இன்று ‘வலுவிழந்தோர்’ எனும் பதமானது அகராதிகளில் ‘மாற்றுத்திறனாளிகள்’ எனும் பதத்தால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் உடல், உள ரீதியான குறைபாடு காரணமாகத் தமது வாழ்வியல் தேவைகளைச் சுயமாக எதிர்கொள்ள முடியாதவர்களே ‘மாற்றுத்திறனாளிகள்’ எனச் சட்ட ரீதியாகக் கருதப்படுகின்றனர். சமூக அபிவிருத்தி அமைச்சு, விழிப்புலன், செவிப்புலன், பேச்சு, நகருதல், புரிந்து கொள்ளுமாற்றல், உளம் சார்ந்த விடயங்கள் தொடர்பான வலுவின் இழப்பைக் கருத்தில் கொண்டே இத்தகைய மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் பாதுகாப்புச்சட்டத்தில் மாற்றுத்திறனரிகள் குறித்து பின்வரும் வரைவிலக்கணம் விபரிக்கப்பட்டுள்ளது. பிறப்பில் இருந்தோ உடல், உள ஆற்றல்களில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு உள்ளமையால் வாழ்க்கையின் அத்தியாவசிய செயல்களை செய்வதை உறுதிப்படுத்த முடியாத குறையே மாற்றுத்திறன் எனப்படும், மாற்றுத்திறன் தொடர்பான வைத்திய மற்றும் சமூக பொருளாதார அம்சங்களை உள்ளடக்கிய பரந்தளவிலான வரைவிலக்கணம் இதுவாகும். அதாவது உடலிலோ, மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக ஒருவரால் ஒரு சில செயல்களை செய்ய முடியாமல் போகின்ற காரணத்தினால் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்கின்றோம்.
மேலும், மாற்றுத்திறனை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இயற்கை காரணிகள், மனிதனால் உருவாக்கப்படும் காரணிகள் என்பன செல்வாக்கு செலுத்துகின்றன. அந்த வகையில் இயற்கை காரணிகளாக தாயின் கருவில் ஏற்படும் பாதிப்பு, மரபணுவால் பிறப்பிலே ஏற்படும் மாற்றம், தீராத நோய் என்பனவாகும். மனிதனால் உருவாக்கப்படும் காரணிகளாக யுத்தம், போதைப்பொருள் பயன்பாடுகள், அணுவாயுத பரிசோதனைகள், விபத்துக்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். மாற்றுத்திறனாளிகள் எனும் வரையறைக்குள் உட்படுத்தக் கூடியவர்களாக விழிப்புல வலுவிழப்பு, செவிப்புல வலுவிழப்பு, வாய்பேச முடியாதோர், கை ரீதியான வலுவழப்பு, கால்ரீதியான வலுவழப்பு, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் (இடுப்புக்கும், கழுத்துக்கும் கீழ் இயங்காதவர்கள்) என்றவாறு வகைப்படுத்தப்படுகின்றது.
இலங்கையில் நடைபெற்ற நீண்டகால யுத்தத்திற்கு பின்னர் இலங்கையானது சமூக பொருளாதார நிலைகளில் பல பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ள நாடாக காணப்படுகின்றது. முப்பது வருடங்காக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த பயங்கர வாதிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், மாற்றுத்திறனாளிகளாக உள்ளாக்கப்பட்டும், பெறுமதியான பௌதிக மற்றும் மனித வளங்கள் அழிக்கப்பட்டமையால் வடகிழக்கு மக்கள் மீளத்திருப்புவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிகமான பாதிப்புக்களை வன்னிப் பிரதேசமே எதிர்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 10% வீதமா இருந்தது. சுகாதர அமைச்சு மக்களின் குறைபாடுகளிற்கு பாதுகாப்பு உதவிகளை கொடுக்கவேண்டும் என்பதால் ‘ராகம’ பகுதியில் Rehabilitation மற்றும் Rhermotoloy மருத்துவனை அபிவிருத்தி செய்ய வேண்டும். எனக் குறிப்பிட்டது. அதன் படி இவ் அமைப்பின் செயற்கை அபயவ உற்பத்தி நிறுவனங்கள் திருகோணமலை, வவுனியா, காலி, பதுளை போன்ற இடங்களில் நிறுவப்பட்டது.
