முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்கள் பலர் ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்க உள்ள புதிய கூட்டணியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரன்பாடான நிலை காரணமாகவே இவ்வாறு செயற்படுவதற்கு சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அணியினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மூடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுமுறையில் தாய்லாந்துக்கு சென்றிருந்த சமயம் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் பணிகளை இடைநிறுத்துமாறு அலுவலகத்தை மூடுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனை அடுத்து மூடப்பட்ட அலுவலகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. சுதந்திரக் கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோகன லக்ஷ்மன் பியதாஸவினால் நேற்று அலுவலகம் திறக்கப்பட்டதை அடுத்து ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் அலுவலகத்துக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.
நேற்று முதல் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அணியினர் சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என்று கருதப்பட்டமையிலானலேயே அலுவலகத்தைமூடுமாறும் உத்தரவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.