இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து சர்வதேச நியமங்களுக்கு அமைய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சட்டம் கொண்டுவரப்படுவது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் ஒரு வாக்குறுதியாகும்.
இந்த நிலையில் மீளமைப்புகளை மேற்கொண்டு மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை தடுக்கமுடியும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் போர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாகவே பல மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் புதிய அரசாங்கம் அதனை மாற்றியமைப்பதாக கூறி பதவிக்கு வந்து இரண்டு வருடங்களாகிவிட்டபோதும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை என்று சர்வதேச மன்னிப்புசபையின் தென்னாசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்கப்படுதற்காக கொண்டு வரப்படவுள்ள சட்டம் கைதுகளை ஊக்குவித்து குற்றச்சாட்டுக்கள் இன்றி எவரையும் தடுத்து வைக்க பொலிஸாருக்கு அதிகாரங்களை கொடுக்கும்.
போரினால் இறந்தவர்களை நினைவுக்கூற தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனினும் தமது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை எவராலும் தடுக்கமுடியாது.
அவர்கள் நீதிகோருவதையும் தடுக்கமுடியாது. அதனை பெற்றுக்கொடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று பிராஜ் பட்நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.