மேலும், 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசனத்தொகை மதிப்பீடானது இலங்கையின் சனத்தொகையில் 1.6 சதவீதமானோர் மாற்றுத்திறனாளிகளாக குறிப்பிடுகிறது. தற்போதைய உலகமயமாதல் சுழலில் உலகம் முழுவதும் வாழும் மக்கள் தொகையில் 15% வீதத்திற்கு மேற்பட்ட மக்களும், இலங்கையில் 22.2% மக்களும் உடல், உள மாற்றுத்திறன் கொண்டவர்களாக காணப்படுகின்றனர் என சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வடக்கில் மாத்திரம் 18,085 பேர் மாற்றுத்திறனிற்கு உள்ளாகி உள்ளனர் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். (2017) மேலும், வடக்கு மாகாணத்தில் மாற்றுத்திறனாகளிற்கான மாதாந்தக் கொடுப்பனவை 4,163 பேர் பெறுகின்ற போதிலும், இந் நிலைமைக்கு ஆளாகியுள்ள 11,625 பேர் எவ்விதக் கொடுப்பனவையும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்ற தகவலையும் வெளியிட்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் சனத்தொகை 2040 ம் ஆண்டுகளில்; 24.8% வீதம் வரை அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சாலை விபத்து, நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை காரணமாக இவ்வாறான நிலை அதிகரிக்குமென கூறப்படுகின்றது. உலகிலுள்ள மக்கள் தொகையில் பத்து சதவீதத்தினர் அதாவது 65 கோடி மக்கள் மாற்றுத்திறனுடன் கூடிய நபர்களாக உள்ளனர் என உலக சுகாதார நிறுவனப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 80 வீதத்தினர் அதாவது 40 கோடிக்கு மேற்பட்டோர் மூன்றாம் உலக நாடுகளில் வாழ்கின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலுள்ள மாற்றுத்திறனுடைய சிறாரில் 90 வீதத்தினர் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை (2008) கூறுகிறது. வலுவிழந்த நிலையிலுள்ள 2 கோடிப் பெண்கள் அதனை கருவுற்ற காலத்திலோ அல்லது குழந்தைப் பிறப்பின் போதோ பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் 75% சதவீதமானவர்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும், 45% சதவீதமானவர்கள் படித்தவர்கள் என்றும், 34% சதவீதமானவர்கள் படிக்காதவர்கள் என்றும் கூறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டு அரசு 2001 தொடக்கம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக டிசம்பர் 3 இனை அறிவித்தனர். 1981 ம் ஆண்டை சர்வதேச மாற்றுத்திறனாளிகளிற்கான ஆண்டாகவும், ஜக்கியநாடுகள் சபை 1982 டிசம்பர் 3ம் திகதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் எனவும் அறிவித்தது. இத்தினம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான அனுசரிக்கப்படுகின்றது. உலக சனத் தொகையில் 5 சதவீதமானோர் மாற்றுத்திறனுடையவர்கள் எனவும் அவர்களில் இருபது சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களெனவும் உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியால் பார்க்கும்போது மாற்றுத்திறன் இல்லாத மக்களைவிட மாற்றுத்திறனிற்கு உள்ளான மக்கள் குறைந்த சுகாதார நிலையையும், குறைவான கல்வித்தரத்தையும், குறைவான வருமானத்தினால் கூடியளவு வறுமை விகிதத்தையும் கொண்டுள்ளனர். இதற்கான முக்கிய காரணங்களாக கல்வி, சுகாதார சேவைகள், மற்றும் வேலைவாய்ப்புக்கள், போக்குவரத்துப் போன்றவற்றை இவர்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகும். உடல், உள ரீதியாக ஆரோக்கியமுள்ள ஒரு தனிநபர் கூட அன்றாடம் தமது செயற்பாடுகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் நாளாந்தம் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். அவ்வாறான இன்றைய சமூக அமைப்பாண்மையின் தொழிற்பாடுகளின் மத்தியில் உடல், உள ரீதியாக பூரணமான ஆரோக்கியமற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஓவ்வொரு சமூகமும் ‘மாற்றுத்திறன்’ என்ற பிரச்சினையைக் கொண்டுள்ளது. ஒரு நபர் இயலாதவராகக் காணப்படும் போது அவர் மனம் சோர்வடைந்து உளரீதியாக பாதிக்கப்பட்டு சமூக பொருளாதார வழிகளிலும் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றனர். நாளாந்தம் அதிகரித்து வரும் மாற்றுத்திறன்கொண்ட நபர்களை சமூகத்துடன் இணைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இன்று மேலைத்தேய நாடுகளில் மாற்றுத்திறன்கொண்ட நபர்கள் சமத்துவம் அடைவதற்கான அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் சாய்தளம் வசதியாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. ஆனால் இலங்கையில் பொதுமக்களிற்கு சேவை வழங்குகின்ற பொதுசேவை மையங்களில் உள்ள பொது கட்டிடங்களில் சாய்தள அமைப்பு இன்மையால் சக்கரநாற்காலி பயன்படுத்துகின்றவர்கள் தங்களது தேவைகளை தாங்களே நிறைவுசெய்து கொள்ள முடியாமல், தமது தேவைகளை நிறைவு செய்வதற்காக நீண்டநேரம் காத்திருந்து இன்னொருவரின் உதவியினை எதிர்பார்க வேண்டிய நிலைகாணப்படுவதனால் இது உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.
பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் வாகனங்களில் மாற்றுத்திறனாளிகளிற்கான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை அனுபவிக்கின்ற வகையில் அவை வழங்கப்படுவதில்லை. அறிவுறுத்தல்களை பல நடத்துனர்களோ, சாரதிகளோ, ஏனையவர்களோ கண்டு கொள்வதில்லை. இதனால் மாற்றுத்திறனிற்குள்ளான நபர்கள் தினமும் அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். அதேவேளை சக்கர நாற்காலிகளில் வரும் நபர்களிடமே சக்கரநாற்காலிக்கும் பணம் கேட்கும் நிலையும் காணப்படுகின்றது.
மேலும், 1988ம் ஆண்டின் இலங்கையின் பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனுள்ள நபர்கள் தொழில் செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும், தகுதியும் இருக்குமானால் 3% முன்னுரிமை கொடுத்து உள்வாங்கப்படுதல் வேண்டுமெனவும் மாற்றுத்திறனை காரணமாகக்காட்டி அவர்களை நிராகரிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் இலங்கையில் மாற்றுத்திறனுள்ள நபர்களை தொழிலுக்கு இணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை.
இதே வேளை கொரியா நாட்டில் 10% மாற்றுத்திறனுள்ள நபர்களிற்கு தொழில் முன்னுரிமை வழங்கவேண்டும். வழங்க மறுக்கும் நிறுவனங்கள் அரசில் பதிவு செய்யமுடியாது நிலை காணப்படுகின்றது. இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் வேலையை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்குகின்ற சவால்களாக மாற்றுத்திறனாளிகளால் எல்லாவிதமான வேலைகளையும் செய்து கொள்ளமுடியாது இது உடற்பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப வேறுபடுகின்றது, மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்துகின்ற போது குறைந்த ஊதியத்துடன் வேலைக்கு அமர்த்துதல் மாற்றும் நீண்ட நேர வேலை செய்வித்தல், மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான பிரச்சினையை மாத்திரம் கருத்திற் கொண்டு அவர்களால் சிறப்பாக வேலை செய்ய முடியாது என்று கருதி வேலையில் இணைத்துக் கொள்ளப்படாமை, மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்துகின்றபோது அவர்களிற்கான அணுகும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை மற்றும் மாற்றுத் திறனாளிகளை வேலைக்குச் சேர்த்துக்கொண்டால் அணுகும் வசதிகளை ஏற்படுத்த வேண்டு என்பதற்காக வேலையில் சேர்த்துக்கொள்ளாமை. மேலைத்தேய நாடுகளில் மாற்றுத்திறன்கொண்ட நபர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான விசேட வாகனத் தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தரிப்பிடங்கள் வீதிகளிலும் பொதுவிடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த அணுகும் வசதிகளான போக்குவரத்து, சாய்தள அமைப்பு, தொழில்வாய்ப்பு மற்றம் சுயதொழில் வாய்ப்பு, அணுகும் வசதியுள்ள மலசலகூடம், தரமான செயற்கை அபயவங்களின் கிடைப்பனவு தன்மை