“அந்த நூறு ரூபா……………
“ இண்டைக்கு எப்படியும் வரும்”
செல்லி விடியற் காலமையே நம்பிக்கையூடன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
அதிகாலை நிலம் வெளிக்க முந்தி நித்திரை விட்டெழுந்து பரபரத்து தனது வேலைகளையெல்லாம் முடித்தாள்.
பலாலி வீதியில் ஆமி விசில் ஊத முந்தியே வீட்டை விட்டு புறப்பட்டாள். பலாலியில் இருந்து முகமாலைக்கு வாகனங்கள் தொடரணியாக புறப்பட ஆயத்தம் செய்த உடனேயே விசில் ஊதப்படத் தொடங்கும் .
வீதியில் கூப்பிடு தூரத்திற்கு ஒன்றாக நிற்கும் ஆமி பிரதான வீதிக்கு வரும் ஒழுங்கைகள் , பெரிய வீதிகள் எல்லாம் மறிக்க தொடங்கி விடுவார்கள்.. பிரதான வீதிக்கு நூறு மீற்றர் தூரத்திலேயே மறிப்பு போடத் தொடங்குவார்கள்.
பழைய பரல் தடிகள்,கொங்கிறீற் கல்லுகள் போட்டு வீதியை யாரும் கடக்காதபடி பார்ப்பார்கள்.
துப்பாக்கியுடன் இருவர் இருவராகக் காவல் இருப்பார்கள்.
அக்கம் பக்கத்து மரம் செடி கொடிகள் எல்லாம் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்வார்கள்..
ஆமி பிரதான வீதியையும் ஒழுங்கைகளையூம் காவல் காத்து நிற்க விசில் ஊதப்பட்டு ஒருமணித்தியாலத்தின் பின்னர் பலாலியிலிருந்து முகமாலை நோக்கிய வாகனத் தொடர் அணி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும்.
சிலவேளையில் விசில் ஊதப்பட்டு 2 மணித்தியாலம் கழிந்த பின்பு தான் வாகனங்கள் செல்லி வீட்டுப் பிரதேசத்தைக் கடக்கும் அதுவரையில் தொழில் துறைகளுக்கு பறப்படுபவர்கள் தத்தம் பாட்டிலேயே ஒழுங்கைகளில்,பெரிய றௌட்டுக்களில் நிற்க வேண்டியது தான்.
யாரும் ஓரிடமும் அசைய முடியாது.
பலாலி வீதியின் முழுவதையூம் கண்காணித்து ஒரு தொகுதி ஆமி நிற்பார்கள். ஆங்காங்கே ஒழுங்கைகள் , முடக்குகள் , வீதிகளை கண்காணித்து இன்னுமொரு தொகுதியினர் நிற்பார்கள்.
நேற்றைய தினமும் இந்த அவஸ்தைகளை அனுபவித்தபடி செல்லி வந்து முழுநாளும் இருந்தும் ஏமாற்றம் தான் .
பின்னேரம் 4 மணிக்கு வந்த காரியம் சரிப்பட்டு வராமல் போக செல்லி தனது வீட்டிற்கு திரும்ப முற்பட்டாள் .
அப்போது விசில் ஊதப்பட்டு விட்டது. அதனால் அவள் மாலை 6 மணி வரையும் அந்த அலுவலக வளவில் அடைபட்டுக்கிடக்க வேண்டி வந்தது.
அதனால் இண்டைக்கு எப்படியூம் வந்திடும் , நாலுமணிக்கு முந்திப்புறப்பட்டு வீட்டிற்கு வந்து விட வேண்டுமென வந்தாள். அவளது நல்ல காலம் விசில் ஊதப்படவில்லை. ஆனாலும் விசில் ஊதுவதற்கு ஆயத்தமான நிலையில் நிற்பதைக் கண்டு ஓட்டமும் நடையூமாக வந்தாள்.
