கஞ்சாவை தாமே வைத்துவிட்டு, போலி குற்றச்சாட்டை சுமத்தி அப்பாவி நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துகின்றார்கள் என்று சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் கடந்த மாத இறுதியில் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போது, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து பெருமளவு கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது. சந்தேகநபர் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். அவரை இன்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமைவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர் இன்று மீண்டும் முற்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.
சந்தேகநபர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவரை அங்கு வைத்துக் கைது செய்த பொலிஸார், யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து இந்த மன்றில் முற்படுத்தியுள்ளனர். பொலிஸார் தங்களிடமிருந்த கஞ்சாவை வைத்துவிட்டு சந்தேகநபரிடமிருந்து அதனை மீட்டதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும் என்று சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
சந்தேகநபர் வல்வெட்டித்துறையிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்த போது, யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்டது கேளர கஞ்சாவாகும். அவரைக் கைது செய்து கஞ்சாவை வைக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லை என சட்த்தரணியின் சமர்ப்பணத்தை பொலிஸார் மறுதலித்திருந்தனர்.
பொலிஸ் நிலையங்களிலும் மேலதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இவ்வளவு தொகை கஞ்சாவை பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.
அத்துடன், சந்தேகநபரை வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று அன்றுவரை வழக்கை ஒத்திவைத்தது.