பேரினவாதிகளின் அதிகாரத்திற்கான போட்டியில் கூட்டமைப்பு அரசியல் தீர்வை பெற முயற்சிப்பது சாத்தியமற்றது என ரெலோ தெரிவித்துள்ளது.
ரெலோவின் செயலாளர் நாயகம் ஸ்ரீ காந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரதான சிங்கள கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியற் தீர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது எனவும், இந்த யதார்த்தமான நிலைமையில் பிரதான சிங்கள கட்சிகளில் ஒன்றை எதிர்த்து தமிழர் தரப்பு அரசியத் தீர்வைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனவும் ஸ்ரீ காந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்காவில் நிகழ்ந்து முடிந்த அரசியல் நெருக்கடியில் கூட்டமைப்பின் நிலைப்பாடு, தீர்மானிக்கும் சக்தியாக அதனை நிலைநாட்டியதாகவும் ஸ்ரீ காந்தா கூறியுள்ளதுடன், இந்த நிலையில் அரசியற் தீர்வு ஒன்றினை அரசாங்கத் தரப்பு முன்வைத்தாலும் அது தமிழ் இனத்தின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களை திருப்திப்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த அரசியல் அணியை புறந்தள்ளிவிட்டு அரசியற் தீர்வு பற்றி சிந்திப்பதும் பேசுவதும் விவேகமானது அல்ல எனவும் ஸ்ரீ காந்தா கூறியுள்ளார்.
மேலும், சிங்கள பேரினவாதக் கட்சிகளின் அரசியற் பாரம்பரியத்தின் வழியில் இனவாதக் கோஷத்தை மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியள்ளார்.
ஆகவே, இன்றைய சூழ்நிலையில் அரசியற் தீர்வு நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான திருப்பங்கள் எதற்கும் இடமிருக்கப் போவதில்லை என்று அடித்துக் கூற முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே, பதின்மூன்றாவது திருத்தத்தின் பிரகாரம் காணி மற்றம் பொலிஸ் அதிகாரங்கள், முப்பது வருடங்கள் கழிந்த நிலையில், இனியாவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
கூட்டமைப்பின் ஆதரவில் இயங்கும் அரசாங்கம் அடுத்து வரும் இரண்டொரு மாதங்களுக்குள் தமிழ் மக்களின் மிகவும் நியாயமான சில கோரிக்கைகளையாவது நிறைவேற்ற தவறுமானால், அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பதை கூட்டமைப்பு மறந்தே ஆக வேண்டும என அவர் கூறியுள்ளார்.
எனவே அரசாங்கத்தோடு இனியும் சமரசம், விட்டுக்கொடுப்பு என்பனவற்றிற்கு இடமிருக்க முடியாது எனவும் ரெலோவின் செயலாளர் நாயகம் ஸ்ரீ காந்தா, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.