தான் பத்திரமாக வைத்திருந்த அந்தக் காட் திரிபோசாப் பைக்கற் வந்த பொலித்தீனுக்குள் இருக்கிறதாவென செல்லி திரும்பவும் சரி பார்த்துக்கொண்டாள்.
அவள் வந்து சேர்ந்த போது அந்த அலுவலகத்திற்குப் பொறுப்பான பொம்பிளைப் பிள்ளையும் வந்து சேர்ந்திருந்தாள்.
அலுவலகம் திறந்தவுடன் அந்த பிள்ளையிடம் செல்லி சென்று “வந்து விட்டதா” என்று கேட்டாள் .
“ இல்லையெணை வருசத் தொடக்க மாசத்தில இப்பிடித்தானேணை இண்டைக்கு எப்பிடியும் கட்டாயம் வந்திடுமென ” நம்பிக்கை ஊட்டினாள்.
“;ம்…………” எனச் செல்லி நீண்ட பெருமூச்சை விட்டு விட்டு தான் கொண்டு வந்திருந்த வெற்றிலைச் சரையை எடுத்தாள்.
வெற்றிலையை எடுத்து அதன் நுனியை மடித்துக் கொய்து தனது நெற்றியில் வைத்து என்ர லட்சுமி என்றாள் பின்பு வெற்றிலையை நெடுக்காக சரிபாதியாக கிழித்து எடுத்தாள்.
பக்குவமாக வெற்றிலையின் பின்புறமாக சிறிதளவூ சுண்ணாம்பைத் தடவினாள். சீவல் பாக்கு ,புகையிலை ஆகியவற்றை சேர்த்து உண்ணத் தொடங்கினாள்.
செல்லி வெற்றிலை மெல்லத் தொடங்க ஆரம்பிக்கும் போது ஆமிக்காரன் விசில் ஊதினான் . திடீரென்று வீதியில் ஆரவாரங்கள் மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.
செல்லி தனது துர்பாக்கிய நிலையை நினைத்துக் கொள்ள மனம் கடந்த காலத்தின் மீது அசை போடத் தொடங்கியது.
அந்த செம்புல மண்ணில் செல்லியின் வாழ்க்கை மிகவும் அமைதியாகவே போய்க் கொண்டிருந்து. வறுமை வாழ்வின் சகல கட்டங்களிலும் சந்தித்துக் கொண்டிருந்தது.
ஆனால் வாழ்வில் அமைதி இருந்தது. போர் என்றால் என்னவென்று தெரியாத காலம் அது.
செல்லியின் தந்தை கந்தனுக்கச் சொந்தமாக காணிபூமி இல்லை.
சேதுகாலர் உடையாரின் வாரிசுகளின் தோட்டங்களில் கூலிக்கு நிற்பதால் அவர்களது கலட்டிக் காணி ஒன்றில் கொட்டில் போட்டு குடியிருக்கும் வசதி கிடைத்தது.
கந்தனது குடும்பம் செல்லியுடன் சேர்த்து 6 பிள்ளைகள் கொண்டது.
கந்தனின் மனைவி வடிவு தன் கணவனுடன் வறுமையிலும் செம்மையாக குடும்பத்தை நடத்தினாள்.
குடி வெறி,சூது வாதுஇஎதுவூம் தொியாத அக் குடும்பம் உடையார் குடும்பத்தின் தோட்டங்களை பராமரித்து அதனால் கிடைக்கும் கூலியின் மூலம் குடும்பத்தைப் பங்குனி என்று பெருக்காமலும், சித்திரை என்று சிறுக்காமலும் ஓரளவு பார்த்துக் கொண்டது.
செல்லிக்கு பதினெட்டு வயதாக இருக்கும் போது அவளது தாய் மாமன் மகன் லட்சுமணனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவா்களது குலதெய்வம் அண்ணமார் கோயிலில் சோறு கொடுப்பதுடன் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது.
செல்லி இலட்சுமணன் இல்லறத்தில் பாசப் பிணைப்பால் மூத்தவன் முகுந்தனும்,இரண்டாமவன் கண்ணனும் பிறந்தார்கள்.
