வடதமிழீழம், மன்னார் வங்காலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் மக்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவு நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில், வங்காலை தூய ஆனாள் ஆலய முன்றலில், அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், சுடர் ஏற்றி அருட்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளாருடைய சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, படுகொலைசெய்யப்பட்ட 10 பொதுமக்களுக்கும், அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதோடு, அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இரத்ததான நிகழ்விலும் பலர் கலந்துகொண்டனர்.
1985ஆம் ஆண்டு தை மாதம் 06ஆம் திகதி வங்காலை தூய ஆனாள் பங்குப் பணியாளராகச் சேவையாற்றிய அருட்பணி மேரிய பஸ்ரியன் அடிகளாரும், அவருடன் தங்கியிருந்த சிறுவர்களும், உதவியாளர்களும் பொதுமக்களுமென 10 பேர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
படுகொலைசெய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் மக்களின் நினைவஞ்சலி ஒவ்வொரு வருடமும் வங்காலை தூய ஆனாள் பங்குச் சமூகத்தால் நடத்துப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.