நல்லாட்சி நிலவுகின்ற இந்தநாட்டின் முக்கியமான மாகாணங்களில் கடந்த 81நாட்களாக தொழில்கேட்டு சாத்வீகமாகப் போராடிவருகின்றோம். இதுவரை மத்தியஅரசோ மாகாண அரசோ தீர்க்கமான தீர்வைத்தரவில்லை என காரைதீவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்தனர்.
காரைதீவு விபுலானந்த சதுக்கமருகேயுள்ள கட்டடமொன்றில் இப்பத்திரிகையாளர் மாநாடு இன்று சங்கத்தலைவர் நசுருதீன் தலைமையில் 2மணிநேரம் நடைபெற்றது.
அவர்கள் மேலும் கூறுகையில்,
பெப்ருவரி 15ஆம் திகதி திருமலை சென்று கிழக்குமாகாண முதலமைச்சரைச்சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்தததும் இருவாரத்திற்குள் தீர்வுதருவதாகச் சொன்னார்.அதனால் பெப் 27இல் நாம் இஙங்கு போராட்டத்தைத் தொடங்கினோம். ஆனால் 03மாதங்கள் கழிந்துவிட்டன. ஒன்றுமே நடக்கவில்லை.
அன்று தொடங்கிய போராட்டத்தை நோயாளர்களைப் பார்பப்தைப்போல் சில அரசியல்வாதிகள் வந்து பார்வையிட்டு காலஅவகாசத்தைக்கோரிச்சென்றனர்.
பல ஹக்கீம் றிசாட் உள்ளிட்ட அமைச்சர்கள் எதிர்க்கட்சித்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலதரப்பினர் வந்து சென்றனர். ஆனால் உருப்படியாக ஒன்றுமே நடக்கவில்லை.
நாட்டின் ஜனாதிபதியோ பிரதம மந்திரியோ இதுவரை எமது பிரச்சினையையிட்டு வாய்திறக்காதது வேதனைக்குரியது. நல்லாட்சி என்றால் தமது மக்களின் பிரச்சினைகளை அவ்வப்போது இனங்கண்டு தீர்த்துவைக்கவேண்டும்.
பட்டதாரிகளை ஏமாற்றினால் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை இப்போதே தெரிவிக்கின்றோம். உங்களது அரசியல் சாணக்கியம் தந்திரம் உங்களோடு இருந்து கொள்ளட்டும்.
நாம் பொறுமைகாப்பது படித்தவர் என்பதற்காக. எம்மைச் சீண்டினால் எமது போராட்ட வியூகம் மாறும். பெற்றோர்களுக்கு 150ருபா பெறுமதியான அல்சர் மருந்துகூட வாங்கிக் கொடுக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் அவமானத்தோடு வறுமையில் வாடுகின்றோம்.
இதேவேளை கிழக்குமாகாண முதலமைச்சர் எமக்கான தீர்வை ஜனாதிபதி கூட்டும் முதலமைச்சர் மாநாட்டையடுத்து கூறுவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை எந்த தீர்வையும் அவர் சொல்லவில்லை. 4674 பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லையென அறிகின்றோம்.
நேற்று விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நல்லமுடிவு தருவதாகச் சொன்னார்கள். ஒருவித தகவலுமில்லை. எனவே இன்னுமின்னும் இழுத்தடிக்காமல் மிக விரைவாகப் பெற்றுத்தர உதவுங்கள்.
கட்டம் கட்டமாகத் தொழில்தருவதை ஏற்கமாட்டோம். நாம் ஒருவருடம் நாட்டிற்காக இலவசமாக தொழில் செய்யவும் தயார். அனைவருக்கும் தொழில் தரவேண்டும். அதுவரை போராடுவோம்.
தேவையானால் ஜே.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்து போராடவும் தயங்கோம். நோன்புகாலம் ஆரம்பமாகப்போகிறது. முஸ்லிம் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை பார்க்க இருக்கின்றோம்.
பெண்பட்டதாரிகள் கருத்துரைக்கையில்,
நாம் எத்தனையோ சொல்லொணாக் கஸ்டத்தின் மத்தியில் இங்கு 81நாட்களாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றோம். எம்மில் பலர் இன்னும் திருமணமாகவில்லை. அதற்குக்காரணம் மாப்பிள்ளைக் கேட்டால் பெண் பட்டதாரியென்றாலும் தொழில் இருக்கிறதா என்று கேட்கின்றார்கள்?
தொழில் இல்லாமையினால் எமக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இது எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே படித்த எமக்கு தொழிலைத் தாருங்கள்.
தலைவர் நசுருத்தீன் திலீபன் றினோஸ் காசிப் பசீல்கான் தைரியா போன்ற பட்டதாரிகள் கருத்துரைத்தனர்.
இறுதியில் பத்திரிகையாளர்கள்கேட்ட கேள்விகளுக்கு பட்டதாரிகள் பதிலளித்தனர். விஞ்ஞான கணிதபட்டதாரிகள் எத்தனை பேருள்ளனர் எனக்கேட்டதற்கு 65பேரிருப்பதாக பதிலளித்தனர்.