பிள்ளகைள் இருவரும் இராம இலட்சுமணர்கள் போல ஒற்றுமையாக வளர்ந்து வந்தார்கள்.
அவர்களின் குதூகலத்தில் மகிழ்ந்து பொழுதுகள் சந்தோசமாகவே போய்க் கொண்டிருந்தது.
1980 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஆங்காங்கே வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கியது.
நாட்டின் இயல்பு வாழ்க்கை குழம்பத் தொடங்கியது. அதுவரை இருந்த அமைதி நிலை குழம்பி பயமும் பதட்டமும் உள்ள காலப்பகுதி ஒன்றை மக்கள் எதிர்கொள்ளத் தொடங்கினார்கள்.
அன்றாடம் காய்ச்சிகளான கந்தன் செல்லியின் குடும்பத்திற்கு அதற்கான காரண காரியங்கள் எதுவுமே புரியவில்லை.
புரிதலுக்கான தேவைகள் தேவையில்லாத வாழ்க்கை அவர்களது.
முகுந்தனுக்கு அப்போது பதினெட்டு வயது அக்கறையாக உயர்தரம் படித்துக் கொண்டிருந்தான்.
இரண்டாமவன் கண்ணன் தாயின் சேலைக்குள் புதைந்து. செல்லம் கொஞ்சிக் கொண்டிருப்பான். அவனும் ஓஎல் வகுப்பு மாணவன் .
இடையிடையே அண்ணனுடன் செல்லமாகச் சண்டை பிடித்துக் கொள்வான்.
கள்ளம் கபடமற்ற வஞ்சகம் எதுவுமே அறியாத எளிய கிராமிய வாழ்க்கை.
1984 ஆம் ஆண்டு பலாலி வீதியில் ஓரிடத்தில் திடீரென்று குண்டு வெடிப்புச்சத்தம் கேட்டது. வாகனம் ஒன்று அகப்பட்டுக் கொண்டது. அதில் வந்த சிலர் மாண்டு போனார்கள்.
பின்னால் வந்த இரு வாகனங்களும் தப்பிக் கொண்டன.
மூத்த மகன் முகுந்தனை தனது பழைய சைக்கிளில் ஏற்றிக் கொண்டு இலட்சுமணன் வந்து கொண்டிருந்த நேரம் அது.
அவா்களை நோக்கியும் வீதியால் போனவா்,வந்தவர்களை நோக்கியும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டது.
அந்தோ பரிதாபம் தந்தையும் மைந்தனுமாக மாண்டு போய் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
அந்தத் துக்கச் செய்தியை அயலட்டத்தவர்கள் .காவிக் கொண்டு செல்லியின் வீட்டிற்கு வந்த போது அவள் கீரிட்டு அழுத குரல் அந்தப் பிராந்தியத்தையே உறைய வைத்தது.
இளையவன் கண்ணன் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வர அழு அழென்று அழுதான். தான் உயிருக்கு உயிராக நேசித்த அவர்கள் தான் உலகமென்று நேசித்த தந்தையும், அண்ணனும் இல்லை என்ற போது அவனது உலகம் இருண்டு போனது.
இனி எந்தக் காலத்தில் அவா்களுக்கு வசந்தம் வரப் போகிறது. தன் பிள்ளைகள் படித்து உயா்ந்த ஒளிமயமான வாழ்வு வாழ்வார்கள்..
தானும் புருசனும் அதைப் பார்த்துப் பார்த்து அவா்களது நிழலில் ஆறலாமென்று கண்ட ஆனந்தங்கள் யாவும் துப்பாக்கி வேட்டுக்களால் துடைத்தெறியப்பட்டது.
ஆனந்தம் விளையாடிய அந்தக் கொட்டில் வீடு அவலங்களின் உறைவிடமாகியது. புருசனதும்,பிள்ளையினதும் உயிரற்ற உடல்கள் வீட்டிற்கு வந்தது.