போன்றன போதுமானவையாக மற்றும் தரமானவையாக காணப்படாமையால் மாற்றுத்திறன்கொண்ட நபர்கள் தன்னிச்;சையாக தங்களது செயற்பாடுகளை தாமே நிறைவு செய்துகொள்ள முடியாதுள்ளது. இதனால் மற்றவர்களில் தங்கிநிற்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் உள, சமூக ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாற்றுத்திறன் என்பது சமூக மற்றும் சூழல்சார் பரிமாணங்களையும் கொண்டிருப்பதாக வெகுவாக அறியப்பட்டுள்ளது. மாற்றுத்திறன்கொண்ட நபர் ஒருவர் சாதாரண செயற்பாடுகளில் பங்கேற்கும் தன்மையில் சமூகத்தில் உள்ள காரணிகளும் தடைகளும் தாக்கம் செலுத்துகின்றன. எனவேதான் மாற்றுத்திறன் என்பதை சரிவர புரிந்துகொள்ளல் என்பது குறித்த நபரிடம் காணப்படும் உள்ளார்ந்தமான தடைகள், சூழலால் உருவாக்கப்படும் தடைகள் ஆகிய இரண்டையும் மட்டுமன்றி இவையிரண்டிற்கும் இடைத்தொடர்புடைய காரணிகளைக்கூட உள்ளடக்கியுள்ளது. இதுவே மாற்றுத்திறன் உருவாக்க செயன்முறை எனப்படுகின்றது.
மேலும், இவ்விடயமானது ஜக்கியநாடுகள் சபையாலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு அது பின்வருமாறு குறிப்பிடுகின்றது. நிண்டகால உடலியல், மனநல, அறிவுசார் அல்லது புலன்சார் குறைபாடுகள் உடையோர் பல்வேறுபட்ட தடைகளை எதிர்நோக்கும் போது சமூகத்தில் ஏனையவர்களுக்கு சமமாக சமூக விடயங்களில் பங்குபற்றுவதானது வெகுவாக பாதிக்கப்படுகின்றது. அந்த வகையில் சமூகப் பங்குபற்றலுக்கான தடைகளாக மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் எதிர்நோக்கும் தடைகள் ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்புடைய நான்கு விடயங்கள் காணப்படுகின்றன.
அந்த வகையில் பௌதீகரீதியான தடைகளை நோக்குகின்றபோது மாற்றுத்திறனாளிகள் தாம் வாழ்கின்ற சூழலில் இடத்திற்கு இடம் நகர்வதற்கு விசேடமான நடமாட உதவும் கருவிகள் தேவைப்படும். உதாரணமாக சக்கரநாற்காலி, ஊன்றுகோல், நடத்தல் சட்டங்கள் போன்றன. மேற்படி உதவு கருவிகள் இல்லாதவிடத்து மாற்றுத்திறனாளிகளால சமூக தொடர்புகளை மேற்கொள்ள தடையாக அமையும். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குத் தேவையான உதவிச் சாதனங்களை கொண்டிருந்தாலும் கூட அவர்கள் வாழும் சூழலினது அமைப்பு முறையில் பல தடைகள் காணப்படுகின்றது. பொதுவாக சுற்றுச்சூழல் கட்டமைப்புகள் மாற்றுத்திறனுடன் கூடிய மக்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படாத தன்மை காணப்படுகின்றது.
உதாரணமாக:
- படிக்கட்டுக்களுடைய கட்டிடங்களிற்கு சக்கரநாற்காலி மற்றும் ஊன்றுகோல்கள் பாவிப்பவருக்கு உட்பிரவேசிக்க முடியாது போகும்.
- பொதுப் போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதில் கடினம். உதாரணமாக: சக்கரநாற்காலி பயன்படுத்துகின்றவர்களிற்கு, மிக மெதுவாக நடப்பவர்களுக்கும் அல்லது குறைந்தளவு உடல் வலிமையுள்ளவர்களுக்கும் பஸ் வண்டிகளில் ஏறுவது, இறங்குவது கடினமாகும்.
