சிறுவயதில் விபத்தில் பார்வையை இழந்த மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறப்பான பெறுபேற்றை பெற்றுள்ளார். கலைப்பிரிவில் யாழ் மாவட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றிருக்கிறார்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் அன்ரூ ஜன்சன் என்ற மாணவனே, கலைப்பிரிவில் யாழ் மாவட்டத்தில் 3ம் இடத்தையும், அகில இலங்கைரீதியில் 61 இடத்தையும் பெற்றுள்ளார்.
தனது 15வது வயதில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து நெற்றியில் தாக்கியதால் இரண்டு கண் பார்வையையும் இழந்திருந்தார். சிகிச்சைகளிற்காக 2 வருடங்கள் கல்வியை தொடர முடியவில்லை. எனினும் விடா முயற்சியுடைய ஜக்சன் இன்று சாதித்துள்ளார்.
ஆரம்பத்தில் கைதடி நவீல்ட் பாடசாலையில் கல்வி கற்ற ஜக்சன், சிறந்த பெறுபேறுகளிற்காக ஜனாதிபதியிடமிருந்து பரிசில்களையும் பெற்றிருக்கிறார்.
நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் ஜக்சன் மூன்றாவது பிள்ளை. தந்தை கடற்றொழில் செய்து வருகிறார். எதிர்காலத்தில் சட்டத்தரணி ஆவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.