைத்தியக்கார்கள் தான் உளவியல் ஆலோசகர்கள், உளவியலாளர்கள், மன நல மருத்துவர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள் போன்ற மனநல பணியாளர்களை அணுகுவார்கள் என்ற தவறான கருத்து நம் சமுதாயத்தில் பரவலாக உள்ளது.
உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்னைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள். உளவியல் ஆலோசனையின் போது, அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. உங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக வாழ, உங்கள் பிரச்னைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை/ஆற்றுப்படுத்துதல் என்கிறோம்.
உளவியல் ஆலோசகர் என்பவர் உங்களின் பிரச்னைகளை வரையறுத்து, உங்களைத் தெளிவாக சிந்திக்கத் தடுக்கும் தடைகளை கண்டுபிடிக்கக்கூடியவர். அந்த குறிப்பிட்ட தடைகளைப் போக்க, உங்களுடன் (தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களுடனும்) இணைந்து, நடைமுறைக்கு ஒத்துவரும் உளவியல் பூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்க உதவுபவர். மனச்சிதைவு, மனச்சோர்வு, அடிமைப் பழக்கங்கள் போன்ற சில மன பிரச்னைகளுக்கு மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் இணைந்து சிகிச்சை அளிப்பதுண்டு.
பல ஜோதிடர்களும் சிறந்த உளவியல் ஆலோசகர்களாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. மன நலம் பாதிக்கப்பட்டோரை தகுந்த சிகிச்சையோடு ஜோதிட ரீதியான ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது மற்றும் ஜோதிடத்தில் கூறப்பட்ட பரிகாரங்களைக் கடைப்பிடிப்பது ஆகியவை மனநோயிலிருந்து விரைவில் விடுபட வழி வகுக்கும் என்பது உண்மை.