மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம் என்பது மனித இனத்திற்குள் ஒரு பிரிவினையை உண்டாக்குகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதற்கு உதாரணமாகப் பெற்றோர், மாணவர், ஆசிரியர்களையே எடுத்துக்கொள்ளலாம். இன்றைக்கு இருக்கும் சமூகத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இவர்கள்தான் மனிதப்பிரிவினைக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஒரு காரணமாக இருக்கிறார்கள்.
இன்றைய மாணவர்களின் மனநலத்தை சிதைப்பதில் ‘மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம்’ அளவுக்கு அதிகமான பங்கு வகிக்கிறது. இன்றைய பள்ளிகளில் மாணவர்களை மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம் வாய்ந்த மாணவர்கள், தனித்துவம் வாய்ந்த மாணவர்கள், படிக்கும் மாணவர்கள் என்று தகுதி வாரியாகப் பிரித்து அவர்களுக்குப் பாடம் எடுக்கின்றனர்.
இதில் மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம் வாய்ந்த மாணவர்கள்தான் இவர்களின் மிகப்பெரிய வணிகம். தற்போது நம்மிடம் இருக்கும் உணர்வுகளை வணிகமாக்குவது எப்படி என்று யோசிக்கலாம், இல்லையென்றால் சக மனிதனின் பேராசையைத் தூண்டுவது எப்படி என்று யோசிக்கலாம், இவைதான் மனித சமூகத்தின் இன்றைய சமூக உலகமயமாக்கலின் மிகப்பெரிய தாரக மந்திரம்.
கர்வம் என்றுமே மிக அழகான, உயர்வான உணர்வு. ஒவ்வொரு மாணவனுக்கும் கர்வத்தோடு வாழ்வது மிகவும் பிடிக்கும். கர்வம் என்றைக்குமே மாணவ சமூகத்திடம் ஒரு ஆழமான தன்னம்பிக்கையையும், தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை முடித்து கொடுப்பதிலும் மிகப்பெரிய மனநிறைவை எளிதில் அடைந்துவிடுவான். அதற்கான முக்கிய உணர்வு கர்வம். தன்னால் உடல் உழைப்பாலும், மன திடத்தாலும் எளிதில் செய்யமுடியும் என்ற நம்பிக்கையுடன் அவனது வாழ்க்கைக்கு முதல் படிப்பாக எடுத்துக்கொண்டு முன்னேறுவான்.
கர்வம் என்றைக்குமே தனிப்பட்ட மனிதனை அண்ணாந்து பார்க்க வைக்கும். ஆனால், இன்று மாணவ சமூகத்திடம் கர்வம் என்ற அழகான உணர்வு மறைந்து தன்னால் மட்டுமே அனைத்தையும் செய்யமுடியும் என்கிற ஒரு தலைக்கனத்தை கொண்டுவந்துவிட்டது. இன்றைய பெற்றோர்கள் தன் குழந்தையை இந்த சமூகம் கொண்டாட மட்டுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தன் மகனோ/மகளோ மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம் வாய்ந்தவர்கள் என்று அவர்களை இன்று மனித சமூகத்திடமிருந்து பிரித்துவைக்கின்றனர். இன்று பல குழந்தைகள் ஹைப்பர் ஆக இருப்பது சாதாரணமாகிவிட்டது. அவர்களின் அறிவும், கற்கும் திறனும், புதுப் புது விஷயங்களை உருவாக்குவதிலும் மிகச்சிறந்த திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இதனால் ‘தான்’ என்கிற அளவுக்கு அதிகமான பிம்பம் தன்மீது உள்ளது என்று எண்ணி இந்த சமூகத்தை அவன் ஏளனமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கிவருகிறது.
இதுபோன்ற மாணவர்கள் தன்னைவிட பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று அனைவருமே தனக்குக் கீழ்தான் என்கிற மாய பிம்பத்தில் வாழ்கின்றனர். பாடம் தெரியவில்லையா கூகுளை பார்த்து தெரிந்துகொள்ளலாம். வழி தெரியவில்லையா கூகுள் மேப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். தனக்கு தெரியாது என்ற வார்த்தை தன் டிக்ஷனரியில் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றான்.
அதேபோல் பள்ளிகளிலும் கற்கும் திறன் அதிகமுள்ள மாணவர்களை இன்னும் மிகச்சிறந்தவர்களாக ஆக்குவோம் என்று பெற்றோர்களிடம் ஒரு பெரிய வணிகத்தை ஏற்படுத்திவருகின்றனர். இதில் கொஞ்சம் படிக்காத மாணவர்களை ஏதோ வாழத்தகுதி அற்றவர்கள் போல் நடத்துகின்றனர். அதனால் திறமைசாலிகளுக்கும், திறமையைக் கற்றுக்கொள்ள ஆசைப்படும் மாணவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உருவாகி விரோதம் என்கிற உணர்வு மேலோங்கியிருக்கிறது.
தனித்தன்மையைக் கட்டமைத்தல் இன்று அனைத்துப் பெற்றோர்களும் தன் குழந்தையை யாரும் திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, இந்த வெளி உலகம் அவனை கொண்டாட மட்டுமே செய்யவேண்டும் என்ற மிகப்பெரிய பேராசையை அவர்கள் உருவாக்கிவருகின்றனர். அவமானம் இல்லாமல் வாழ்வில் வெற்றி இல்லை என்று நம் முன்னோர்களில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற பல ஜாம்பவான்கள் கூறுகின்றனர். தடவிக் கொடுத்தல் (Pampering) என்பது வேறு, செல்லம் என்பது வேறு. ஆனால், இன்று அனைத்துப் பெற்றோர்களும் குழந்தைகளைத் தடவிக் கொடுத்து அவர்களைக் காயத்தின் வலியை உணரவிடாமல் தடுக்கின்றனர்.
பெற்றோர்கள் சம்பாதிக்கும் வருமானத்திற்கு மீறி வரம்பு கடந்த செலவீனம் இன்று அனைத்து வீடுகளிலும் காணமுடிகிறது. எனக்குத் தெரிந்த ஒரு அப்பார்ட்மென்டில் வசிக்கும் குழந்தைகள் புது வருடப் பிறப்பின்போது உறுதிமொழி எடுத்தனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் எந்த விதமான பொருளையும் வாங்கமாட்டோம் என்பதே அந்த உறுதிமொழி. அதற்கு அந்தப் பெற்றோர்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளின் ஸ்டேட்டஸ் உயர்ந்திருக்கிறது என்றும், அவர்களின் கல்வியறிவு அவர்களை மாற்றிவிட்டது என்றும் ஜம்பம் அடித்து பெருமையாக நினைத்துக்
கொண்டனர்.
இது ஒரு வகையான பொருட்களின் மீது ஒரு ஆதிக்கத்தை ஏற்படுத்துவது. தன்னிடம் இருக்கும் பொருள் வேறு எந்த மனிதனிடமும் நான் பார்க்கக்கூடாது என்கிற மனோபாவம். அந்தப் பொருளைப் பயன்படுத்தும் தகுதி தனக்கு மட்டுமே உள்ளது என்கிற வெறித்தனத்தை உருவாக்கும் மனோபாவம். இது இன்றைய சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பை மனிதர்களிடையே ஏற்படுத்தும்.
கல்லூரியில் படிக்கும் பெண் caller tune அவளிடம் இருந்த புதுப்பாடலை வாங்கி அவளது தோழி அதை அவளது caller tune-ஆக மாற்றினாள். அந்தப் பெண் அவளது காதலனுக்கு வைத்திருந்த பாடல். அதனால் உடனே அந்தப் பாடலை தோழி மொபைலிலிருந்து அழித்துவிட்டாள். பாடல்தானே என்று எளிதாக நாம் எடுக்கலாம்.
ஆனால், இன்று பாடலை அழிப்பவள் நாளை பொருளையோ, மனிதனையோ அழிக்க ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறாக இன்றைய மாணவ சமூகம் தன்னைச்சிறந்தவன் என்றும், தன்னிடம் இருப்பது வேறு யாரிடமும் இருக்கக்கூடாது என்றும் அதற்கு அவனது உயிரை விட சிறப்பானவன் என்கிற பிம்பத்தை ஏற்படுத்த கடும் முயற்சி மேற்கொள்கிறான்.
பெற்றோர்கள் இவன் சிறப்பானவன்/சிறப்பானவள் என்கிற எண்ணத்தை ஒரு விதையாக போட்டுவிடுகின்றனர். இதனால் அவன்/அவள் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை விட தன்னை மேலானவர்களாகவும், சிறப்பு மிக்கவனாகவும் கருதிக்கொள்வதால் அவன்/அவள் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு நடவடிக்கையிலும், தன்னுடைய தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் அவனது சொற்களும், செயல்
களும், அமைந்துவிடுகின்றன.
அவன் வயது ஏற ஏற தனித்தன்மையின் குணாம்சமும், தனித்தன்மையின் பரிணாமமும் பல்வேறு வகைகளில் அதிகரிக்கின்றது. தன்னுடைய உணர்வுகளைக் கூட ஒரு குறிப்பிட்ட வடிவங்களில் மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.“தான் சிறந்தவன்” என்பது தன்னுடைய குணநலன்/குணாம்சத்தை மேம்படுத்தக் கூடிய தன்மையுடையதாக இருக்க வேண்டும். வீண் பிடிவாதமாகவும், வறட்டு ஜம்பமாகவும், முட்டாள் தனமான உணர்வு
களின் வெளிப்பாடாகவோ இருக்கக்கூடாது. பேஸ்புக், வாட்ஸ்-அப், ட்விட்டர் என்று அதில் அனைவரும் பாராட்ட வேண்டும், ரசிக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்று அதற்காக நிரூபிக்கக்கூடாது.
“சிறந்தவன்” என்ற எண்ணத்தோடு வாழ்வது அழகு. ஆனால், நான் மட்டும்தான் சிறந்தவன் என்ற எண்ணம் ஒருவித மாயத் தோற்றமே ஒழிய நிஜம் அது அல்ல. இதைப் புரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்கள் மிகைப்படுத்தாமல் ஒரு தனித்துவத்தை உங்கள் குழந்தைகளிடம் உருவாக்குங்கள். உனது திறமை, பழகும் விதம், குணநலன் இதைப்பொறுத்தே இந்த சமூகம் உன்னைக் கொண்டாடும். சமூகத்திற்கு என்றுமே கொண்டாட்டம் பிடிக்கும். அதுவும் மனிதனைக் கொண்டாடுவது மனிதனுக்குத்தனி சந்தோஷம். அதனால் தான் பதவி, நடிப்பின் மீது ஒரு தீரா காதலுடன் பலரும் பயணிக்கின்றனர்.
சிறந்தவன் என்கிற அங்கீகாரத்தை அடைய பல மனிதர்களை சம்பாதிப்பார்கள். மனித கூட்டத்தோடு பயணிப்பார்கள். மனிதனை ஒதுக்கமாட்டார்கள். குறை, நிறையுடன் உள்ள மனித கூட்டத்தை தனக்கு என்று சம்பாதிப்பார்கள். அதனால் சிறந்தவன் என்ற வார்த்தையை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். தனித்தீவாக மாறாமல், உங்களுடன் படிக்கும் மாணவர்களுடனும், நண்பர்களுடனும், அக்கம்பக்கத்து வீட்டினருடனும் பழகவேண்டும்.
அனைத்துப் பொருட்களைப் பயன்படுத்த தெரிய வேண்டும். அனைத்து வகையான உணவும், தண்ணீரும், காலநிலையும் சேரவேண்டும். அப்படியென்றால்தான் இயற்கையோடு நீ முழுமையாக ஆரோக்கியமாக இருக்கிறாய் என்று அர்த்தம். ஆகவே, என் இளைய தலைமுறையே வாழ்க்கையை மனித சமூகத்துடன் வாழ்ந்து அதில் சிறந்தவன் என்ற பெயரோடு கொண்டாட்டமாக வாழக் கற்றுக்கொள்!