செல்லியும் அவள் உறவூகளும் உயிரெடுத்துக் கத்தினார்கள். ஊரே சோகம் கவ்வி அழுதது. எப்படித்தான் அழுதாலும் மாண்ட உயிர்கள். மீண்டு வரவா போகிறது. உடையார் குடும்பம் செத்த வீட்டிற்குரிய அடிப்படை செலவுகளைப் பார்த்துக் கொண்டார்கள்..
இளையவன் கண்ணன் தன் அண்ணனுடன் விளையாடிய ஆனந்த பொழுதுகளை எண்ணி எண்ணி அடிக்கடி அழுது கொள்வான்.செல்லியும் தன் மகனை மடிக்குள் அணைத்து வீரிட்டு அழுது கொள்வாள்;.
துப்பாக்கி வேட்டொலிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலிக்கத் தொடங்க அந்த வாழ்க்கைக்குள் இசைவாக்கம் பெற்று வாழத் தொடங்கினார்கள்.
உயர்தரம் படிக்க ஆரம்பித்த கண்ணனின் கதை பேச்சிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது.
அவன் அரசியல் கருத்துக்களை செல்லிக்கு விளங்கக் கூடியதாக கூறத் தொடங்கினான். அவன் உயா; தரம் படிக்க ஆரம்பித்தாலும் படிப்பை விட வேறு திசையில் கவனம் போவது செல்லிக்கு விளங்கியது..
அவள் என்ன தான் செய்ய முடியும்.
செல்லியும் வெய்யிலிலும் மழையிலும் துன்பப்பட்டு தோட்ட வேலைக்கு போய் கண்ணனின் படிப்பை கவனித்துக் கொண்டாள்;.
அன்றொரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து. கண்ணன் ரியூசனுக்கு போனவன் பொழுது பட்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இரவின் பொழுதுக்குள் உலகம் போகத் தொடங்கிய நேரத்தில் கண்ணனுடன் ஒன்றாக படிக்கும் மயூரன் சைக்கிள் ஒன்றை உருட்டி வந்தான். சைக்கிளின் கரியரில் கண்ணனின் ரியூசன் கொப்பிகள் இருந்தது.
செல்லியின் முகத்தை பயந்து பயந்து பார்த்துக் கொண்டு வந்தான்.
செல்லி என்ன ஏது என்று கேட்டுப் பரபரத்தாள்;. மயூரன் சைக்கிளில் இருந்த கொப்பியில் எழுதப்பட்டிருந்த கடிதத்தை வாசித்துக் காட்டினான்.
“ அன்பும் பாசமும் மிக்க அம்மாவிற்கு எங்கள் அப்பாவினதும் அண்ணாவினதும் இழப்புக்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை”. எமக்கு ஏற்பட்ட துன்பம் எமது இனத்திற்கு இனிமேல் ஏற்படக் கூடாது.
விடிவு காணப் போகிறேன்.
இப்படிக்கு உன் அன்பு மகன் கண்ணன் .
கடிதத்தை வாசிக்க வாசிக்க ஆரம்பித்த செல்லியின் விசும்பல் அழுகை கடிதம் வாசித்து முடித்த பின் போிரைச்சலாக வெடித்தது.
குய்யோ முறையோ என்று அழுதாள்.
அயலட்டமெல்லாம் ஓடிவந்தார்கள்.
அவளுடன் சேர்ந்து தாமும் அழுதார்கள். கண்ணன் போல பலரும் போகத் தொடங்கிய காலம் அது.
இடி மேல் இடி விழுந்தது போலச் செல்லியின் துன்பம் நீண்டது.
காலச் சக்கரம் உருண்டோடியது. வாழ்கையில் எதிலும் பிடிப்பற்றுச் செல்லியின் பொழுதுகள் கரைந்து.
வேட்டுச் சத்தங்களுடன் வாழப் பழகியாகி விட்டது. ஒன்றரை வருடங்கள் ஓடியது.
ஒரு நாள் திடகாத்திரமான ஓர் இளைஞன் வீட்டை நோக்கி மாலைப்படும் வேளையில் வந்தான் .
