தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் இன அழிப்புப்போருக்கு எதிராக தமிழீழ மக்கள் நடாத்திவரும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிங்கள் அரச படைகளின் கொடூரமான தமிழின அழிப்புப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஏழு கோடி தொப்பிள்க்கொடி உறவுகளான தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக 29.01.2009 அன்று தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 10 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
2009 சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற பத்திரிகையாளர், திரைத்துறை தொழில்நுட்பவியலாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக தமது இறுதி அறிக்கையை அங்குக் கூடியிருந்தோரிடையே வழங்கினார். அது அவரது ஆழ்ந்த அரசியல் அறிவையும், கொள்கை உறுதியையும் பறைசாற்றியது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து 19 பேர் தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”