அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் ஊறணி மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படாத நிலையில் 138 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
சிங்கள இனவெறி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீட்கும் போராட்டத்தை தமிழீழ மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ள நிலையில், தென் தமிழீழம், அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் ஊறணி கிராம மக்களும் நிலமீட்பு போராட்டமொன்றை கடந்த ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்தனர்.
பூர்வீக இடத்தில் மீளக் குடியமர்த்துமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
1990 ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் கடந்த 2006 ஆம் ஆண்டு வன வளதிணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊறணி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் தமது சொந்த இடமான ஊறணி கனகர் கிராமத்திற்கு திரும்பியிருந்த போதிலும், தமது சொந்தக் கிராமத்தில் குடியேறுவதற்கு வன இலாகத் திணைக்களம் தடை விதித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனாலேயே தமது சொந்த இடங்களை மீட்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்து, கனகர் கிராமத்தின் மத்தியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.