- பொதுவாக மலசலகூடங்கள், குளியலறைகள் என்பவற்றினது வடிமைப்பானது சக்கர நாற்காலி பாவிப்பவர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் உள்ளது. சக்கர நாற்காலி பாவிப்பவர்களுக்கான மலசலகூடங்களோ சற்று விசாலமானதாகவும் தாமாகவே உள்ளே பிடித்து உந்திச்செல்வதற்கும் வெளியே உந்தி வருவதற்கும் ஏற்றவாறு கைப்பிடிகள் இருக்கவேண்டும்.
எனவே தான் மாற்றுத்திறனாளிகள் அனுகக் கூடியவகையில் அவர்களது பௌதீக சூழலானது மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
உதாரணமாக:
• கட்டடங்களுக்குள் பிரவேசிப்பதற்கான சாய்தள வழிகள்
• சக்கர நாற்காலி உள்ளே செல்லக்கூடியவாறான பெரிய மலசலகூடங்கள்
• சீரானதும் தடைகளற்றதுமான நடை பாதைகள்
மேலும், சமூகத்தடைகளாக சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அறிவுத்தரும், மனப்பாங்கு மற்றும் அணுகுமுறைகள் என்பனவே சமூகத் தடைகளாகும். இதில் மாற்றுத்திறனாளிகள் பற்றி அவர்களது தேவைகள், உரிமைகள் பற்றி காணப்படும் குறைந்த அறிவு, விழிப்புணர்வு அத்தோடு எதிர்மறையான மனப்பாங்கு, மாற்றுத்திறனாளிகளுடன் நடந்துகொள்கின்ற தன்மை மற்றும் அவர்களை ஏளனமாக பார்க்கும் பழக்கவழக்கங்கள் என்பனவும் உள்ளடங்கும். மேற்படி பிரச்சினைகள் குறிப்பிட்ட மாற்றுத்திறனாளிகளிடமோ அவரது குடும்பத்தினரிடமோ, அவர்களுடன் தொழில்ரீதியாக தொடர்புடையவர்கள் மற்றும் பரந்து சமூகத்திடமோ காணப்படலாம்.
உதாரணமாக
• மாற்றுத்திறனாளிகளது பெற்றோர் தனது பிள்ளைக்கு படிப்பதற்கு செலவு செய்வதானது வெறுமனே காலத்தையும் பணத்தையும் விரயம் செய்வதாக நினைக்கின்றார்கள். எனவே அவர்களது கல்வியை தட்டிக் கழிக்கின்றார்கள். இது எதிர்காலத்தில் அவர்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட தொழில்வாய்ப்புக்களையே பெற்றுக்கொடுக்கும்.
• ஒரு ஆசிரியர் தனது வகுப்பறையில் இருக்கும் கற்றல் பிரச்சினையை எதிர்கொள்கின்ற ஒரு பிள்ளைக்கு தேவையான உதவிகளை செய்யாமலும் போதுமான அளவு கவனம் செலுத்தாதும் இருக்கலாம். எனவே பிள்ளைக்கு வகுப்பில் இருந்த விருப்பமானது குறைந்து சென்று இறுதியில் இடைவிலகிவிடும்.
• மாற்றுத்திறனுள்ள நிலையிலுள்ள ஒரு இளைஞன் வீட்டில் தங்கி வாழக்கூடிய அமைப்பில் வளர்க்கப்பட்டிருத்தல் அவர் தொழில் ரீதியான ஒரு பயிற்சியில் பங்குபற்ற விரும்பாது தனது விட்டிலேயே தங்க விரும்பலாம்.
• தொழில் வழங்குனர்கள், வலுவிழந்தோரை அடுத்தவர்களோடு ஒப்பிடும்போது உற்பத்தித்திறன் குறைந்தவர்கள் எனக் கருதி இவர்களுக்கு தொழில் வழங்காமை.
மேலும், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் வறுமையான சூழலில்தான் வாழ்கின்றார்கள். இதற்கு பிரதானமாக குறித்த இயலாமையின் காரணமாக தொழில்வாய்ப்பினை பெறுவதிலோ, வேலைத்தளங்களை அடைய முடியாமையோ அல்லது வேலை வழங்குனர்களது மனப்பாங்கோ காரணமாக அமையலாம். அடுத்ததாக தம்முடைய இயலாமையின் காரணமாக கீழ்குறிப்பிடப்பட்டவை போன்ற மேலதிக செலவுகள் ஏற்படுத்துவதாய் இருக்கலாம்.