செல்லி தூரத்தேயிருந்து பார்த்தாள். ஆவலுடன் தன்னை நோக்கி வரும் அந்த இளைஞனைப் பார்த்த போது அது தனது மகன் கண்ணன் என அடையாளம் கண்டு கொண்டாள்.
கண்ணனும் தன் பிரிவால் வாடி வதங்கிப் போயிருந்த தாயைக் கண்டு ஓடிவந்துகட்டிப்பிடித்து ஆனந்தமாக கொஞ்சினான்.
செல்லி இழந்த தனது உறவை மீண்டும் கண்ட போது போன உயிர் திரும்பி வந்தது போல ஆனந்தப்பட்டாள்.
கண்ணன் அயலட்டத்தவருக்கு தன் வருகையைப் பறைசாற்ற வேண்டாமெனச் சொன்னான்.
தன் தாயின் கையால் புட்டவிக்கச் சொல்லி ஆசை ஆசையாக அள்ளித் தின்றான். தனது புதிய வாழ்க்கை பற்றியூம் தனது புதிய நண்பர்களைப் பற்றியும் கண்ணன் கூறக் கூற செல்லி நூதனமாகக் கேட்டாள்.
சொந்தக் கதை , சோகக்கதை யாவற்றையும் இரவிரவாகப் பகிர்ந்து கொண்டார்கள்.
விடிகாலையில் இருளுக்குள் கண்ணன் புறப்பட்டான்.செல்லியும் தடுக்க முடியவில்லை.
கேள்விப்பட்டால் அவர்கள் வந்தால் என்ன செய்வது. புறப்படும் போது சொன்னான் “ அம்மா ” இப்போது என்னை மாறன் எண்டு தான் கூப்பிடுறவயள்” செல்லிக்கு என்ன சொல்வது .
போர் தந்த கோலமல்லவா அவன் விரும்பியோ விரும்பாமலோ காலம் இட்ட கட்டளையல்லவா. என் குடும்பத்தின் வசந்தத்தை ஏன் பறித்தாய் இறைவா என மனம் குமுறினாள் .
நாள்கள் ஓடின .மாறனது செயற்பாடுகள் தொடர்பான செய்திகளும் அவளைத் தேடி வந்தது. அதே நேரம் மாறனாகி விட்ட கண்ணனைத் தேடி வாகனங்களும் வீட்டுக்கு வரத் தொடங்கின.
. அதட்டல்கள் , வெருட்டல்கள் நிறைந்த துன்ப வாழ்க்கை ஒன்றிற்குள் செல்லி தள்ளப்பட்டாள்.
காலம் ஓட ஓடக் களத்தின் காட்சிகளும் மாறின. மாறன் இப்போது வெகு சுதந்திரமாக வாகனத்தில் நண்பர்கள் சகிதம் வரத்தொடங்கினான்.
பயமேதுமின்றி அம்மாவென ஆசை தீர அழைத்தான். தன் தாயின் கையால் சமைத்து நண்பர்களுக்கும் கொடுத்து எமக்கும் ஓர் நாள் விடிவு வருமென்றான்.
கண்ணனை இடையிடையே பார்க்கக் கிடைக்கிறதே என ஆறுதல் அடைந்தாள்.
அந்த ஆறுதல் நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. செல்லியின் வாழ்வில் மீண்டும் ஓர் நாள் பேரிடி விழுந்தது. தன் கனவை நனவாக்கும் சண்டை ஒன்றில் மாறன் இறந்துவிட்டான்.
அவனது உயிரற்ற உடல் அவனது தோழர்களால் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. செல்லி என்ன செய்வாள்.
உடலின் பலமெல்லாம் திரட்டி தன் உற்றத்தார் சுற்றத்தாருடன் கூடி தலைவிரி கோலமாக அழுதாள்.
மாறனின் உடலைத் தொட்டுத் தொட்டு அவனது முகத்தைக் கொஞ்சிக் கொஞ்சி அழுதாள்.
