ஜெனீவாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ம.கஜன். ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைகளை வெளிப்படுத்தும் கண்காட்சிகளை நடத்துவது அவருடைய வழமை. ஜெனிவா மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஜெனிவா வளாகத்தில் அவர் வைத்திருக்கும் புகைப்பட கண்காட்சியை பார்த்து செல்ல தவறுவதில்லை. இந்த முறையும் தன்னுடைய கண்காட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
அந்த வேலைகளில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ள நிலையில் அவர் தந்துள்ள நேர்காணல்;
கேள்வி : இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித படுகொலைகளை ஒவ்வொரு வருடமும் காட்சிப்படுத்தல் இருந்தீர்கள் இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு பிறரிடம் அவ்வாறான வரவேற்பு கிடைக்கிறது?
கடந்த 71ஆண்டுகளாக சிறீலங்காவின் மாறிமாறிவந்த சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வன்பறிப்புக்களுக்கும் இனப்படுகொலைக்கும் பாலியல்வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வரலாற்று புகைப்பட சாட்சியங்களை 2013ல் இருந்து இங்கு காட்சிப்படுத்தி வருகின்றேன்.
இதை வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் பார்க்கின்றார்கள்.அதில் பலர் இதை பற்றிய விளக்கத்தை கேட்டுத்தெரிந்துகொள்கின்றார்கள்.அத்தோடு இதை தொடர்ந்து இடைவிடாது செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
உலக விடுதலைப்போராட்டங்களில் மிக நீண்ட காலம் இவ்வாறு தொடர்ந்து செய்யப்பட்ட பரப்புரைகள் போராட்டங்கள் விடுதலைக்கு கைகொடுத்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.ஒரு கறுப்புக்கொடியை காட்சிப்படுத்தும் இடத்தில் தொங்கவிடுமாறும் அதனால் வெளிநாட்டவர்களின் கவனம் ஈர்க்கப்படும் எனவும் அவர்கள் எனக்கு தெரிவித்துள்ளார்கள்.
இஸ்ரேல் நாட்டுக்கான போராட்டத்தின்போது இவ்வாறு ஒரு பெண் அங்கு யூதர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை புகைப்படங்களை பல நாடுகளில் காட்சிப்படுத்தியிருந்ததாகவும் அந்த இடங்களில் அவர் ஒரு உண்டியலை வைத்ததாகவும் அதில் பார்ப்பவர்கள் போடும் பணத்தை கொண்டே அடுத்தடுத்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தனது தேசத்துக்கான விடுதலைப்பயணத்தை அவர் மேற்;கொண்டதாகவும் எனக்கு பார்வையிட வந்த வெளிநாட்டினர் தெரிவித்தனர்.
அவ்வாறு வந்தவர்களில் பலர் எனக்கு சிறு நிதி தர முன்வந்தனர் ஆனால் நான் அதை பெற்றுக்கொள்ளவில்லை.காரணம் ஈழத்தமிழர்கள் வெளிநாட்டவர்களிடம் பிச்சையெடுத்து போராட்டம் நடத்துகின்றார்கள் என்ற பெயர் வரக்கூடாது என்பதற்காக அதை நான் செய்யவில்லை.
ஆனால் பொருளாதாரம் என்பது போராட்டத்திற்கு அவசியம்.இதுவரை இந்தப் புகைப்பட சாட்சியங்களை பிரான்சிலும் ஜெனிவா முன்றலிலும் வைத்துள்ளேன்.இனி வேறு பல நாடுகளுக்கு இந்த ஊர்தி மூலம் இதை கொண்டு சென்று அந்தந்த பாராளுமன்றங்கள் மாநில மற்றும் நகரசபைகளின் முன் வைக்கவுள்ளேன்.அதற்கு நிதி என்பது அவசியம்.இந்த பயணம் தொடரவேண்டுமாயின் நிதியுதவி அவசியம் அதை செய்ய புலம் சொந்தங்கள் முன்வரவேண்டும்.
தாயகத்தில் அச்சுறுத்தல் இனஅழிப்பு கடத்தல் வாழமுடியாது என்ற காரணத்தை காட்டியே புலம்பெயர் நாடுகளுக்கு அகதியாக பலர் வந்தனர்.ஆனால் வந்த நோக்கத்தை மறந்து சுயநலவாழ்வுக்குள் நுழைந்து சொத்துச்சேர்ப்பது.ஊரில் காணிவாங்குவது.விடுமுறையில் ஊர் சென்று சடங்குகள் செய்வது என்ற நிலையாகிவிட்டது.எனவே அவ்வாறானவர்கள் தாயகத்துக்காக இவ்வாறு தொடர்ந்து ஜனநாயகவழிப்போராட்டங்களில் ஈடுபடும் மனிதர்கள் பற்றியும் தயவு செய்து சிந்தித்து உதவ முன்வரவேண்டும்.