• மருத்துவ பராமரிப்பு
• புனர்வாழ்வுக்கான சாதனங்கள் (நடமாடும் உதவுகருவிகள்)
• போக்குவரத்து – உதாரணமாக சக்கர நாற்காலி பாவனையாளருக்கு பஸ் வண்டியில் செல்ல முடியாது. இதன் போது முச்சக்கர வண்டிகள் பொருத்தமானவை. ஆனாலும் இதற்கு அதிகம் செலவாகும்.
• தொழில்நுட்பம் – உதாரணமாக பேச்சு உபாதையுள்ளவருக்கு, தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ அழைப்பினை செய்து அடுத்தவரோடு சைகை மொழி மூலம் பேசலாம். அதேபோன்று பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு எழுத்து வடிவத்தினை பேச்சுவடிவில் மாற்றித்தரக்கூடிய கணனி மென்பொருட்களை உபயோகிக்கலாம்
மேற்கூறப்பட்ட பௌதீக, சமூக மற்றும் பொருளாதார தடைகளை நீக்குவதற்கு சட்டவிதிகள் அவசியம். மாற்றுத்திறனாளிகளிற்கான உரிமைகள் மற்றும் விருப்புகளை பாதுகாப்பதற்கு அவர்களுக்குத் தேவையான சேவைகள் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான சேவைகள் வழங்கப்படுகின்றமையை உறுதிசெய்வதற்கும் அரசாங்கத்தினது சட்டவாக்கம் மற்றும் கொள்கைகள் என்பன அவசியப்படுகின்றன. சட்டங்கள் மற்றும் கொள்கைகளான மாற்றுத்திறன் சம்பந்தமான பிரச்சினைகளைப்பற்றி பேசும் விதத்திலும் கல்வி, தொழில்;, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் தொடர்பாடல் போன்ற பகுதிகளுக்கு விசேடமான சட்ட திட்டங்களை வகுக்கும் விதத்திலும் பரந்துபட்ட கொள்கைகளை கொண்டிருத்தல் வேண்டும். அந்த வகையில்
இலங்கையில் காணப்படும் சட்டங்களும் கொள்கைகளும்:
• மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச்சட்டகம், 1996 (இலங்கை அரசாங்கம் ) இதன் மூலம் வலுவிழந்தோரிற்கான தேசிய சபை உருவாக்கப்பட்டது.
• மாற்றுத்திறனாளிகளிற்கான அனுகும் வசதி விதிமுறைகள் (2006). அனைத்து பொது நிறுவனங்கள், பொது இடங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகளுக்கான அணுகும் வசதிகளுக்கான விதிமுறைகள் முன்வைத்துள்ளது. இந்த விதிமுறையானது நடைமுறைக்கு வந்ததிலிருந்து எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அனைத்துப் பொது கட்டிடங்களும் மேற்படி சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றது.
• மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான தேசிய கொள்கை 2003 (சமூகசேவை மற்றும் பொதுநல அமைச்சு, இலங்கை). இதில் கல்வி, தொழில்சார் பயிர்ச்சி, வீடமைப்பு, சுகாதாரம் போன்ற விரிவான பரப்பினை உள்ளடக்கியுள்ளது (இந்த பதிப்பின் பின்னிணைப்பில் விளையாட்டு சம்பந்தமான பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது)
• 1997 ஆம் ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள், மாற்றுத்திறனுடைய சிறுவர்களையும் ஏனைய சிறுவர்களுடன் ஒருங்கே இணைத்துக் கல்வியைக் கற்பிக்க வழிவகுத்தது. தேசிய கல்வி நிறுவகம், மாற்றுத்திறனுடையோருடைய கல்வியின் அபிவிருத்தி தொடர்பான பல செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமுறைகள் மற்றும் கொள்கை வரைவுகள் போதுமானதா என்பது விவாதிக்கக்கூடிய ஒரு விடயமே. சட்டங்களும், கொள்கைகளும் குறைவாகவே காணப்பட்டாலும் அவற்றைக்கூட நடைமுறைக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறித்த சேவை வழங்குனர்களுக்கு (ஆசிரியர்கள், சமூகசேவகர்கள்) விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
அத்தோடு, வளங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே அவர்களுக்கு மேற்படி சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இலங்கையில் சேவை வழங்குனர்கள் எந்த அளவுக்கு மாற்;றுத்திறனாளிகள் தொடர்பான சட்டகள், விதிமுறைகளை அறிந்திருக்கிறார்கள் மற்றும் எந்த அளவுக்கு இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குறியே!
