ஜெனீவாவில் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக அவசரமாக “வீட்டு வேலைகள்” சிலவற்றைச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்பட்டிருக்கின்றது. அதில் ஒன்றுதான் தென்னாபிரிக்க பாணியில் உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் அறிவித்திருப்பது. அதற்கு மேலாக “மறப்போம்; மன்னிப்போம்” எனவும் அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். இதனைவிட, அதிகாரப் பகிர்வு யோனைகளை உள்ளடக்கிய அரசியலமைப்புத் திருத்தத்தைச் செய்ய சிறிலங்காவின் இரு பிரதான சிங்கள தேசியவாதக் கட்சிகளும் இப்போது “அவசரமாக” இணக்கம் தெரிவித்திருக்கின்றன.
ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் தாம் முன்னேற்றகரமான சிலவற்றைச் செய்திருக்கின்றோம் எனக் காட்டிக்கொள்வதற்கான ஒரு உத்தியாகவே இந்த இரண்டு செயற்பாடுகளயும் சிறிலங்கா இப்போது முன்னெடுத்திருக்கின்றது. “மறப்போம்; மன்னிப்போம்” என்ற ரணலின் அழைப்பைத் தமிழர் தரப்பு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. ஆனால், அதிகாரப்பரவலாக்கலை உள்ளடக்கிய அரசியலமைப்புத் திருத்தம் என்ற நாடகத்தை அரசாங்கம் இப்போது அரங்கேற்றுகின்றது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதில் பிரதான பாத்திரம் ஒன்றை ஏற்கின்றது.
இது ஜெனீவாவுக்காக அரங்கேற்றப்டும் ஒரு நாடகம் என்பதைத் தெரிந்துகொண்டுதான் கூட்டமைப்பின் தலைமை இதில் பங்கேற்கிறதா அல்லது, சிறிலங்கா அரசாங்கம் உண்மையாகவே தீர்வொன்றைத் தந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் கூட்டமைப்பின் தலைமை இதில் பங்கேற்கிறதா என்ற கேள்விக்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். தெரிந்துகொண்டே பங்கேற்றால், அது நிச்சயமாக சிறிலங்கா அரசைப் பாதுகாப்பதற்கான ஒரு செயற்பாடு. தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்றால், வரலாற்றிலிருந்து அவர்கள் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டும்.
பல கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் விடயங் களையாவது உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் அரசமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இந்த உத்தேச அரசமைப்பு மாற்றத்தில் இடம்பெறக்கூடிய விடயங்களைப் பரிந்துரைப்பதற் காக நான்கு பேர் கொண்ட குழுவும் அவசரமாக நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
இந்த நால்வர் குழுவில் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ராஜித சேனாரத்ன, சரத் அமுனுகம, டிலான் பெரேரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மைத்திரியையும், ரணிலையும் கடந்த வாரத்தில் சந்தித்த சம்பந்தன் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே வெள்ளிக்கிழமை உயர்மட்டச் சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு உரையாற்றிய சம்பந்தன், புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் அவசியத்தை விவரித்தார். இலங்கை சர்வதேச சமூத்துக்கு வழங்கிய உறுதிமொழி பற்றி எல்லாம் விளக்கிய அவர், புதிய அரசமைப்பு உருவாக்கம் இடம்பெறாவிட்டால் நேரக்கூடிய எதிர்விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். அடுத்து அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எந்தெந்த விடயங்களை அரசமைப்பில் மாற்றுவதற்கு ஓரளவு இணக்கம் காணப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு அவற்றைச் சமர்ப்பிப்பதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நியமிப்பது எனத் தீர்மானினிக்கப்பட்டது. அதையடுத்தே நால்வர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு உடனடியாகக் கூடி இந்த விடயங்களை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்றும் – மீணடும் இந்த உயர் மட்டக் கூட்டத்தை அடுத்த வாரத்தில் கூட்டி அரசமைப்பு மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வது எனவும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
“நல்லாட்சி” என்ற பெயரில் மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. தமிழர்களின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஆட்சி அது. பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொண்டுவரப்போவதாக அவர்கள் கொடுத்த வாக்குறுதியை ஏற்று தமிழர்கள் அதற்கு வாக்களித்தார்கள். அந்த ஆட்சி இப்போது அதன் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்த தேர்தலை இலக்கு வைத்தே காய்களை நகர்த்தி வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள்தான் உள்ளன. நான்கு வருடங்களில் கொண்டுவரப்படாத தீர்வையா “நல்லாட்சி”(?) இப்போது கொண்டுவரப் போகின்றது?
ஜெனீவாவில் நெருக்கடிகள் எதிர்கொள்ளப்படும் போது இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுவது சிங்கள அரசாங்கங்களின் வழமை. “அதிகாரப் பரவலாக்கல் மூலம் தீர்வைக் காண்பதற்கு உயர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என்ற தகவலை மட்டும் ஜெனீவாவில் அரசாங்கம் சொல்லப்போவதில்லை. அதற்குக் கால அவகாசம் தேவை என்பதையும் அங்கு கூறப்போகின்றது. மேலும் இரண்டு வருட அவகாசத்தைப் பெறுவதற்கு இதுவும் அவர்களுக்குப் பலம் சேர்க்கும்.
சிங்கள தேசியவாதத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசாங்கம் இவ்வாறுதான் செயற்படும். அதில் ஆச்சரிப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதில் பங்கேற்பதுடன், உயர் குழுவில் சுமந்திரனும் இடம்பெற்றிருப்பது சர்வதேசத்துக்குக் கொடுக்கப்போகும் செய்தி என்ன?
“அரசாங்கம் உண்மையாகவே தீர்வுக்கு முயற்சிக்கிறது. அதனால்தான் தமிழ் மக்களின் பிரதான கட்சியான கூட்டமைப்பு அதில் பங்கேற்கின்றது” என்ற கருத்தே சர்வதேசத்துக்குக் கொடுக்கப்படுகின்றது. இது ஜெனீவாவில் அரசாங்கத்தைப் பாதுகாக்கும். கூட்டமைப்பும் தம்முடன் நிற்பதாகக் காட்டிக்கொள்வது சிறிலங்காவுக்கு நிச்சயமாகப் பலம் சேர்க்கும். ஆக, கூட்டமைப்பு சிறிலங்காவின் நலன்களைப் பாதுகாக்கின்றதா? தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கின்றதா?