கேள்வி; சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிறகு எழும் இப்போது ஜெனிவாவுக்கு வருவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கண்காட்சியில் இடம்பெறும் பகுதிகள் வந்திருக்கிறார்கள். இங்கு வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர்களுடைய பிரதிபலிப்புகள் காரணமாக இருந்திருக்கிறது?
அவர்கள் இதை வேடிக்கையாக வந்து நின்று பார்ப்பதுண்டு.அத்துடன் இதை கிண்டலடிப்பதும் உண்டு.சிலவேளைகளில் புகைப்படங்களை பார்த்து அதை காணொளி புகைப்படங்களாக பதிவு செய்து அதற்கு பின்னணியாக இவை அனைத்தும் விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் என திரிபுபடுத்த முனையும் சந்தப்பங்களை கண்டுள்ளேன்.
மனிதாபிமான அடிப்படையில் வந்து இதை மிக அரிதாகவே ஒரு சில சிங்கள பிரசைகள் படுகொலை நடந்த இடம் காலங்கள் பற்றி திருத்தமான விளக்கங்கள் சொல்வதுண்டு.
கேள்வி: சிங்கள கடும்போக்காளர்கள் இது தொடர்பில் உங்களுடன் ஏதாவது சந்தர்ப்பத்தில் முரண்பட்டு இருக்கின்றார்களா?
உண்டு.ஜெனிவா மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர்களின் போது சிறீலங்கா சார்பில் வருபவர்களின் பெரும்பாலானவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போரில் நேரடியாகவோ அல்லது மறைமுகவேலைகளிலோ இருந்தவர்கள்.குறிப்பாக ஓய்வுபெற்ற படையுயர் அதிகாரி பிரிகேடியர் வீரசேகர தலைமையில் வரும் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடரின் பக்க அரங்குகளிலும் பிரதான அரங்குகளிலும் தமிழர்கள் சார்பில் கருத்து வைக்கின்றவர்களோடும் அவர்களை அழைத்து வருகின்றவர்களோடும் முரண்படுவது உண்டு அவ்வாறு கடந்தகாலத்தில் தமிழக ஈழ உணர்வாளர் மதிமுக தலைவர் வைகோ அவர்களை அழைத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஒரு சந்தர்ப்பத்தில் எனது இந்த புகைப்பட சாட்சிய கொட்டகைக்கு வந்த வீரசேகர என்னை பார்த்து நீங்கள் எந்த நாடு எனக்கேட்டார் நான் தமிழீழம் என்றேன்.தமிழீழம் அது எங்க இருக்கு என கேட்டார் நான் தமிழீழம்தான் என்றேன்.தமிழீழத்தில் எந்த இடம் என்றார் முல்லைதீவு என்றேன் அங்கே அவர்கள் என்னுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்.
கேள்வி: மிகவும் முக்கியமான ஒரு இடத்தில் அதாவது மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள மண்டபத்திற்கு எதிரே உள்ள வளாகத்தில் இந்த கண்காட்சியை வருடங்களாக நடத்துவீர்கள் இதற்கு அனுமதி பெறுவதில் உங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுவதில்லை யா?
அனுமதி வழங்கவேண்டியது இந்த நாட்டுச்சட்டத்தில் உண்டு.ஆனால் சர்வதேச விசாரணைக்கு புலத்திலும் நிலத்திலும் தமிழகத்திலும் தமிழர் தரப்பு கோரிவந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலத்தில் உள்ள சில தமிழர் சார் அமைப்புக்களின் ஆதரவோடு உள்ளகவிசாரணை என்ற ஒன்று சிறீலங்கா அரசுக்கு சாதகமாக திணிக்கபட்டபின் சில நெருக்குவாரங்கள் ஏற்பட்டன.எவ்வாறெனில் இரத்தம் வழியும் புகைப்படங்கள் குழந்தைகளின் படுகொலைப்புகைப்படங்கள் வைக்கக்கூடாது இதுபோன்றதான அளுத்தங்களும் புகைப்படங்களை கொட்டகைக்குள் மட்டுமே வைக்கவேண்டும்.வெளியில் காட்சிப்படுத்தக்கூடாது.வாசலில் மனத்தைரியம் உள்ளவர்கள் மட்டும் பார்வையிடலாம் என எழுதித் தொங்கவிடவேண்டும் போன்ற மாற்றங்களுக்கு அழுத்தம் பிரயோகித்தார்கள்.
கேள்வி : ஜெனிவாவில் இருக்கக்கூடிய தமிழர்கள் மற்றும் ஐரோப்பா வாழ் தமிழர்கள் உங்களுடைய இந்த முயற்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவை தருகின்றார்கள்?
இந்தக்கேள்விக்குரிய பதில் கவலைக்குரியது.வெளிநாட்டவர்கள் வந்து பார்க்கின்ற அளவுக்கு ஈழத்தமிழர் வரலாற்று அவலங்களை புலம்பெயர் தமிழர்கள் வந்து பார்ப்பது குறைவு.நான் காட்சிப்படுத்தும் இடத்திற்கு முன்பாகவே அதற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்பதுபோல போகின்ற ஈழத்தமிழர்களும் இருக்கின்றார்கள்.அதே வேளை நெருங்கி வந்து நின்று நலன்விசாரித்து என்ன உதவி வேண்டும்.எவ்வாறான ஆதரவு வேண்டுமென கேட்கும் ஈழத்தமிழர்களும் பலர் இருக்கின்றார்கள்.நான் இம்முறை புகைப்பட ஆதாரங்கள் இனப்படுகொலை சாட்சியம் பொறிக்கபட்டு கொண்டுவந்துள்ள ஊர்தி கூட ஒரு புலம் ஈழத்தமிழர் வாங்கிதந்து உதவியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.ஆயினும் தனியொருவனாகவே இந்தப்பயணத்தை ஏழு ஆண்டுகளாக முன்னெடுத்துச்செல்கின்றேன்.
எமது விடுதலைப்போராட்ட பயணம் தேக்க நிலைக்கு காரணமே இவ்வாறு தனித்துப்போயிருப்பதுதான் நிலத்திலும் புலத்திலும் ஏன் தமிழகத்திலும் கூட தமிழின விடுதலை தொடர்பில் ஒத்தகருத்து இன்றி சிதைவுற்று கட்சிபேதங்களுடன் அமைப்பு பேதங்களுடனும் இருப்பதே காரணம்.இந்த நிலை இனியேனும் அவசரமானதும் அவசியமானதுமாக மாற்றத்துக்கு உள்ளாகவேண்டும்.
ஓட்டுமொத்த ஈழத்தமிழர்களின் விடயம் தொடர்பில் அரசியல் ரீதியாக ராஜதந்திர தலைமை வகிக்கவும் கருத்துக்களை கூறவும் என ஒருங்கிணைக்கபட்ட ஒரு அமைப்பு உருவாகவேண்டும்.இந்த அமைப்பில் தமிழின விடுதலையில் அக்கறை கொண்ட அனைவரும் பழைய கசப்புணர்வுகள் கருத்து பேதங்கள் கடந்து ஒன்றிணைய வேண்டும்.
ஆரம்பகாலத்தில் தமிழீழம் என்றே ஒரு நோக்கத்துடன் பல்வேறு இயக்கங்கள் உருவாகி போராடின அதில் பலர் உன்னத இலட்சியத்துக்காக உயிர்கொடுத்துள்ளார்கள்.காலப்போக்கில் தலைமைகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகள்.அன்னிய சக்திகளின் பிரித்தாளும் தந்திரம் என்பவற்றால் தமிழரின் பலம் சிதைக்கபட்டு அநியாயமான உயிரிழப்புக்களும் நடந்தேறிவிட்டன.இப்பொழுது முள்ளிவாய்க்கால் வரை இருந்த ஆயுதப்போராட்ட பலம் இல்லாத நிலையில் ஜனநாயக பலம் என்பது அவசியம் அதற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழகத்தையும் சேர்த்து ஒரு யாப்பு வரையறையுடன் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பு அமைய வேண்டும்.அதன் ஊடாகவே ஈழத்தமிழர்களின் தீர்மானங்கள் எடுக்கப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதுமாக உருவாக்கப்படவேண்டும் என்பதே என தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றது.பாதை மாறிப்போனவர்களும் இதய சுத்தியோடு மண்ணுக்காக பணிசெய்யும் ஒரு சந்தர்ப்பத்தை காலத்தின் தேவை கருதி ஏற்படுத்தவேண்டுமென கருதுகின்றேன்.
நன்றி-கனடா ஈழமுரசு