தன் கணவன் , மூத்தவன் முகுந்தனும் போன இடத்திற்கு “ என்ர ஐயா நீயும் போனாயோ” எனச் சொல்லி அழுத போது அழாத கண்களெல்லாம் அழுதன.
மாறனின் தோழா்கள் உரிய மரியாதை செலுத்த அவனது உடல் தீயூடன் சங்கமித்துக் கொண்டது. செல்லியின் வாழ்கை நடைப்பிணமானது.
நீண்ட பெரு மூச்சை விட்டு தன் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டாள்.
அந்த கந்தோரில் வேலை செய்த பொம்பிளைப்பிள்ளைகளிடம்
“ மேனே இப்ப நேரமென்ன” அம்மா இப்ப காலை பத்தேமுக்கால் என்றாள் அந்தப் பெண்
சற்று நேரத்தில் மீண்டும் விசில் ஊதிக் கேக்க செல்லிக்கு விளங்கியது வாகனத் தொடரணி போய் முடிந்து விட்டதென.
செல்லி தன் வெற்றிலை வாயை அசைபோட்டவாறு பார்த்துக் கொண்டிருக்க வீதியால் வாகனங்கள் மீண்டும் செல்லும் சத்தங்கள் கேட்டது.
அப்போது கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் ஓர் அரச உத்தியோகத்தர் வந்து இறங்கினார்.
மஞ்சள் நிறத்தில் இருந்த பெரிய என்வெலப்பில் அந்த பெண் உத்தியோகத்தரிடம் கொடுத்தார்.
“ தை மாதத்தில் ஒதுக்கீட்டு கடிதம் வருவதில் பிந்துகிறது இதை ஒவ்வீசுக்கு கொண்டு வர ஆக்கள் கிடைக்கேல்ல அதனால் நானே நேரே கொண்டந்திட்டன் . உங்களிட்ட கிடக்கிற காசெல்லாத்தையூம் கொண்டு இண்டைக்கு பின்னேரத்துக்கிடையில் கொடுக்கக் கூடிய ஆள்களுக்கு கொடுங்கள்” என்றார்.
செல்லியின் பக்கம் வந்து “ அம்மா உதவிப் பண காசுக்கோ நிற்கிறியள்”
“ ஓம் ராசா” “சரி அம்மா முதலாவது ஆளா நீங்கள் எடுங்கோ . மற்றவர்களுக்கும் சொல்லி விடுங்கோ” என்றார். செல்லி உபதபாலதிபரான அந்த பெண்பிள்ளையிடம் தனது பொது சன மாதாந்த உதவிப்பண (PAMA) அட்டையைக் கொடுத்தாள்.
அந்தப் பொம்பிளைப் பிள்ளையும் செல்லியின் இடது கைப் பெருவிரல் அடையாளத்தைப் பெற்றாள்..
தனது லாச்சியிலிருந்து 100 ரூபா தாள் ஒன்றை எடுத்துச் செல்லியிடம் கொடுத்தாள். கடவுளைக் கண்ட பக்தனைப் போல அந்த தாளை ஆனந்தமாகப் பெற்றாள்.
“பிள்ளை நாளைக்குத் தைப் பொங்கல் வீட்டில அரிசி கிடக்குது. நீ தந்த 100 ரூபாவில பயறு , சக்கரை வேண்டலாம் மேனே” என்று நன்றியுடன் உபதபாலதிபரான அந்தப் பெண்ணிடம் கூறினாள்.
உதவிப் பணக் கொடுப்பனவுப் பத்திரங்களைக் கொண்டு வந்த அந்த உத்தியோகத்தர் ஒரு நூறு ரூபாவிற்கு இவ்வளவூ பெறுமதியாவென ஏக்கத்துடன் சிலையாக நின்றார்.
( பெயர்கள் மட்டும் கற்பனை)
ஆக்கம் – வேதநாயகம் தபேந்திரன்
நன்றி – தினக்குரல் வாரவௌயீடு 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை