கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் வன்னி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த ஈழத்தமிழ் உறவுகளுக்காக இந்தியாவின் பல்வேறிடங்களிலும் நீத்தார் வழிபாடு இடம்பெற்றுள்ளது.
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீச்சரர் கோயிலில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர் தலைமையில் இலங்கை சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்நாடு இந்து மக்கள் கட்சிச் செயலாளர் இராம. இரவிக்குமார் மற்றும் நூற்றுக்கணக்கான சிவ அடியார்களும், அன்பர்களும் ஒன்று கூடி உயிர் நீத்த பல இலட்சம் தமிழருக்காக நீத்தார் வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேநேரத்தில் இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் இந்தியாவின் புண்ணிய தலமான காசி கங்கைக் கரையிலும், தமிழ்நாட்டில் இராமேச்சரம், சீர்காழியி, மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், கோயம்புத்தூர் ஆகியவிடங்களிலும் நீத்தார் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வைகாசி, தேய்பிறை, எட்டாம், ஒன்பதாம் பத்தாம் நாள்கள், அவிட்டம், சதயம், பூரட்டாதி விண்மீன் கூடிய நாள்களாகும்.
திருவள்ளுவர் ஆண்டு 2040 வைகாசி மேற்காணும் நாள்களே (17, 18, 19.05.2009) போர்க்களத்தில் பல இலட்சம் தமிழர் உயிர் நீத்த தினமாகும். நீத்தார் வழிபாடு, வீரர் நடுகல் என்பன 5000 ஆண்டுகாலத் தொன்மையான, இடையீடின்றித் தொடர்கின்றது.
இதேவேளை, அடுத்து எழுகின்ற தலைமுறைகளால் தொடரவுள்ள தமிழர் வழமை என இலங்கை சிவசேனைத் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.