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும் போதும், செயற்பாடுகளை ஒழுங்கு செய்யும் போதும். இயன்றவரை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்கான காரணங்களாக:
• மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாதாரண நபர்கள் ஒன்றாக பங்குபற்றுவதானது அனைவருக்கும் சம உரிமை உண்டு என்ற விடயத்தினை உறுதிப்படுத்தும்.
• மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாதாரண நபர்களிற் இடையிலான தொடர்புகளை அதிகரிக்கச் செய்வதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் உள, சமூக சாவல்களை குறைக்க முடியும்.
அதிகமான மாற்றுத்திறனுடைய நபர்களிற்கு சாதாரண மக்களிற்கு தேவைப்படாத சில விசேட புனர்வாழ்வு சேவைகள் தேவைப்படுகின்றன. அல்லது சில மாற்றுத்திறனாளிகள் தாமாவோ சில சேவைகளை உருவாங்கிக்கொள்ளவோ அல்லது சுயமாக உதவிசெய்து கொள்ளவோ அல்லது சுயமாக உதவிசெய்துகொள்ளும் குழுக்களோ, சங்கங்களோ தேவைப்படலாம். எனவேதான் இங்கு ‘இரட்டை வழி’ அணுகுமுறையினது தேவையானது உணரப்படுகின்றது. இது உள்வாங்கபட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளிற்கான பிரத்தியேக அணுகுமுறைகள் இரண்டையும் உள்ளடக்கியது. இவை இரண்டின் மூலமாக வலது குறைவுடைய நபர்களின் சிறந்த சமூக பங்களிப்பினை உறுதி செய்ய முடியும்.
மாற்றுத்திறனாளி நபர்களிற்கான இரட்டை வழி அணுகுமுறை:
மேலும், மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்குகின்ற உள, சமூக சவால்களை தீர்த்துக்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக காணப்படுகின்றது. சமூக சூழலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமான மாற்றுத்திறனிற்குட்பட்ட நபர்கள் தன்னிச்சையாக தங்களது தேவைகளை தாங்களே பூர்திசெய்ய கூடியவர்களாகவும், மற்றவர்களில் தங்கிநிற்கின்ற நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமாக அவர்களது உள சமூக வாழ்வில் மாற்றத்தினை ஏற்படுத்தமுடியும்.
உசாத்துணை நூல்கள்:
இராசேந்திரன். ரூ 2000; ‘சமூகப்பிரச்சினைகள்’ ‘சமூகவியல் துறை”அண்ணாமலை பல்கலைக்கழகம்’
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு: 2003 ‘இலங்கைக்கான வலது குறைவு பற்றிய தேசியக் கொள்கை’ பத்தரமுல்லை. இலங்கை.
சுபயஜினி. உ: 2014; ‘proceedings of Jaffna university International Research conference (JUICE 2014) புவியியல துறை, கலைப்பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
முரளிதாஸ்.ஏ. 2000 ‘அபிவிருத்திப் பொருளியல்’ இதழ் 01. ‘இளம் பொருளியலாளர் மன்றம்’ பொருளியல் துறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை.
ஜீவசுதன்.சு. மானுடம் ‘போரும் ஊனமும்’ சமூமகவில் துறை, யாழ் பல்கலைக்கழகம்.
‘வலதுகுறைவுடைய சிறுவர்களையும் இளையுர்களையும் உள்வாங்குதல் தொடர்பான கைநூல்’ (அனைவருக்கும் விளையாட்டு) 2013, ஹண்டிகப் இண்டர்நஷனல், ஸ்ரீலங்கா.
இலங்கை கைச்சாத்திடப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைக்கான ஜக்கிய நாடுகள் ஒப்பந்தம். (2007)
அணுகும் வசதிதொடர்பான 2006.10.17 திகதியிடப்பட்ட இலங்கை அரசின் வர்த்தமானி.
வலதுகுறைவுடையேரது உரிமைகள் பாதுகாபதற்கான சட்டம், 1996
DELD (2000). Disablity poverty&Development. Avialbleat: http:www.handicapinternational