தென்தமிழீழம், மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் பல மாநகர முதல்வரின் பணிப்பின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களே இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
குறிப்பாக ஆண் , பெண் மாணவர்களுக்கான தனியான மலசல கூட வசதிகள், சுத்தமான குடிநீர் வசதிகள், கற்பித்தல் நடைபெறும் இடத்தில் போதுமான காற்றோட்டம், வெளிச்சம், இருக்கை வசதிகள், முறையான கழிவகற்றல் முகாமைத்துவம், மாணவர்களுக்கான வாகன தரிப்பிட ஏற்பாடுகள் மற்றும் கட்டண ஒழுங்குகள் என பல விடயங்கள் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டன.
கடந்த வருடம் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில், தமது கல்வி நிலையங்களில் கல்வி பயில வரும் மாணவர்களின் அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்யக் கூடிய வகையில் கல்வி நிலையங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுஇ அவற்றை நிவர்த்தி செய்ய கால அவகாசம் கொடுத்தும் பல தனியார் கல்வி நிலையங்கள் அவற்றை கருத்தில் கொள்ளாது வகுப்புகளை நடாத்துவதாக பெற்றோர் மற்றும் மாணவர்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு ஏற்ப இந்த சோதனை நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
அத்துடன் மாணவர்களின் வசதியான கற்றல் செயற்பாடுகளையும் அவர்களின் நலன்களையும் கருத்தில் கொள்ளாது செயற்படும் கல்வி நிலையங்கள் அனைத்தும் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் தமக்கு சுட்டிக்காடப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாது தமது செயற்பாடுகளை மேற்கொண்டால் மாநகர சபையின் கட்டளை சட்டத்திற்கு அமைய குறித்த தனியார் கல்வி நிலையங்களின் அனுமதி ரத்தாகும் .எனவும் தெரிவித்தார் . அத்துடன் பெரும் சிரமத்தின் மத்தியில் பணம் சம்பாதித்து தமது பிள்ளைகளின் கல்வி மேம்பாடுக்காக இவ்வாறான கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் பெற்றோர்கள் அனைவரும் தமது பிள்ளைகள் எவ்வாறான சூழலில் கல்வியைப் பெறுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இச் சோதனை நடவடிக்கையில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல், மாநகர பொதுசுகாதார பரிசோதகர்கள், மாநகர சபையின் சுகாதார நிலையியல் குழுவின் தலைவர் இரா.அசோக், மாநகர சபை உத்தியோகத்தர்கள், மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களும் ஈடுபட்டனர்.