வடக்கின் ஆத்மாவை தொட்ட தெற்கின் குரேயே ஆளுநராக வேண்டும் எனத் தெரிவித்து இன்று (01) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை ஏற்றிய ரயில் சென்ற நேரத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வட மாகாண தொண்டராசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது மீண்டும் றெஜினோல்ட் குரே வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக வேண்டும் என்றக் கோரிக்கை அடங்கிய ஜனாதிபதிக்கான மனுவை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்தனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எமது தாய்மொழியில் எம்மோடு பேசிய றெஜினோல்ட் குரே எமக்கு வேண்டும்,வடக்கின் தெற்கின் உறவின் பாலம் குரே,வடக்கு மாகாணத்தில் பல்வேறு சேவையாற்றி றெஜினோல்ட் குரேயின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுங்கள்,இனவாதம் இல்லாத ஆளுநர் குரே எமக்கு வேண்டும், அனைத்து மதங்களையும் சமமாக கருதும் ஆளுநர் குரே எமக்கு வேண்டும், வடக்கின் கல்வி மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்த ஆளுநரே எமக்கு வேண்டும் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் பணி நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட காலமாக போரடி வருகின்றனர் அதே வேளை முன்பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் சிவில் பாதுகாப்பு படையில் உள்ளவர்களும் தங்களது இராணுவத்துடனான சேர்ந்தியங்கும் பணி இல்லாமல் ஆக்கப்படலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இவ்வேளை தனது நியமனத்தை இரத்து செய்வதற்காக அவர்களது கோரிக்கைகளை தான் தொடர்ந்தும் வடக்கின் ஆளுநராக இருந்தால் நிறைவேற்றி தெருவேன் என்ற உறுதி மொழியை அந்த பணியில் இருக்கும் சிலரிடம் தெரிவித்து அவர்களை தூண்டிவிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பதே நிதர்சனம்.